இ.போ.ச

இ.போ.ச

யாழ்ப்பாணத்தில் தொடரும் அரச பேருந்து சாரதிகளின் கவனயீனமான செயற்பாடு – பாடசாலை மாணவன் விபத்தில் பலி !

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிாிழந்துள்ளார்.

 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் குறித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

 

சம்பவத்தில் கல்வி பொதுத்தராதர உயா்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடா்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் சாரதிகளின் கவனயீனத்தால் A9 சாலைகளில் அண்மையில் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஓடிக்கொண்டிருக்கும் போதே பேருந்தில் இருந்து தனியே கழன்று சென்ற சில்லு – பயணிகளை கொலை செய்ய இ.போ.ச புதிய முயற்சி!

நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்கச் சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கும்போதே கழன்று ஓடியது. எனினும் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகிய சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குறிய பல பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதும் – பேருந்தின் சாரதிகள் மது அருந்தி வாகனம் ஓட்டுவதும் – தொலைபேசி பேசிக்கொண்டு வாகனங்களை செலுத்துவதும் – பாதையில் சரியான திசைகள் செய்பவர்களை இடித்து விபத்துக்கு உள்ளாக்குவதும் என்று எந்தளவு தூரத்துக்கு முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி இலங்கை போக்குவரத்து சபை இயங்கிக் கொண்டிருக்கின்றது.

பயணத்தின் போது  இரண்டு சில்லுகள் தனியே கழன்று செல்லும் அளவிற்கு பயணிகள் தொடர்பில் கிஞ்சித்தும் அக்கறை காட்டாது சாரதிகள் செயற்படுவதும் – இதனை கண்டிக்காது இ.போ.ச உயர்அதிகாரிகள் இருப்பதும் உண்மையிலேயே வெட்கக்கேடானது. தனியார் பேருந்துகளில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகளை மக்கள் அதிகம் நாடுகின்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சபை கூறிய பேருந்துகளில் சாரதிகளின் அசமந்த போக்கு பயணிகளின் உயிர் தொடர்பான நிலையை ஆபத்துக்குள்ளானதாக மாற்றி விடுகின்றது.

பேருந்தில் பயணச்சீட்டை ஒழுங்காக எடுத்து விட்டோமா என அடிக்கடி பேருந்தில் ஏறி சோதனை செய்து அதன் மூலமாகவும் மக்களிடமிருந்து மீதியாக உள்ள பணத்தையும் எடுத்துக் கொள்ளும் இ.போ.ச அதிகாரிகளே தயவு செய்து பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடமாகாண ஊழியர்களின் திடீர் போராட்டங்களால் பாதிக்கப்படும் மக்கள் – சொந்த விருப்பு வெறுப்புக்களால் தரமிழந்து போகும் போக்குவரத்து சேவை !

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ் . சாலை ஊழியர்கள் நேற்றுத் திங்கட்கிழமை காலை முதல் பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று வடக்கு மாகாணம் முழுமையும் மேற்கொள்ளப்பட்டு அனைத்து இ.போ.ச பேருந்துகளும் பணியில் இருந்து விலகியுள்ளன.

சரி ஏன் இந்த பணிப்புறக்கணிப்பு..?

வசாவிளான் பகுதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் மோதியதில் மாணவன் ஒருவன் அண்மையில் காயமடைந்தான்.இதையடுத்து சாரதியொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது . இந் நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

இந்தத் தாக்குதலைக் கண்டித்தே நேற்று முதல்  பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று வடமாகாணம் முழுமையும் இந்த பகிஸ்கரிப்பு விரிவாக்கப்பட்டுள்ளது.

 

இதனால் இன்று காலை முதல் தனியார் பேருந்துகளில் சனநெரிசலான வகையில் மாணவர்களும் – தொழிலுக்கு செல்வோரும் – வேறு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்வோரும் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது முன்பாகவே அறிவிக்கப்பட்டிருந்தால் கூட வேறு ஆயத்தங்களை பலராலும் மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் திடீரென பணிப்பகிஷ்கரிப்பு என அறிவித்தால் சீசன் டிக்கெட்டுகள்களை நம்பி பயணப்படுவோரின் நிலை என்ன..? தனியார் பேருந்துகள் மட்டும் சேவையில் இருந்தால் பெட்ரோல் நெருக்கடியால் உள்ளதே பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது.  அரச பேருந்துகளும் இயங்காவிட்டால் தனியார் பேருந்துகளில்  சன நெருக்கடி எவ்வாறானதாக இருக்கும்..? அந்த கூட்ட நெரிசலில் சிக்கி சென்று வேலைகளை ஊழியர்களால் செய்ய முடியுமா..?

இது தவிர வட மாகாண கடைக்கோடி கிராமங்களுக்கு தனியார் பேருந்துகள் இல்லை. இது தவிர தனியார் பேருந்துகள் தூர இடங்களுக்கு செல்லும் பயணிகளையே அதிகம் ஏற்றுவார்கள். இந்த நிலையில் பிரதான பாதைகளூடாக செல்லும் அரச பேருந்துகளே பல கிராமப்புற பயணிகளுக்கு தஞ்சம். இப்படியிருக்க அப்பகுதியில் இருந்து நகரம் வருவோர் இந்த பணிப்பகிஷ்கரிப்பால் என்ன ஆவார்கள்..?

“நான் பேருந்துக்காக காத்திருந்து அதே இடத்தில் நகரத்துக்கு கத்தரிக்காய்களை கொண்டு செல்ல காத்திருந்த முதியவர் ஒருவரும் நின்றிருந்தார். எதிர்பார்த்த பேருந்து வரவில்லை. தனியார் பேருந்து ஒரு கூட்ட நெரிசலான வகையில் வந்தது. அந்த முதியவர் பேருந்தில் ஏறவில்லை. அவரை ஏற்ற கண்டெக்டரும் விரும்பவில்லை.” என நண்பர் ஒருவர் பேருந்து வளாகத்தில் நின்று விசனப்பட்டுக்கொண்டார்.

இந்த சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பால் அந்த முதியவரின் பலநாள் உழைப்பு வீண். இனிமேல் அவர் ஆட்டோ எதிலாவது தான் நகரம் வர வேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும்..? இவை எதுவுமே யாருக்கும் தேவைையில்லை. இ.போ.ச சேர்ந்த சாரதிகளின் சொந்த விருப்பு – வெறுப்புக்களுக்காக இப்படி நூற்றுக்கணக்கானோர் இன்றைய நாள் முழுதும் பாதிக்கப்படவேண்டும்.

இது தவிர QR முறையில் வழங்கப்படும் 4 லீட்டர் பெட்ரோல் ஒரு கிழமைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நிலை நடைமுறையிலுள்ள இந்த சூழலில் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண ஊழியர்களின் இந்த பணிப்புறக்கணிப்பு அபத்தமானது.

இவை எதனையும் இந்த அரச ஊழியர்கள் கவனத்தில் கொள்வதேயில்லை என்பதே வேதனையான விடயம்.

இ.போ.ச பேருந்து சாரதியின் கவனக்குறைவால் 65 வயது முதியவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி அண்மையில் மரணமடைந்தார். அது போல மதுபோதையில் பேருந்து ஓட்டிய இ.போ.ச சாரதி அண்மையில் புளியங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அண்மையில் கிளிநொச்சியில் இ.போ.ச பேருந்து சாரதியின் அவசரத்தால் ஒரு பாடசாலை மாணவி விபத்துக்குள்ளாகி மரணமடைந்திருந்தார். இப்படியாக இ.போ.ச பேருந்து சாரதிகள் பற்றி ஒரு தொகை முறைப்பாட்டை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவற்றுக்கு ஒரு முடிவு கட்ட இந்த இ.போ.ச வடமாகாண அதிகாரிகளால் முடியாது. எதற்கெடுத்தாலும் பணிப்பகிஷ்கரிப்பு என அறிவித்து விடுகிறார்கள்.

யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதை ஏற்க முடியாது. இ.போ.ச சாரதி தாக்கப்பட்டது கண்டனத்துக்கு உரியதே. அதற்கான தீர்வை நீதிமன்ற நகர்வுகள் ஊடாக மேற்கொள்ளாது அரச அதிகாரிகள் என்பதற்காக பேருந்துகளை இயக்காது விடுவது என்பது மக்கள் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத  வடமாகாண இ.போ.சபையின் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது.

இன்றைய பகிஸ்கரிப்பு போராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இ.போ.ச சபை ஊழியர்களின் ஒரு போராட்ட  பதாகையில் தனியார்  பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக என குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் அரச ஊழியர்கள் என்ற பெயரில் அராஜகம் செய்வது இ.போ.ச ஊழியர்கள் தான்.  தங்களுடைய இஷ்டத்துக்கு திடீர் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள் என்ற சிந்தனையே இல்லாமல் செயற்படுகிறார்கள்.

 

உண்மையிலையே இ.போ.ச சபையினர் மக்களை பற்றி சிந்திப்பவர்கள் என்றால் விரைவாக பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும். உள்ளதே பொருளாதார நெருக்கடி – எரிபொருள் விலையேற்றம் – என பலவற்றாலும் அல்லலுறும் மக்களை இந்த பகிஸ்கரிப்பு போராட்டங்கள் இன்னுமும் பாதிக்கின்றன என்பதை இ.போ.ச ஊழியர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.