ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஈழ விடுதலை போராட்டத்தில் சகோதர படுகொலைகள் மூலம் கொல்லப்பட்ட அனைவருக்கும் சிலை – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்

ஈழ விடுதலை போராட்டத்தில் போராடி உயிர் நீத்த அனைவருக்கும் சிலை வைக்க நடவடிக்கை எடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , இலங்கை அரச படைகளாலும் , சகோதர படுகொலைகள் மூலமும் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக எனும் ஒரு நோக்கத்திற்காக போராட வெளிக்கிட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிலை வைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்போம்.

ஈழ விடுதலைப்போராட்டம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுத போராட்டங்கள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு அதனை மீறியும் காலம் கடந்தும் ஆயுத போராட்டம் சென்றுள்ளது. ஆனாலும் ஈழ விடுதலைப்போராட்டத்தில் போராடிய அனைவருக்கும் தான் சிலை வைப்போம்.

போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒரு பொது தூபி அமைக்கப்பட்டு , ஒரு பொது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு , அந்நாளை விடுமுறை நாளாக அறிவிப்பதற்காக நல்லாட்சி காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்து இருந்தமைக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் வாழங்கியிருந்தாலும் இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் !

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரத்தினை மீளப்பெறுவதற்காக உதய கம்பன்பிலவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்திற்கான தனிநபர் பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக அதிகாரங்களையும் பெற்றுகொள்ளும் வகையில் ஈ.பி.டி.பி. தொடர்ச்சியாக உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது.

எனினும், அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவினால் இந்த தனிநபர் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதிக படிமுறைகளை தாண்டி வரவேண்டியிருக்கின்றது. தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்றே கருதுகின்றேன்.”என்றார்.

வடக்கில் சமூக விரோத செயற்பாடுகளுக்கு துணைபோகும் பொலிஸார்..? – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றச்சாட்டு!

வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஒரு சில வணிகர்கள் சார்ந்தோர் மத்தியில் போதைப் பொருள் கைப்பற்றப்படுவதும் குறித்த பாவனையால் இளைஞர்கள் உயிரிழப்பதும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதும் அதிகரித்து வருகின்றன.

 

இது எமது இளம் சமுதாயத்தை வெகுவாகப் பாதித்து வருகின்றது. இவ்விடயத்தில் பெற்றோர்களும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகின்ற தரப்பினரும் உரிய அக்கறை செலுத்த வேண்டும்.

 

சமூகவிரேத செயல்களில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு நாம் வழங்கும் தகவல்கள் சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிய வருவதோடு அவர்கள் எம்மை தொடர்புகொண்டு அச்சுறுத்தல் விடுக்கும் நிலையும் தற்போது இடம்பெற்று வருகின்றது.

 

இது உண்மையில் சமூகவிரோத செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஏதுவானதான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுப்பதாக அமைந்துள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் கோஸ்டி மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.” – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு !

“யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் கோஸ்டி மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் பேதே அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு இழுபறி நிலைக்கு பலரும் பலதரப்பட்ட கருத்துகள் கூறிவருகின்றனர். ஆனால் அதனை முன்னெடுக்கும் யாழ் மாநகரசபையில் அதிக ஆசனங்களை கொண்டள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் மக்களின் மீது அக்கறை கொண்டு முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அவர்களுக்குள் இருந்த உட்பூசல்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் தமிழரசுக் கட்சியின் பிடிக்குள் இருந்த கட்சிகள் இன்று தனித்தனியாக சென்றுள்ள நிலையில் அவர்களுக்குள் ஒருமித்த தெரிவு இருந்திருக்கவில்லை.

மாநகரின் மீது அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் எமது கட்சியுடன் அதிகார மட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனோ அல்லது அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சி.வி.கே சிவஞானமோ பேசியிருக்க வேண்டும்.

ஆனால் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியோக ஆலோசகருடன் தமது தெரிவான ஒருவரது பெயரை கூறி ஆதரிக்குமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனே பேசியிருந்தார்.

எமது கட்சி ஏற்கனவே தொடர்ந்து கூறிவருது போல மக்களின் நலன்கருதியதாக உள்ளூராட்சி மன்றங்களை யார் ஆட்சி செய்ய முன்வருகின்றார்களோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொண்டுசெல்ல ஆதரவு கொடுத்துவந்திருந்தோம்.

ஆனால் யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் தொடர்ச்சியாக இருந்துவரும் கோஸ்டி பூசல்களே இன்றைய சூழ்நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

அதேநேரம் ஜனநாயகத்தில் மக்களுக்கு இருக்கின்ற கொஞ்ச நம்பிக்கையும் இவர்களது இவ்வாறான அரசியல் நாகரிகமற்ற கூட்டுச் சுயநலன்களால் கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது  முறைப்படி எமது தலைமையுடன் பேசியிருந்தால் யாழ் மாநகரின் முதல்வர் தெரிவில் இவ்வாறான இழுபறிநிலை ஏற்பட்டிருக்காது என்றார்.