சிலிக்கன் வலி பாங்க், சிக்னேர்சர் பாங்க், பெஸ்ற் ரிபப்ளிக் பாங்க், கிரடிஸ் சுவிஸ் அடுத்தது எந்த வங்கி? ஆனால் ரஷ்யாவின் எந்த வங்கியும் சிக்கலில் சிக்கவில்லை!!!
வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது போல் தற்போது வரிசையாக மேற்கு நாடுகளின் வங்கிகள் சரிந்து வீழ்கின்றது. இது வங்கிகளின் வீழ்ச்சி மட்டுமல்ல டொலர் நாணயத்தினதும் அமெரிக்காவினதும் வீழ்ச்சியை கட்டியம் கூறி நிற்கின்றன. முதலாளித்துவத்தின் முதகெலும்பாக இருக்கும் வங்கிகள் முறிந்து வீழ்வது முதலாளித்துவத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும். அமெரிக்கா எப்படியாவது ரஷ்யாவை இல்லாமல் பண்ணுவதற்கு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து, ரஷ்யாவின் எல்லை நாடுகளை நேட்டோவில் இணைத்துக்கொண்டது. அதன் தொடரச்சியாக உக்ரைனையும் நேட்டோவில் இணைக்க முயற்சித்ததை அடுத்து, ரஷ்யா தன் படைகளை உக்ரைனுக்கு அனுப்பி, ரஷ்யர்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்றியது.
நீண்ட காலமாக ஈடாட்டத்தில் இருந்த கிரடிட் சுவிஸ் வங்கி (Credit Suisse) மார்ச் 19 வீழ்ந்து கொண்டிருக்கையில், அதனை அரச மயப்படுத்துவதா என்ற கேள்வி எழுந்த நிலையில், யுபிஎஸ் (UBS) வங்கி கிரடிட் சுவிஸ் வங்கியை இன்று $3.25 billionக்கு வாங்கியதன் மூலம் வீழ்ச்சி தற்போது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அதே சமயம் வங்கி வீழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாமல் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியோபோல் பகுதிக்கு ரஷ்ய அதிபர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மார்ச் 18இல் ரஷ்ய அதிபருக்கு போர்க் குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ‘முடிந்தால் புடுங்கிப் பாருங்கள்’ என்ற தோரணையில் விளாடிமீர் பூட்டின் உக்ரைனின் மரியப்போல் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துவிட்டது என்று தங்கள் சரிந்து விழும் செல்வாக்கை தூக்கி நிறுத்த முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் போர் முழக்கம் இட்டு ‘பொங்கு நேட்டோ’ நடாத்தினர். உக்ரைனை தங்கள் ஆயத தளபாடங்களால் நிறைத்து ரஷ்யாவுக்கு பாடம் புகட்டி, தங்கள் செல்வாக்கை மீளக் கட்டியெழுப்பலாம் என நினைத்தனர். ஆனால் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மண் கவ்வினார். அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அவரைத் தொடர்ந்து ‘உக்ரைனுக்கு போய் போராடுங்கள்’ என்று அறிக்கை விட்ட லிஸ் ரஸ் பிரதமரானார். அவருடைய ஆட்சியும் 44 நாட்களில் கவிழ்ந்தது.
ரஷ்யாவை மண்டியிட வைக்க பொருளாதாரத் தடைகள், வங்கிப் பரிமாற்றங்களில் கட்டுப்பாடுகள், ஏனைய நாடுகளையும் ரஷ்யாவோடு வர்த்தகம் செய்ய தடை விதித்தனர், நிறுவனங்களையும் ரஷ்யாவில் இருந்து வெளியேற நிர்ப்பந்தித்தனர். ரஷ்யா இதுவரை இவையெல்லாவற்றையும் கொசுக்கடியென தட்டிவிட்டு நகர்ந்து கொண்டிருந்தது. ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைந்து சில வாரங்களுக்கு முன் ஓராண்டு ஆன நிலையில் ரஷ்யா குறிப்பிடத்தக்க அளவான பொருளாதார நெருக்கடிகள் எதற்கும் முகம்கொடுக்கவில்லை.
தங்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று செய்த பொருளாதாரத் தடைகள் மற்றும் திருகுதாளங்கள் எல்லாம் சொந்த செலவில் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்த கதையாகியது. உக்ரைன் யுத்தத்தை நேட்டோ நாடுகள் நெய்யூற்றி ஆயதங்களை உக்ரைனில் குவித்து தூண்டிவிட, நேட்டோ நாடுகளில் எரிபொருள், உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையேற்றம் ரொக்கற் வேகத்தில் உயர்ந்தது.
நேட்டோ நாடுகளில் மக்கள் விலையேற்றத்திற்கு எதிராகவும் சம்பள உயர்வு வேண்டியும் வீதிகளில் இறங்கிப் போராடினர். விலையேற்றம் எகிறிக்கொண்டு சென்ற போதும் மக்கள் வேலைக்குச் செல்லவோ மேலதிக வேலைகளைச் செய்யவோ விரும்பவில்லை. அதனால் நிறுவனங்களில் பணி செய்வதற்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இதனைச் சமாளிக்க மக்களுக்கு மேலும் மேலும் நெருக்கடிகளை வழங்கி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதற்காக தொடர்ந்தும் நேட்டோ நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டிவீதத்தை அதிகரித்தன. இதன் மூலமாவது மக்களை கூடுதலாக வேலை செய்ய நிர்ப்பந்தித்தனர்.
ஆனால் நேட்டோ தலைவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வட்டிவீதம் அதிகரித்ததால் வங்கிகள் ஏற்கனவே முதலீடு செய்த இணைப்பு பத்திரங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ஆயினும் அவர்களின் புதிய முதலீடுகளுக்கு கூடிய லாபம் இடைக்கும். மேலும் வங்களின் வரன்முறையற்ற குறுகிய லாபநோக்கம் மட்டும் கொண்ட ஆபத்தான வியாபாரச் செயற்பாடுகளாலும் சில வங்கிகள் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கின. மேலும் அமெரிக்காவின் பிற்கொயின் நிறுவனம் எப்ரிஎஸ் (FTS) திவாலானது போன்றவற்றால் சில வங்கிகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் வங்கிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே எப்போதும் மிக நெருக்கமான உறவும் இருந்து வருவதால் வங்கிகளின் ஊழல் வெளியே பெரும்பாலும் கொண்டு வரப்படுவதில்லை.
இந்தப் பின்னணயில் தான் மார்ச் 10, 2023 அன்று முதலாவதாக சிலிக்கன் வலி வங்கி திவாலானது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சிலிக்கன் வலி வங்கி ஏனைய வங்கிகளின் நிலையை வெளியுலகிற்குக் காட்டிக்கொடுத்தது. அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் உடனடியாக அதன் ஆபத்தையுணர்ந்து 2008 லீமன் பிரதேர்ஸ், ரோயல் பாங்க் ஒப் ஸ்கொட்லன்ட்டுக்கு நடந்தது மீளவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அமெரிக்கா டொலர்களை அச்சிட்டு வங்கிகளைக் காப்பாற்ற பில்லியன் கணக்கில் வங்கிகளுக்கு நிதியை வழங்கியது.
ரஷ்யாவை நொருக்குவோம் உக்ரைனில் இருந்து ரஷ்யாவை விரட்டுவோம் என்ற அமெரிக்க அரசின் ரீல்களை எல்லாம் நம்பிய அமெரிக்கர்கள், வங்கிகள் எல்லாம் ஸ்தீரமாக உள்ளது, வாடிக்கையாளரின் வைப்பீடுகள் பாதுகாக்கப்படும் என்பதை நம்பவில்லை. அமெரிக்க அரசை நம்ப மறுத்து வங்கிகளின் நடைமுறையில் நம்பிக்கையிழந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் வைப்பிட்டிருந்த நிதியை வெளியே எடுத்தனர். 2008இல் வங்கிகளில் நம்பிக்கையிழந்தவர்கள் வங்கிகளுக்கு முன் வரிசையில் நின்று தங்கள் பணத்தை பெற வேண்டியிருந்தது. தற்போது வாடிக்கையாளர்கள் இணைய வங்கி முறைமூலம் பட்டன்களை அழுத்தி தங்கள் பணத்தை மாற்றினர்.
வழமையாக வாடிக்கையாளர்கள் வைப்பிடும் தொகையை வங்கிகள் நிரந்த மூதலீடுகளுக்குப் பயன்படுத்திவிடுவார்கள். நாளாந்த வங்கி நடைமுறைக்கு மொத்த வைப்பீட்டில் 10 வீதம் மட்டுமே சுழற்சிக்கா வைத்திருப்பார்கள். வழமையாக வாடிக்கையாளர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் பணத்தை மீளெடுப்பதில்லை. ஆனால் வங்கி மீது நம்பிக்கையீனம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் எல்லோருமே பணத்தை அந்த விங்கியில் இருந்து மீளப்பெறவே முயற்சிப்பார்கள். சிலிக்கன் வலி வங்கி சிக்கலில் இருப்பதை சில முதலீட்டாளர்கள் மணந்து பிடித்ததும், அது சில மணி நேரங்களுக்குள்ளாகவே வங்கியின் நிதிக்கையிருப்பை வறளச் செய்தது. உடலுக்கு குருதிச் சுற்றோட்டம் எவ்வளவு முக்கியமோ வங்கிகளுக்கு பணச்சுற்றோட்டம் மிக மிக முக்கியம். பணத்தை வைப்பிட்டவர்கள், முதலிட்டவர்கள் தாங்கள் தேவைப்படும் போது பணத்தை மீளப்பெற முடியாவிட்டால் – வங்கியின் கையிருப்பில் பணம் இல்லாவிட்டால் அந்த வங்கி மரணத்தைச் சந்திக்கும். அதுவே சிலிக்கன் வலி வங்கிக்கு நிகழ்ந்தது.
இதுவொரு டொமினோ அபக்ற் (domio effect). மார்ச் 10இல் சிலிக்கன் விலி வீழ்ந்ததும், அடுத்து சிக்னேச்சர் பாங்க், அடுத்து பெஸ்ற் ரிபப்ளிக் பாங், நாளை காலை (மார்ச் 20) காலை பங்குச் சந்தைகள் திறப்பதற்கு முன் கிரடிட் சுவிஸ் பாங்கை பாதுகாக்க சுவிஸ் அரசும் நேட்டோ நாடுகளும் கடும் முயற்சியில் இறங்கியது. கிரடிட் சுவிஸை அரசுடமையாக்கி வைப்பீட்டாளர்களையும் முதலீட்டாளர்களையும் பாதுகாக்க வேண்டும், இல்லாவிட்டால் ஒட்டுமொத்த வங்கிகளின் எதிர்காலமும் கேளவிக்குறியாகும். ஆனால் வங்கி அரசுடமையாக்கப்பட்டால் அது முதலாளித்தவ பொருளாதாரத்திற்கு கொள்கை அடிப்படையில் வீழ்ந்த மிகப்பெரும் அடியாக இருந்திருக்கும். ஆனால் கிரடிட் சுவிஸ் வங்கியின் போட்டியாளரான யுபிஎஸ் (UBS) வங்கி கிரடிட் சுவிஸ் வங்கியை ($3.25 billion) வாங்கி வங்கிகளின் வீழ்ச்சியை சற்றுத் தள்ளிப் போட்டுள்ளது. யுபிஎஸ் – UBS, கிரடிட் சுவிஸை மட்டும் வாங்கவில்லை. கிரடிட் சுவிஸ் வங்கிக்கு கடந்த பல ஆண்டுகளாக இருந்த நெருக்கடியையும் சேர்த்தே வாங்கியுள்ளது. யுபிஎஸ் – UBS, கிரடிட் சுவிஸ்க்கு ஏற்பட்ட பிரச்சினையை மேவிவருமா அல்லது வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தையும் கொண்டு போனது போல் ஆகுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அடுத்தது எந்த பாங்க் வீழ்ச்சியடையும் என்பது காலையில் எழும்போது தான் தெரியவரும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் முதலாளித்துவத்தின் முதுகெலும்பு வங்கிகள். வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்தால் அவர்கள் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்து தங்கள் முதலீட்டை வைப்பீட்டை மீளப்பெறத் துடிப்பார்கள். வங்கிகளின் கையிருப்பு வறளும். வங்களின் குருதிச் சுற்றோட்டம் பணச் சுழற்சி. வங்கியில் பணம் இல்லாவிட்டால் எமக்கு ஒக்ஸிஜன் இல்லாத நிலைமை தான். அதற்காக பணத்தை அச்சடித்து வங்கிகளை நிரப்பினால் பணத்தின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடையும். டொலர் வீழ்ச்சியடையும். அதற்கும் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. டொலரும் அமெரிக்காவும் ஒன்றுதான்.