உதய கம்மன்பில

Wednesday, October 27, 2021

உதய கம்மன்பில

“அமெரிக்காவுடனான இயற்கை எரிவாயு ஒப்பந்தம் உட்பட நாட்டுக்கு பாதகமான எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டேன்.” – உதய கம்மன்பில !

அமெரிக்காவுடனான இயற்கை எரிவாயு (LNG) திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள 2028 ஆம் ஆண்டு வரை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதால் இலங்கையிலுள்ள எரிவாயுவை ஆராய வெளிநாட்டு முதலீட்டாளர்களை  ஈர்ப்பதற்கு ஒரு தடையாக அமையும் என்றும் எரிசக்தி அமைச்சில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் வழங்கியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்ட போது ,

New Fortress Energy நிறுவனத்தின் ஊடாக எரிவாயு 2023 ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு விநியோகிக்கப்படும் அதாவது 2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆண்டு வரை மாத்திரம் விநியோகிப்பார்கள். இந்த ஆண்டின் இறுதியில் ஏலம் நடத்தப்பட்டால், நம் நாட்டில் எரிவாயு உற்பத்தி மூன்று ஆண்டுகளில் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 2022 முதல் 2025 வரை எங்களுக்கு எரிவாயு உற்பத்தியைத் தொடங்கலாம்.

2028 வரை அமெரிக்க நிறுவனம் ஒன்று எங்கள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகித்தால் இலங்கையின் எரிவாயுவை ஆராய வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு ஒரு தடையாக அமையும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது தொடர்பாக நான் அமைச்சரவைக்கு அவதானிப்புகளை வழங்கியுள்ளேன். இது குறித்து இரண்டு அவதானிப்புகள் செய்யப்பட்டன.

இது பற்றி விவாதிக்கப்படும் ஒவ்வொரு முறையும், எங்கள் அமைச்சரவைக்கு எங்கள் அமைச்சகத்தில் இதன் தாக்கம் குறித்து எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிவாயு உற்பத்திக்கான ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்கள் எவ்வளவு காலம் நடத்தப்பட்டன என்பது எனக்கு தெரியாது. எனினும் பல சர்வதேச ஒப்பந்தங்கள் அவசர அவசரமாக கையெழுத்திடப்படுகின்றன. நிபந்தனைகளை முன்வைத்து அரசாங்கம் அவற்றை  ஏற்றுக்கொள்கின்றது.

எவ்வாறாயினும் நாட்டுக்கு பாதகமான எந்ததொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டேன். தற்போதைய நிர்வாகத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு காவலர்களாக செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக பிரதான எதிர்க் கட்சிகளினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக நேற்று(20.07.2021) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்ளூர் உற்பத்திகளில் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தினை உருவாக்கும் வகையிலே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது.

கடலட்டை போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகளை வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் விஸ்தரித்து, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 40,000 நேரடி வேலை வாய்ப்புக்களையும் சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதையும் இலக்காக கொண்டு செயற்பட்டு வருகிறது.

எரிபொருள் விலையேற்றம் என்பது அமைச்சர் உதயகம்மன்பிலவின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. இந்தத் தீர்மானம் தற்போதைய அரசாங்த்தின் கூட்டுத் தீர்மானமாகும். எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது நேரத்தையும் மக்களின் வரிப் பணத்தினையும் வீண் விரயமாக்கும் செயலாகும்.

ஒரு நாட்டின் எரிபொருள் விலையேற்றமானது, அந்நாட்டின் அனைத்துப் பொருட்களினதும் விலையேற்றத்துக்குக் காரணமாகும் என்பதை நான் புதிதாகக் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. எமது நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடானது எமது நாட்டுக்கு மாத்திரம் நிகழ்ந்துள்ளதொரு நிலையல்ல.

கொரோனா அனர்த்த நிலை காரணமாக முழு உலகமே இன்று பொருளாதார நிலையில் பாரிய பாதிப்புகளை கண்டு வருகின்றன. கடந்த ஆட்சியின் தூர நோக்கற்ற பொருளாதார கொள்கையானது எமது நாட்டு கஜானாவை துடைத்து வைத்திருந்த நிலையில்தான் நாம் இந்த கொரோனா அனர்த்தத்திற்கும் முகங் கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

இத்தகைய நிலைமைகளின் முன்பாக எமது மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற சந்தர்ப்பத்தில், எரிபொருளின் விலையேற்றமானது மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையைப் போன்றதாகிவிட்டது என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

அதேநேரம், எரிபொருள் விலையேற்றம் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்தையும் இந்த நாட்டின் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதேவேளை, மாண்புமிகு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர் உதயகம்மன்பில ஆகியோருடன் கலந்துரையாடி 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட இருந்த மண்ணெண்ணையின் விலையை 7 ரூபாயினால் மாத்திரமே அதிகரிக்கச் செய்துள்ளோம். இலங்கையானது எரிபொருளுக்கென மிக அதிகளவிலான அந்நிய செலாவணியை செலவிடுகின்ற ஒரு நாடு மட்டுமல்ல, எரிபொருள் மூலமாக போக்குரத்து சேவைகள், மின்சார உற்பத்தி, கைத்தொழில் நிலையங்கள் போன்றவற்றை செயற்படுத்துகின்ற ஒரு நாடாகவும் உள்ளது.

இறக்குமதி மீது தங்கியிருக்கின்ற எமது நுகர்வுக் கலாசாரத்தை உற்பத்திகள் மீது தங்கியிருக்கக் கூடிய நுகர்வுக் கலாசாரமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனம் முதற்கொண்டு, இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் வரை இந்த நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தையே வலியுறுத்திள்ளன. அதனையே நாம் செயற்படுத்தி வருகின்றோம்.

கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில், இயன்றளவில் கடற்றொழிலையும் நன்னீர் சார்ந்த வோண்மைத் துறைகளையும் மேலும் மேலும் பரவலாக வளர்த்தெடுத்து உற்பத்திப் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கின்ற நடவடிக்கைகளை இடைவிடாது மேற்கொண்டு வருகின்றேன்.

சாதிக்க துணிந்தவனுக்கு சமுத்திரம் கூட இடுப்பளவு நீராகும். போதிக்க மட்டும் தெரிந்தவனுக்கு இடுப்பளவு நீரும் சமுத்திர நீராகவே தென்படும். கடந்த ஆட்சிக்கு நல்லாட்சி என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் தலைகள் மீது மிளகாய் அரைத்தவர்கள் எதை சாதித்தார்கள்? அடிக்கல் நாட்ட வந்த ஆட்சியாளர்களை கண்டவுடன் குனிந்து கும்பிட்டு பல்லிளித்து மட்டும் நின்றார்கள். ஒவ்வொரு வரவு செலவு திடத்தை ஆதரித்து வாக்களிக்கும் போதும் பணப்பெட்டிகளை வாங்கிக்கொண்டு பெட்டிப்பாம்புகளாக கைகட்டி அடங்கிக்கிடந்தார்கள்.

இந்தவிறகுக் கட்டை விடுதலை வீரர்கள், கிளிநொச்சி புலிநொச்சியாக இருந்த காலத்தில் 75 கள்ள வாக்குகளைப் போட்டதாக ஒப்புக்கொண்டார்கள். அவ்வாறான ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் எமது மக்களை ஏமாற்றப் போவதில்லை.

அந்தவகையில், அனைத்து உற்பத்தித் துறைகளும் மேலோங்கும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

அதேநேரம், மாற்று எரிபொருட்கள் தொடர்பிலும் எமது அரசு அதிக அவதானம் செலுத்தி வருகின்றது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக எமது நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுதான் வருகின்றன. கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் மூன்று தடவைகள் அங்கு எரிபொருள் விலை ஏற்றப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் இந்தியா பெற்றோலிய எரிபொருள் மற்றும் உள்நாட்டு எதனோல், உயிரி இயற்கை எரிவாயு திரவ இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருட்கள் அடங்கிய இயற்கை எரிபொருளைக் கொண்ட கலப்பு பிளக்ஸ் இயந்திரங்களின் பாவனையை வாகனங்களுக்கென ஊக்குவித்து வருகின்றது.

இந்த முறைமையானது தற்போது அமெரிக்கா, கனடா, பிரேசில் போன்ற நாடுகளில் பாவனையில் உள்ளது. அவை தொடர்பாகவும் நாம் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டால் உடன் கைது !

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளமை, இஸ்லாமிய பயங்கரவாத கொள்கையை பரப்புகின்றமை மற்றும் அவர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றமை போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என அரசு தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக இலங்கை விவகாரங்களில் கண்காணித்து செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் தனிப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்கள் உட்பட 400 இற்கும் அதிகமானவர்களின் பெயர்களையும் இலங்கை அரசு  தடை செய்துள்ளது.

இந்தத் தடைக்கான காரணம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில ஆகியோர் அரசின் நிலைப்பாட்டை மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.

“கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரதமரின் அறிவிப்பு அவரின் தனிப்பட்ட விருப்பம்” – அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில

“கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரதமரின் அறிவிப்பு அவரின் தனிப்பட்ட விருப்பம்” என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (16.02.2021) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம், சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினாலேயே மேற்கொள்ளப்படும்.

கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் இறுதி கிரியைகளை நடத்தும் விதம் குறித்து பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமைச்சரவையால் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது .

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழிநுட்ப குழுவின் பரிந்துரைக்கு அமைய, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலம் தொடர்பாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

“அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை” – அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில திட்டவட்டம் !

“அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்பதால் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கமும் அரசுக்கு இல்லை”  என அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (08.12.2020) அரச தகவல் திணைக்களத்தினால் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாட்டின் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. ஆகவே அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை பூச்சியமாகவுள்ளது. தமது தனிப்பட்ட அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளவர்களே அரசியல் கைதிகள் எனப்படுவர்.

ஆனால் நாட்டின் அரசமைப்பின் அடிப்படையில் பார்க்கும்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே நாட்டின் சிறைகளில் உள்ளனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டியது அவசியமானதாகும். அத்துடன், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்பதால் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கமும் அரசுக்கு இல்லை.

எந்தக் கைதிகளும் சிங்கள, தமிழ் கைதிகள் என வேறுபடுத்தப்படுவதில்லை. மாறாக அவர்களது குற்றச்செயல்களின் அடிப்படையிலேயே சிறை வைக்கப்படுள்ளனர். அந்த வகையில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை கைதிகளின் நடத்தை தொடர்பான அறிக்கையின்படி அவர்களின் தண்டனைக் காலத்தை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆனால் கடந்த காலத்திலிருந்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே தான் சிறைச்சாலைகள் அமைச்சர் இந்த நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளார். அதற்கமைய மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அவர்களது நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலம் குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகவும், பின்னர் ஆயுள் தண்டனை வருட அடிப்படையில் 20 வருட தண்டனையாகவும் குறைக்கப்படும் .

இந்தச் செயற்பாடுகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பொருந்தாது. ஆனால் போதைப்பொருள் பாவனையாளர்கள் இதனுள் உள்ளடக்கப்படுவர். அவர்களுக்கு புனர்வாழ்வழிக்கும் நடவடிக்கை இடம்பெறும்” என்றார்.

அதே நேரம் தமிழ் அரசியல்கைதிகளை விடுவிக்குமாறு கோரி இன்றையதினம் (09.12.2020) தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து சந்திப்பை நடத்தியிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.