ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்

ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலோடு தொடர்புடைய சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் !

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலோடு தொடர்புடைய சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்று 5 வருட நினைவுதினத்தை முன்னிட்டு சூத்திரதாரிகளை கைது செய்ய கோரி சமூக செயற்பாட்டாளர்கள் ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து காந்தி பூங்காவின் முன்னால் பொதுமக்கள் அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்றுதிரண்டனர்.

‘அரசே கொலையாளிகளை மறைக்காதே’, ‘குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது செய்’, ‘சர்வதேசமே மெனத்தை கலைத்து ஈஸ்ரர் குண்டுவெடிப்பின் நீதியை தா’, ‘வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்’, ‘ஐ.நாவில் வழங்கிய வாக்குமூலம் என்னாச்சு’, ‘5 ஆண்டு கடந்தும் அவலத்துக்கு நீதி இல்லையா?’ போன்ற சுலோகங்கள் ஏந்தியும், கோஷம் எழுப்பியும் சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு சென்றால் உள்நாட்டு யுத்தம் தொடர்பிலும்  தமிழர்கள் சர்தேச விசாரணைகளை கோர வாய்ப்புள்ளதால் சர்வதேச விசாரணை வேண்டாம்.” – மைத்திரிபால சிறிசேன

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு சென்றால் உள்நாட்டு யுத்தம் தொடர்பிலும்  தமிழ் டயஸ்போராக்கள் சர்தேச விசாரணைகளை கோர வாய்ப்புள்ளதால் சர்வதேச விசாரணை வேண்டாம்.” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் இந்தளவுக்கு விவாதம் நடத்தப்பட்ட விடயம் வேறு எதுவும் இருக்காது. இதில் நானே இலக்காக இருக்கின்றேன். தாக்குதல் நடந்த நாள் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துத் தெரிவித்துள்ளேன்.

அதன்போது எனக்குப் புலனாய்வுப் பிரிவோ, பாதுகாப்புத் தரப்பினரோ எனக்கு அறிவிக்கவில்லை. இதனை மக்கள் நம்புகின்றார்கள் இல்லை. நான் தெரிந்துகொண்டே வெளிநாட்டுக்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

இதன்படி நானே பொறுப்புக் கூற வேண்டியவர் என்றும் கூறுகின்றனர். 7 நீதியரசர்களைக் கொண்ட வழக்கு விசாரணையில் எனக்குத் தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கையை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன். நான் 2016 ஆம் ஆண்டு முதல் எனக்குக் கிடைத்த தகவல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபையில் கூறியுள்ளேன். சர்வதேச நாடுகளில் ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல்களை நடத்தும்போது இங்கு இவ்வாறு நடக்க இடமளிக்கக்கூடாது என்று நான் அடிக்கடி பாதுகாப்பு சபையில் கூறியுள்ளேன்.

சஹ்ரானைக் கைது செய்யாமை தொடர்பில் கூறுகின்றனர். அவரைக் கைது செய்யவென அதிகாரிகள் இருக்கின்றனர். அதற்கு ஜனாதிபதி போகப் போவதில்லையே.நான் 2019 ஜனவரியில் நடந்த பாதுகாப்புச் சபையில் சஹ்ரானைக் கைது செய்யாது இருக்கின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளேன்.

அத்துடன் ஒரு வருடமே பாதுகாப்பு அமைச்சு என்னிடம் இருந்தது. கிடைத்து 6 மாதத்திலேயே குண்டு வெடித்தது. இவ்வாறு குண்டு வெடிக்க முன்னர் நான்கு வருடங்கள் என்னிடம் காவல்துறை அமைச்சு இருக்கவில்லை.சம்பவம் நடந்த பின்னர் சஹ்ரானுடன் தொடர்புடைய முழு அமைப்புகளையும் இல்லாமல் செய்துவிட்டேன். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், அதனை அடிப்படையாகக்கொண்டு யுத்தம் தொடர்பிலும் தமிழ் டயஸ்போராக்கள் சர்தேச விசாரணை கோரலாம்.

 

எனவே, சர்வதேச விசாரணை அவசியமில்லை என ஐ.நா. பிரதிநிதியிடம் கூறிவிட்டேன். உள்ளக விசாரணைக்குச் சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் ஐ.நாவிடமும் நாங்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு கேட்கின்றேன். அத்துடன் சிலர் என் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இங்கு விவாதங்களை நடத்தி இன்னும் பணத்தைச் செலவழிக்கத் தேவையில்லை.

 

என் மீது குற்றச்சாட்டை முன்வைத்தவர்களுக்குப் பதிலளிக்கின்றேன். சரத் பொன்சேகாவுக்குப் பீல்ட் மார்ஷல் பதவியை நானே வழங்கினேன். நான் வழங்கியது வேண்டாம் என்றால் அந்தப் பதவியை இல்லாமல் செய்துகொள்ள வேண்டும்.

 

அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்து அவருக்குப் பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கினேன். இந்நிலையில், சில இராணுவ அதிகாரிகள் என்னிடம் அவர் பற்றி கூறுவர்.

 

யுத்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு கிளிநொச்சி வரும் அவர் கொங்கிறீட் பங்கருக்குள் இருப்பார் எனவும், அவர் யுத்தக் களத்துக்குச் செல்லவில்லை எனவும் இராணுவ அதிகாரிகள் சிலர் என்னிடம் கூறியுள்ளனர். நாய் மனித கால்களைக் கடிக்கும்; ஆனால் மனிதன் நாயின் காலைக் கடிப்பதில்லை” என்றார்.

 

“சனல் 4, ராஜபக்ஷக்களுடன் பகை எனக்கூறுவது, உண்மையை மறைக்க எடுக்கப்படும் நடவடிக்கை.” – நாடாளுமன்றத்தில் அனுரகுமார திஸாநாயக்க!

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வியடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிகாரிகள் யாரேனும் கடமைகளை செய்யாவிட்டால் நாடாளுமன்றுக்கு அவர்கள் அறிவித்திருக்க வேண்டும். இதன் பின்னணியில் அரசியல் காரணம் தான் உள்ளது. 2015 இல் இல்லாது போன அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ராஜபக்ஷக்கள் முயற்சித்தார்கள்.

 

மீண்டும் புலிகள் வரப்போவதாகக் கூறினார்கள். ஆனால், 2017 இற்கு பின்னர் அந்தக் கதை அப்படியே மறைந்து விட்டது. இதன் பின்னர், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்தார்கள். சிங்கள மக்களுக்காக கருகலைப்பு கொத்து வழங்கப்பட்டதாகக் கூறினார்கள்.

 

கருக்கலைப்புச் செய்யும் ஆடை உள்ளதாகக் கூறினார்கள். எங்கே இப்போது இவைகள் எல்லாம்.?முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறிவிடுவார்கள் என்றும்கூட பிரசாரம் செய்தார்கள்.

சனல் 4 ஆவணப்படம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?இது தொடர்பாக கேட்டால் ராஜபக்ஷக்களுடன் சனல் 4 விற்கு கோபம் உள்ளதாகக் கூறுகிறார்கள்.

 

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையும் தானே செய்தி வெளியிட்டது. அப்படியென்றால் இந்தப் பத்திரிகையும் இவர்களுடன் பகையில் தானா உள்ளது? நிரூபமா ராஜபக்ஷ தொடர்பாக பண்டோரா ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆவணத்தை வெளியிட்ட சர்வதேச நிபுணர்களும் ராஜபக்ஷவினருடன் கோபத்திலா உள்ளார்கள்?

 

எனவே சனல் 4, ராஜபக்ஷக்களுடன் பகை எனக்கூறுவது, உண்மையை மறைக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“புகலிடக் கோரிக்கைக்காக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல பொய்யான பிரசாரங்களில் என்னுடன் இணைந்து செயற்பட்ட அசாத் மௌலானா ஈடுபட்டுள்ளார்.” – நாடாளுமன்றத்தில் பிள்ளையான் !

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் சனல் – 4 ஊடகத்தில் வெளியிடப்பட்ட காணொளி கண்டு நான் அச்சம் கொள்ளப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், என்னோடும் என்னுடைய அமைப்புடனும் சேர்ந்து பயணித்த அசாத் மௌலான என்பவர் புகலிடக் கோரிக்கைக்காக பல பொய்யான பிரசாரங்களில் இறங்கியிருக்கிறார்.

அவர் எமது அமைப்பிலே இருந்து உத்தியோகபூர்வமாக அனுமதி பெற்று குடும்பத்துடன் வெளிநாடு சென்று ஒரு வருட காலத்தை கடந்த சூழலில் இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி என்பது எங்களுடைய நாட்டுக்கும் எங்களுடைய மக்களுக்கும் கடந்த காலங்களில் எண்ணத்தை செய்துள்ளது என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். அந்த அடிப்படையில் அந்த ஊடகத்தில் வந்த செய்தியை பற்றி அச்சம் கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. அதேவேளை ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாதிகள் தான் செய்தார்கள் என்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரே கூறியிருக்கிறார்.

அதேபோன்று இந்த தாக்குதலுக்கு அந்த அமைப்பு தமது உத்தியோகபூர்வ இணையதளத்தில் உரிமை கோரியிருந்தார்கள்.

இந்த தாக்குதலை எதற்காக செய்தார்கள் என நோக்கத்திற்காக செய்தார்கள் என்று அந்த தகவலை தெரிவித்து இருந்தார்கள்.

 

வெளிநாட்டிலே தஞ்சம் பெற சென்றிருக்கின்ற அசாத் மௌலானா இந்த விடயத்தை மறுபக்கம் திருப்ப நினைப்பதாக நான் நம்புகிறேன்.

எனக்குள்ள அச்சமும் கவலையும் என்னவென்றால் சாகுராமும் அவரிடம் சேர்ந்த ஒரு கூட்டமும் மதத்திற்காக மரணிப்போம் என்று சத்தியம் செய்தவர்கள் என்று சிறையிலும் வெளியிலும் இருக்கிறார்கள். இந்த தாக்குதலின் பின்னணியில் பல சர்வதேச சக்திகள் இருக்கின்றன இவற்றை காப்பாற்றும் முயற்சியாகவே அசாத் மௌலானாவின் நடவடிக்கை என எனக்கு சந்தேகம் இருந்திருக்கிறது

இந்த சந்தேகத்தின் அடிப்படையில் மீண்டும் ஒரு அச்சுறுத்தலான சூழலை ஏற்படுத்த இங்கு முயற்சிக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எங்களிடம் இருக்கிறது.” என்றார்.

 

“ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள்.”- லண்டன் டைம்ஸ் அறிக்கையால் பரபரப்பு !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பின்னனியில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இருந்ததாக லண்டன் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் ஐ.எஸ். அமைப்பு இடையே ஒரு சந்திப்பு 2018 இல் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையை சீர்குலைக்கவும் ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு சதித்திட்டம் தீட்டும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறத்தாக பிரித்தானிய ஊடகமான த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

“கூட்டம் முடிந்தது, சுரேஷ் சாலி என்னிடம் வந்து ராஜபக்சேக்களுக்கு இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் தேவை, அதுதான் கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி” என ஹன்சீர் ஆசாத் மௌலானா கூறுகிறார்.

தாக்குதல் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல, திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் 6 மாதங்களில் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்து கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பிடித்தபோது சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

இவர் இதற்கு முன்னர் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

மௌலானா கடந்த ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி ஐரோப்பிய புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் தனது சாட்சியத்தை முன்வைத்துள்ளார்.

இதேவேளை பெயரிடப்படாத மூத்த அரசாங்க அதிகாரி, இரண்டாவது விசில்ப்ளோயர் தாக்குதல் தரிகளுடன் சாலியின் உறவுகள் பற்றிய மௌலானாவின் கருத்தை ஆமோதித்துள்ளார்.

மேலும் குண்டுவெடிப்புகளுக்கு முன்னும் பின்னும் இராணுவ புலனாய்வு, பொலிஸ் விசாரணைகளை மீண்டும் மீண்டும் தடுத்ததாகவும் கூறியுள்ளார்.

2019ல் ஆட்சிக்கு வந்ததும், விசாரணையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர், விசாரணை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறுகிறார்.

2021 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்ட போதும், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ அதை வெளியிட மறுத்துவிட்டார். மேலும் மௌலானா பல ஆண்டுகளாக ராஜபக்சக்களுக்கு விசுவாசமான அரசியல்வாதியான பிள்ளையானுக்கு உதவியாளராக பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.