உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

வடக்கில் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்யாதவர்கள் கூட வைத்தியர்களாக பணியாற்றுகிறார்கள் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

வடக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றி வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”வவுனியா மன்னார் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் இலங்கையில் உயர்தர கல்வியில் சித்தியாகவில்லை.

வட மாகாண சுகாதர திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வைத்தியர் ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு அனுமதி கிடைத்திருக்க வேண்டும்.  அவர் எங்கு படித்தார் என்பது எமக்கு கவலையில்லை.  அவர் படித்த கல்லூரி சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும்.

உயர்தரம் இருந்ததோ இல்லையோ என்பது இங்கே கேள்வியல்ல. இவர்கள் தரமான கல்வி கற்றார்களா என்பதே முக்கியம்.உயர்தரம் என்பது எமது நாட்டில் ஒருவரின் வாழக்கையை திசை திருப்பும் ஒரு திருப்பு முனையாக காணப்படுகிறது.

உயர்தரத்தில் 3 ஏ சித்தி பெற்றுள்ள கொழும்பு மாவட்ட பிள்ளைகள் பலர் மருத்துவம் படிக்க இயலாமல் காணப்படுகின்றனர்.

அவர்களுக்கு நாம் என்ன சொல்லப்போகின்றோம்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

“12 மாதங்களில் மட்டும் 17 பல்கலைக்கழகங்களில் 36 பகிடிவதைச் சம்பவங்கள் ” – 57 மாணவர்கள் இடைநிறுத்தம் !

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பதற்கு விசேட குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடமக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பல்கலைக்கழகங்களின் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த கலாசாரத்தை நாம் நிறுத்தியே ஆகவேண்டும். பல்கலைக்கழகங்களில் இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களினாலேயே இந்த பகிடிவதை அறங்கேற்றப்படுகிறது.

இதனால் மாணவர்கள் உடல்- உள ரீதியான கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்த 12 மாதங்களில் மட்டும் 17 பல்கலைக்கழகங்களில் 36 பகிடிவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

57 பேருக்கு வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சுயாதீன விசாரணைக்குப் பின்னரே இவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வகுப்புத்தடை செய்யப்பட்ட மாணவர்கள், தங்களின் குற்றங்களுக்கு மன்னிப்புக் கோரினால் அவர்களுக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“13ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் 1987ற்கு முன்பு காணப்பட்ட நிலை மீண்டும் ஏற்படும்.” -உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றின் ஊடாக நீக்கப்பட்டால், 1987ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமை மீண்டும் இலங்கையில் ஏற்படும். எனவே 13 நீக்கப்பட்டால் இலங்கையின் எதிர்காலம் என்னவாகும் என்பதை இறைவனே அறிவார் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

 

எனவே இனியும் தாமதிக்காது சகல கட்சிகளும் இணைந்து 13 தொடர்பில் ஸ்திரமான ஒரு நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தினார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றது.

 

இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

 

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட பதற்ற நிலைமையை தணிப்பதற்காக இந்தியாவின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட இந்து – லங்கா ஒப்பந்தத்தின் மூலம் 13ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் முந்தை ஜனாதிபதிகள் எவரும் தலையிடவில்லை என்று தெரிவிக்கப்படுவது கற்பனை கதையாகும்.

 

ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைவரும் இவ்விடயத்தில் அவதானம் செலுத்தியிருக்கின்றனர்.

 

எனினும் அவர்களால் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது மக்களால் விரும்பப்படாத ஒரு விடயமாகக் காணப்பட்டாலும், ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இதற்கொரு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

 

அதற்கமைய கடந்த புதனன்று கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது 13 ஐ நடைமுறைப்படுத்துவதா? அல்லது நீக்குவதா என்பதை நீங்களே தெரிவு செய்யுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அதற்கமைய மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும். 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இணங்க முடியாதெனில் , பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை முன்வைத்து அதனை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

 

ஜனநாயக தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிக்கும் உரிமையை சகல கட்சிகளுக்கும் வழங்கியுள்ளார்.

 

எனவே இனியும் தாமதிக்காது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் சகல கட்சிகளும் ஒருங்கிணைந்த ஸ்திரமான நிலைப்பாடொன்றை அறிவிக்க வேண்டும்.

அதனை விடுத்து 13 பிளஸ் உள்ளிட்ட புதிய கருப்பொருட்களை முன்வைத்தால் , இந்த சிக்கல் தொடர்ந்தும் நீடிக்குமே தவிர இறுதி தீர்வினை எட்டாது என்றார்.

இதன்போது , ஜனாதிபதியின் டில்லி விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ’13ஐ முழுமையாக அமுல்படுத்தி தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புகின்றோம்.’ எனத் தெரிவித்திருந்தார்.

அவ்வாறிருக்கையில் பாராளுமன்றத்தினால் 13 நீக்கப்பட்டால் இந்தியாவின் அழுத்தங்களை எதிர்கொள்ள நேருமல்லவா? இதற்கு இந்தியாவுக்கு எவ்வாறு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ,அதை என்னால் கூற முடியாது.

13 நீக்கப்பட்டால் இலங்கையின் எதிர்காலம் என்னவாகும் என்பதை இறைவன் மாத்திரமே அறிவார். அல்லது 1987 கால கட்டங்களில் காணப்பட்ட நிலைமைக்கு இலங்கை மீண்டும் செல்லக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதை தடுக்க அவசர தொலைபேசி எண் அறிமுகம் !

கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு துன்புறுத்தல்கள் ஏற்படுவதை தடுக்க அடுத்த சில வாரங்களில் அவசர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என  உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நேற்று  வெள்ளிக்கிழமை (14) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்துவதன் மூலம் ஓரளவு  துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின்அனைத்து பல்கலைகழகங்களிலும் மனித உரிமை மையங்கள் !

பகிடிவதை மற்றும் பிற வன்முறைகள் தொடர்பான சம்பவங்களைக் கையாள்வதற்காக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மனித உரிமை மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதை மற்றும் பிற வன்முறைகள் தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து அதன் உறுப்பினர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்திருந்தார்.

பல்கலைக்கழகங்களில் உள்ள இந்த மனித உரிமை நிலையங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘தற்போதுள்ள சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதே மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரை. ஆனால் நடந்தது என்னவென்றால், பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பாக புதியவர்கள் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைக்க பயப்படுகிறார்கள். புகார் அளித்த பின்னர் அவர்கள் மீண்டும் வளாகத்திற்கு வர பயப்படுகிறார்கள். அத்தகைய மாண்வர்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், தங்கள் புகார்களை தெரிவிக்க முன்வருமாறும் கேட்டுக்கொள்கிறோம். இலங்கையில் உள்ள வேறொரு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு அல்லது அரசாங்க புலமைப்பரிசில்கள் மூலம் கல்வியைத் தொடர வெளிநாடுகளுக்கு அனுப்பும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் அந்த மாணவர்களுக்கு எந்தவிதமான சலசலப்புமின்றி கல்வியைத் தொடர உதவுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம், ”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.