ஈயுனிஸ்

ஈயுனிஸ்

ஈயுனிஸ் மணித்தியாலத்திற்கு 125 கி மீ வேகத்தில் பிரித்தானியா மீது தாக்குதல்! மூவர் பலி!! ரஷ்யா அல்ல இயற்கை!!!

பிரித்தானியாவும் – அமெரிக்காவும் உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பிற்கு சகுனம் பார்த்துக்கொண்டிருக்க இன்று காலை முதல் ஈயுனிஸ் புயல்காற்று மணித்தியாலத்திற்கு 125 கிமீ வேகத்தில் பிரித்தானியாவை தாக்கிக் கொண்டுள்ளது. இச்செய்தி எழுதப்படும் வரை லண்டன், இங்கிலாந்து, வட அயர்லாந்து ஆகிய பிரதேசங்களில் மூவர் கொல்லப்பட்டு உள்ளனர். தலைநகர் லண்டனில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் வீசப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்டனர். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஈயுனிஸின் தாக்குதல் மோசமாக இருந்தது. மூன்று தசாப்தங்களுக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரும் புயலாக ஈயுனிஸ் வர்ணிக்கப்படுகின்றது. அதிவேக வீதிகளில் பயணித்த இரு பெரும் லொறிகள் அருகருகே புரட்டிப் போடப்பட்டது. ஈயுனிஸ் புயல்காற்று மணிக்கு 70கிமீ முதல் 122 கிமீ வேகத்தில் நாடு முழுவதும் பரந்த தாக்கத்தைக் கொடுத்துள்ளது.

பிரித்தானியாவில் அம்பர், யலோ, ரெட் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளது. முதற் தடவையாக லண்டன் ரெட் எச்சரிக்கைப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 1,250,000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவற்றில் 750,000 வீடுகளுக்கு மீளிணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 500,000 வீடுகள் இன்றைய இரவை இருளிலேயே களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

லண்டனின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஓற்று அரினாவின் கூரை பிய்த்தெறியப்பட்டு உள்ளது. நூற்றுக்கணக்கான மரங்கள் வீழ்ந்து போக்குவரத்துக்கு பாரிய தடைகளை ஏற்படுத்தி உள்ளது. விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தள்ளாடிய காட்சி காணொலியாக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சில ரெயில் போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டது. வேல்ஸில் விமான, ரெயில் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டதுடன் பாடசாலைகளும் மூடப்பட்டது.

ஈயுனிஸ் எவ்வளவு மோசமான நட்டத்தினை ஏற்படுத்தியது என்ற கணக்கை அரசு கணக்கிட ஆரம்பித்துள்ளது. இவ்வாறான புயல்களுக்கு பிரித்தானியா தயார் நிலையில் இருக்கின்றதா என்ற கேளிவியும் எழுப்பப்படுகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் வாகனப் போக்குவரத்தும் சக்தியும் மின் இணைப்பிலேயே தங்கியுள்ளதால் மின்வெட்டுக்கள் துண்டிக்கப்படும் பட்சத்தில் அதனை துரிதகெதியில் சீரமைக்க வேண்டிய அவசரமும் அவசியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயற்கை அழிவுகள் மேற்கு நாடுகளிலும் பரவலாக நடைபெற ஆரம்பித்துள்ளது. வெள்ளம், புயல், கோவிட் என்று இயற்கையின் சீற்றத்துக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இருந்தாலும் அதனைவிடுத்து மேலும் அழிவுகளை ஏற்படுத்தும் யுத்த தளபாடங்களுக்கும் இராணுவ விஸதரிப்புகளுக்குமே அரசுகள் முன்னுரிமை தருகின்றன.