இஸ்ரேல் மோசாட்

இஸ்ரேல் மோசாட்

ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கு, செங்கடல் என வருங்காலங்களில் பல யுத்தங்களுக்கு பிரித்தானியா தயார்! பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப்ப் போர் முழக்கம்! மக்கள் பொருளாதார நெருக்கடியில் சுகாதார நெருக்கடியில் திண்டாட்டம்!!!

“ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கு, செங்கடல் என வருங்காலங்களில் பல யுத்தங்களுக்கு பிரித்தானியா தயார்” என காலனித்துவ மிடுக்குடன் பிரித்தானியா யேமன் மீது தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்தி நடத்தப்பட்ட பாராளுமன்ற விவாதத்திலேயே பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப் இன்று ஜனவரி 15, போர் முழக்கமிட்டுள்ளார்.

We're running out of patience': Defence Sec Grant Shapps warns Iran to stop  Houthi... - LBC

ஆளும் கட்சியான கொன்சவேற்றிவ் கட்சியும் எதிர்க் கட்சியான தொழிற்கட்சியும் யேமர் மீதான தாக்குதலை ஆதரித்த நிலையில், அடுத்த வருடம் தேர்தலை எதிர் நோக்கும் இரு கட்சிகளும் கொள்கை வேறுபாடு இன்றி போர் முழக்கம் செய்து, போர்களை உற்பத்தி செய்யவும் ஊக்குவிக்கவும் ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க – பிரித்தானிய ஆளும் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகள் சரிகின்ற போது ஏதாவது காரணத்தைக் கண்டுபிடித்து யுத்தத்திற்குச் செல்வது இது முதற்தடவையல்ல. ஈரானிய சார்புடைய யேமன் குர்த்திஸ் போராளிகளையும் மக்களையும் அழிக்க சவுதி அரேபியா மேற்கொண்ட யுத்தத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஆயுதங்களை வாரி இறைத்தனர். அந்த நாட்டை இவர்கள் ஏற்கனவே சீரழித்த அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியாவின் பட்டியலில் சேர்த்தனர்.

Yemen | History, Map, Flag, Population, Capital, & Facts | Britannica

இப்போது யேமன் அடுத்த அழித்தலுக்கு உரிய இலக்காக மாறியுள்ளது. யாசீர் அரபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலமிழக்கச் செய்ய இஸ்ரேல் மோசாட்டினால் வளர்த்து விடப்பட்ட ஹமாஸ் தற்போது வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல் இஸ்ரேல் மீது பாய ஆரம்பித்து ஒக்ரோபர் 7இல் இஸ்ரேலை கதிகலங்க வைத்தது. 1200 குடியேற்றவாசிகள் நிராயுத பாணிகளான மக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகின்றது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் பெரும்பாலும் சிறார்கள் பெண்கள் என கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் எண்ணிக்கை 30,000த்தை எட்டுவதாக பிரித்தானிய பாராளுமன்ற விவாதத்தில் முன்னாள் தொழிற்கட்சித் தலைவரான ஜெரிமி கோபின் இன்று ஜனவரி 16 தெரிவித்தார்.

யேமனின் குத்திஸ் இராணுவம் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை யுத்தத்தை நிறுத்தாவிடில் செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் அல்லது இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல்களைத் தாக்குவோம் என்று எச்சரித்ததுடன், சில பல தாக்குதல்களையும் நடத்தி இருந்தனர். இதனால் செங்கடலூடாக சரக்குக் கப்பல்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கப்பல்கள் ஆபிரிக்க கண்டத்தைச் சுற்றி பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது. உலக வர்த்தகத்தில் 12 வீதமான சரக்குக் கப்பல்கள் செங்கடல் வழியாகவே பயணிக்கின்றன. தற்போது ஒரு கொள்ளளவுப் பெட்டியின் பயணச் செலவீனம் 750 பவுண்களில் இருந்து 3250 பவுண்களாக அதிகரித்துள்ளது. மேலும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பொருட்கள் விலையேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா கூட்டுத் தாக்குதலால் அதிரும் ஏமன்! - கனடாமிரர்

அமெரிக்க – பிரித்தானிய யுத்த ஆர்வம் மத்திய கிழக்கில் அமைதியின்மையை மேலும் அதிகரித்துள்ளது. யேமனின் குத்திஸ் படைகள் அமெரிக்க – பிரித்தானிய – இஸ்ரேலிய படைபலத்தோடு ஒப்பிடுகையில் மிகப்பலவீனமான படைகள். ஆனால் அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அத்தோடு உக்ரைனில் யுத்தம் முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் பிரித்தானியாவும் – அமெரிக்காவும் மிகத் தீவிரமாக உள்ளனர். பல பில்லியன் டாலர்களை இறைத்து உக்ரைன் மக்களையும் இளைஞர்களையும் பலிகொடுத்து ரஸ்யாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் தேர்தலில் தங்கள் ஆளும் குழுமம் வெற்றி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர். அதற்காக கூலிப்படைகளும் உக்ரைனில் இறக்கப்பட்டுள்ளனர்.

 

இதுவரை யுத்தத்தில் இறங்காத சீனாவை நோக்கியும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப் போர் முழக்கமிட்டுள்ளார். பிரித்தானிய ஊடகங்களும் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் போர் முழக்கத்துக்கு ஒத்து ஊதி வருகின்றனர். அமெரிக்க, பிரித்தானிய மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு பண உதவியும் இராணுவ உதவியும் வழங்க மற்றைய உலக நாடுகள் இந்தியா நீங்கலாக அனைத்தும் காசா படுகொலைகளை மிக வன்மையாகக் கண்டித்து வருகின்றன. வெள்ளையினத் துவேசத்தால் போராடி மீண்ட தென் ஆபிரிக்கா ஒருபடி மேலே சென்று சர்வதேச நீதி மன்றத்திடம் காசாவின் படுகொலையை நிறுத்தும்படி கோரி உலகின் கவனத்தையும் தலைமைத்துவத்தையும் நிரூபித்துள்ளது.

 

உலகின் பல பாகங்களிலும் தங்களுடைய அரசியல் நலன்களுக்காக தலையீடு செய்து அந்நாடுகளை அரசியல் பொருளாதார ரீதியாகச் சீரழித்த அமெரிக்க – பிரித்தானியக் கூட்டு பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தஞ்சம் கோரி வருபவர்களை இனவாதத்துடன் நடத்துவதுடன் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கவும் மறுக்கின்றனர். அந்தந்த நாடுகளில் அமெரிக்கா – பிரித்தானியா தலையீடு செய்யாமல் இருந்திருந்தால் அம்மக்கள் இங்கு அகதியாக வருவதற்கு எந்தத் தேவையும் இருந்திருக்காது. மேலும் கரீபியன் நாடுகளில் இருந்து தங்கள் தேவைகளுக்காக அழைத்து வரப்பட்டவர்களை அவர்களது இறுதிக் காலத்தில் – வின்ரஸ் ஜெனரேசன் – திருப்பி அனுப்பவும் அடம்பிடிக்கின்றனர். அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகளையும் கொடுக்க மறுக்கின்றது இனவாத கட்டமைப்புடைய பிரித்தானிய உள்துறை அமைச்சு.

பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம்? ஆதரவை குவிக்கும் ரிஷி சுனக், போரிஸ்  ஜோன்சன்: முந்துவது யார்? - லங்காசிறி நியூஸ்

குடித்து வெறித்து யுத்தத்திற்கு வாரி வழங்கிய முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தற்போதைய பிரதமர் ரிஸி சுனாக் கோவிட்டில் தங்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதே 20 பில்லியன் டொலரை லஞ்சத்தில் காணாமல் ஆக்கியவர்கள். பில்லியன் கணக்கில் பெரி சேவை நடத்தாத நிறுவனங்களுக்கு அதை நடத்துவதற்கே எண்ணியிராத நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்து மாட்டிக்கொண்டனர். இப்போது யுத்தங்களை வரவழைத்து கொள்ளை லாப மீட்டும் நிறுவனங்களுக்கு துணைபோகின்றனர் என்ற அச்சமே பிரித்தானிய மக்களிடம் உள்ளது.

 

பிரித்தானிய சுகாதார சேவைகள் வரலாறு காணாது கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்கள், ஆசிரியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். சம்பள உயர்வுப் போராட்டங்கள் அதிகரித்துள்ளது. நடுத்தர குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு தள்ளப்படுகின்றனர். மாணவர்கள் பட்டினியோடு பாடசாலை வருகின்றனர். உள்ளுராட்சி மன்றங்கள் வழங்கும் அடிப்படைச் சேவைகள் ஒன்றன் பின் ஒன்றாக குறைக்கப்படுகின்றது அல்லது நிறுத்தப்படுகின்றது. தபாலக பொறுப்பாளர்கள் அப்பாவிகள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு 20 வருடங்களாகியும் அவர்களுக்கு நியாயம் வழங்க பிரித்தானியா தயாராகவில்லை. பொய்க் குற்றச்சாட்டுக்களால் தண்டணை பெற்ற பலர் குற்றவாளிகளாகவே இறக்கின்றனர். இவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை. பிரித்தானியா யுத்தத்தைத் தூண்டுவதிலும் ஏனைய நாடுகளில் மக்களைக் கொல்வதிலும் காட்டும் ஆர்வத்தை தன்னுடைய மக்களுடைய வாழ்க்கையை அவர்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை சீரமைப்பதில் காட்டவில்லை.  அதிகார வெறியும் யுத்த வேட்கையும் தான் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் உள்ளது. அவர்களிடம் எவ்வித மனிதத்துவப் பண்புகளும் கிடையாது. அமெரிக்க – பிரித்தானிய கூட்டு உலகத்தின் அமைதியின்மைக்கான முக்கிய காரணிகளாக மாறியுள்ளனர். அப்பாவிப் பிரித்தானிய மக்களின் பெயரில் இந்தக் குடிகாரக் கும்பல் சதிராடுகின்றது.