இஸ்ரேல் – ஹமாஸ்

இஸ்ரேல் – ஹமாஸ்

கொல்லப்பட்டார் ஹமாஸ் இயக்க தலைவர் யஹ்யா சின்வார் !

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

கட்டிட இடிபாடு ஒன்றில் சின்வாரின் உடல் இருப்பதை இஸ்ரேலிய இராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று நேற்று (17.10.2024) கண்டுபிடித்துள்ளது.

கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலிலேயே சின்வார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரபணு சோதனை மற்றும் பல் மாதிரிகளை பயன்படுத்தி சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

யஹ்யா சின்வர், கடந்த வருடம் ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதலின் முக்கிய பின்புலமாக செயற்பட்டவர் ஆவார்.

இந்நிலையில், இது ஒரு ஆரம்பம் மட்டுமே என சுட்டிக்காட்டியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலியர்களை சிறைப்பிடித்து வைத்திருக்கும் காசா படையினரை ஆயுதங்களை கீழே போடும் படியும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பணயக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை திருப்பி அனுப்புபவர்கள் வெளியே சென்று வாழ்வதற்கு இடம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் – இந்தியாவின் நிலைப்பாடு என்ன..?

காஸா விவகாரத்தில் இந்தியா 4 முக்கிய நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் விளக்கியுள்ளார்.

காஸா விவகாரம் குறித்த விவாதம் இன்று (09) ஐ.நா. அவையில் நடைபெற்றது.

 

இதன்போது, காஸா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கிய, ருச்சிரா காம்போஜ்,

 

1. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான சண்டையால் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதங்களை சந்தித்துவிட்டோம். ஏராளமான உயிர்களை அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை இழந்துவிட்டோம். பொதுமக்கள் உயிரிழந்ததை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.

 

2. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது. அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கவும் நிபந்தனையின்றி விடுவிக்கவும் இந்தியா தரப்பில் கோரப்படுகிறது.

3. காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமாக உள்ளது. மேலும் சீரழிவை தவிர்க்க, காஸா மக்களுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும்.

 

4. பாலஸ்தீன மக்கள் தங்களுக்கான சுதந்திர நாட்டில் சுதந்திரமாக வாழ வழிசெய்யும் விதத்திலான நேரடி சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்த அனைத்து உறுப்பு நாடுகளும் செயலாற்ற வேண்டும் என, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் கூறினார்.

 

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு ஒக்டோபா் மாதம் 7 ஆம் திகதி ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.

 

 

மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

 

இதனைதொடர்ந்து, அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸா மீது இஸ்ரேலின் படையெடுப்பால் இதுவரை 32,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனா்.

 

இஸ்ரேல் – காசா போர் ஆரம்பித்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளபோதிலும், உயிரிழக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

 

மேலும், பசி பட்டினியால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.