உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபின் உள்ளடக்கம் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது – இராஜதந்திரிகள்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபின் உள்ளடக்கம் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என அதற்கு ஒத்துழைப்பை வழங்கிவரும் தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

ஆணைக்குழு தொடர்பாக சிவில் சமூகப்பிரதிநிதிகளின் நிலைப்பாட்டை கேட்டறிந்து, அதற்கு அமைவாக அரசாங்கத்திடம் சில நிபந்தனைகளை முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த நாடுகளின் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதை சிவில் சமூகப்பிரதிநிதிகள் மீண்டும் அழுத்தம் திருத்தமாக இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்தனர்.

 

இதேவேளை ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது என்றும் இச்செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன்மூலம் மாற்றம் ஏற்படுவதற்கும் காலம் எடுக்கும் என்றும் ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

அத்தோடு இந்த விடயத்தில் நடுநிலையாகவே தாம் செயற்படுவோம் என தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தார்.

 

இதேநேரம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் பகிரங்கமாகவே அறிவித்திருக்கும் பின்னணியில் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்குப் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடாத்துவதற்கு இலங்கையிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகம் திட்டமிட்டுள்ளது.

“தென்னாபிரிக்க பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையில்” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே, அவர் இதனை அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கையில் அமைப்பதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழு சில வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகவும் தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தென்னாபிரிக்காவுடன் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை விதித்துள்ள நிபந்தனைகளில் இதுவும் ஒன்றென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வு குறித்தும், அதிகார பரவலாக்கம் குறித்தும் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் குறித்த கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் நாளைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு வார இறுதியில் இது குறித்து நாடாளுமன்ற விவாதங்கள் இடம்பெறும் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற நிதி குழுவிடம் குறித்த திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவற்றை தொடர்ந்து, இலங்கைக்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நல்லிணக்க ஆணைக்குழு குறித்த இறுதி நகல்வடிவம் கூட்டமைப்பிடம் சமர்ப்பிக்கப்படும்.” – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த இறுதி நகல்வடிவை அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிடமும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் சமர்ப்பித்த பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளதுடன் நகல்வடிவு அடுத்தமாத இறுதிக்குள் தயாராகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் அனுமதியளித்ததும் ஆணைக்குழு டிசம்பர் மாதம் முதல் செயற்பட ஆரம்பிக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 53 வது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டுள்ளன,.

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை !

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இங்கு சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல், தேசிய காணி சபையொன்றை நிறுவுதல் மற்றும் தேசிய காணி கொள்கையை உருவாக்குதல், காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்தை மிகவும் திறம்பட செயற்படுத்துதல், அதன் டிஜிட்டல் மயமாக்கல் செற்பாடுகளை நிறைவு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு, இதுவரை தகவல் சேகரிக்க முடியாத காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் என்பவற்றை ஸ்தாபித்தல் மற்றும் அது தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.

எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவற்றைப் பூர்த்தி செய்து, அது தொடர்பான அறிக்கையை வழங்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில், காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைமை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், அரச துறையினரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் மகாவலி காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கைதிகளின் விடுதலை மற்றும் பொதுமன்னிப்பு தொடர்பாக நீதி அமைச்சின் ஊடாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

அதிகாரப் பரவலாக்கம், மாகாண மட்டத்தில் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாகாண ஒம்புட்ஸ்மன் நியமனம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் உள்ளி;ட்டவர்கள் இந்தக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

“நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான புதிய சட்டவரைபானது தமிழ்மக்களுக்கான தீர்வு குறித்த குறைந்தபட்ச எதிர்பார்க்கைகளைப் பூர்த்திசெய்யவில்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டவரைபானது இறுதிக்கட்டப்போரின்போது இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்களின் விளைவாகத் தமது அன்புக்குரியவர்களை இழந்த சிறுபான்மையின தமிழ்மக்களுக்கான தீர்வு குறித்த குறைந்தபட்ச எதிர்பார்க்கைகளைப் பூர்த்திசெய்வதற்குத் தவறியிருப்பதாகத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறுதிக்கட்டப்போரின்போது வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்தோர் உள்ளடங்கலாகப் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்தும் அதேவேளை, தமக்குரிய நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2000 நாட்களுக்கும்மேல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் தென்னாபிரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டதையொத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கையில் ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்குக் கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இருப்பினும் அடிமட்டத்தில் எதுவுமே நிகழவில்லை. மேலும் அவர்கள் சில புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனால் அதுகுறித்து அவர்கள் யாருடனும் கலந்துரையாடாமல் இருக்கின்றார்கள்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டவரைபொன்றை முன்வைத்த அவர்கள், அதுகுறித்து அபிப்பிராயம் கூறுமாறு என்னிடம் கேட்டார்கள்.

இருப்பினும் அதுபற்றிக் கூறுவதற்கு எதுவும் இல்லை. அதில் பொறுப்புக்கூறல் குறித்தோ அல்லது மன்னிப்பு அளித்தல் குறித்தோ எதுவும் இல்லை.

மேலும் காணாமல்போனோரின் உறவினர்களில் பெருமளவானோர் இதுவரையான காலப்பகுதியில் குறைந்தபட்சம் 15 ஆணைக்குழுக்களின் முன்னிலையில் ஆஜராகி, தமது உறவுகள் குறித்து சாட்சியமளித்திருக்கின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது. இருப்பினும் அதில் முன்னேற்றங்கள் எவையுமில்லை. பரணகம ஆணைக்குழுவில் முன்னிலையானவர்களே மீண்டும் மீண்டும் அழைக்கப்படுகின்றார்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.