உள்ளுராட்சி தேர்தல் 2023

உள்ளுராட்சி தேர்தல் 2023

“உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விலைவாசிகள் உயர்ந்த வண்ணம் உள்ளன. விலைவாசி அதிகப்பினாலும் வரி அதிகரிப்பினாலும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது.பலருக்கு வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத கடும் கஷ்டமான நிலை காணப்படுகின்றது.

அப்படியான சூழ்நிலையிலே இந்த உள்ளூராட்சி தேர்தல் என்கின்ற விடயத்தை  பேசு பொருள் ஆக்கி நாட்டிலே அதைக் குறித்த ஒரு சர்ச்சையை உருவாக்கி மக்களுடைய கவனத்தை அதன் பால் திருப்புவதற்காகவும் சில முயற்சிகள் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

திசை திருப்புவதற்காக அரசாங்கம் சார்பிலும் ஜனாதிபதி சார்பிலும் முயற்சிகள் நடைபெற்றாலும் கூட தேர்தல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு விடயம்.

ஒரு நாடு ஜனநாயக நாடா இல்லையா என்பதை தீர்மானிப்பது உரிய காலத்திலே தேர்தல்கள் கிராமமாக நடத்தப்படுவது முக்கியமான ஒரு அம்சமாகும். ஆகையினாலே நாட்டிலே பாரிய மாற்றங்கள் சென்ற வருட நடுப்பகுதியிலே இடம்பெற்றன

தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அதாவது ஜனாதிபதி நாட்டை விட்டு ஓடினர். பிரதமர் தானாக பதவி விலகினாலும் கூட தங்களுடைய நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் ஆட்சியை தொடர்ந்து வருவதோடு  நாட்டை ஆட்டிப் படைக்கின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.” என தெரிவித்துள்ளார்.

“தேர்தல் இறந்துவிட்டது. அதற்கு இறப்புச் சான்றிதழை எழுதுவதே இப்போது எஞ்சியிருக்கிறது.” – மகிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறந்துவிட்டதாகவும், அதன் இறப்புச் சான்றிதழை எழுதுவதே இப்போது எஞ்சியிருப்பதாகவும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் இதற்கு யார் பொறுப்பு என்று தற்போது கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி ரணிலின் சூழ்ச்சியை வெளியே கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

“ஜனாதிபதி ரணிலின் சூழ்ச்சியை வெளியே கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதே சபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நேற்று நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“தேர்தல் நடக்குமா என மக்கள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர், ஆனால்  ஜனாதிபதி ரணிலுக்கு தேர்தலைச் சந்திப்பதற்கு பயம், இதுவே தேர்தலை பிற்போடக் காரணம்.

நான் 2019 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கோரி தனிநபர் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தேன், ஆனால் மாகாண சபைத் தேர்தலையும் இவ்வாறான சூழ்ச்சியின் மூலம் பிற்போட்டு விட்டார்கள்.

இப்போது மாகாண அதிகாரமும் கிடையாது, உள்ளூராட்சி அதிகாரத்தையும் வழங்க மறுக்கிறார்கள். மக்கள் ஆணை இல்லாமல் ஜனாதிபதியாக வந்த ஒருவர் முழு அதிகாரத்தையும் தனது கையில் எடுத்து தேர்தலை பிற்போட செய்யும் சூழ்ச்சியை வெளியே கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.

இந்த தேர்தலினால் ஏற்படப்போகும் விளைவுகளை உணர்ந்த காரணத்தினாலேயே குறித்த தேர்தலை பிற்போட முனைப்புக் காட்டுகின்றனர்.” இவ்வாறு நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாம் தந்திரமாவே பிரிந்து நிற்கிறோம் – மாவை சேனாதிராஜா

இனப்பிரச்சினை, நில விடுவிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அழுத்தங்களை பிரயோகிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றாகவே செயற்படுவோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியலமைப்பின்படி தமிழரசு கட்சியின் கீழ் தான், கூட்டமைபின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா, தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் கூட்டமைப்பாக இல்லாமல் தனித்தனியாக போட்டியிட்டு சிறு வாக்குகளால் விகிதாசாரத்தில் வந்து ஆட்சி அமைப்பதை தவிர்க்கும் வகையிலேயே தந்திரமாக போட்டியிடுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, தேர்தலிற்காக நிதி ஒதுக்கப்பட்ட போதும் அதனை விடுவிக்காமல் இருப்பது குறித்து கடும் கரிசனையும் வெளியிட்டுள்ளார்.

“தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும்.”- தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஏ. சுமந்திரன் !

அதிகாரப்பகிர்வு என்ற பேர்வையில் மாயாஜால வித்தை காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை வெருகல் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் கோரும் சமஷ்டி தீர்வு என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தெற்கில் எவ்வாறான மாற்றம் ஏற்பட்டாலும் தம்மைத் தாமே ஆள அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்ற வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களது இந்த நிலைப்பாடு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வெளிப்படுத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“எனது கட்சி தேர்தல் பிரச்சாரத்துக் நிதியுதவி செய்யுங்கள்.”- புலம்பெயர்ந்தோரிடம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை !

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட தனது வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யும் முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சில அவசியமான செலவுகளை செய்வதற்கான நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலாகாலமாக தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதில் தோல்வியைத் தழுவியுள்ளதாகவும் அதனால் தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச்செல்வதற்கு இளையோர்களைத் தயார்படுத்தி அவர்களின் கைகளில் அரசியலை ஒப்படைக்கும் தருணம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், அதன் காரணமாகவே நூற்றுக்கணக்கான இளையோர்களை எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் களம் இறக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் இளையோர்களை வெற்றிபெறச்செய்து தமிழ் அரசியலில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை அளிக்க வேண்டும் என்றும் தமது பிரசார நடவடிக்கைகளுக்கு உதவும்வகையில் இயன்றளவு நிதி உதவிகளை அவர்களுக்கு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் முதன்முறையாக இம்முறை தேர்தலில் களம் இறங்குவதாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தல் பிரசார செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால் புலம்பெயர் நாடுகளிலும் உள்நாட்டிலும் வாழும் நண்பர்கள், தனது மாணவர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தம்மால் இயன்றளவுக்கு நிதி உதவி செய்யவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ளுக்காக 770 மில்லியன் ரூபா வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை !

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இது தொடர்பான கடிதம் நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செலவினங்களுக்காக முன்னர் நிதியமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் பணம் விடுவிக்கப்பட்டதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து அத்தொகையை ஒதுக்குவதற்கு பாராளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது.

“உள்ளுராட்சி தேர்தல் காலங்களில் பெண்வேட்பாளர்களிற்கு எதிரான டிஜிட்டல் துன்புறுத்தல் அதிகரிக்கலாம்.” – கபே அமைப்பு

உள்ளுராட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமடையும் போது பெண்வேட்பாளர்களிற்கு எதிரான டிஜிட்டல் துன்புறுத்தல் அதிகரிக்கலாம் என தேர்தல் கண்காணிப்பு  அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கபே அமைப்பு மேற்கொண்ட ஆரம்ப கட்ட கருத்துக்கணிப்பின் போது உள்ளுராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களில் 70 வீதமானவர்களும் அடிமட்ட செயற்பாட்டாளர்களும் டிஜிட்டல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

டிஜிட்டல் துன்புறுத்தலை எதிர்கொண்டவர்களில் 80 வீதமானவர்கள் பொலிஸாரிடமோ கட்சியின் தலையிடமோ  இது குறித்து முறைப்பாடு செய்யவில்லை  அவர்கள் இது பயனற்ற நடவடிக்கை கருதுவதே இதற்கு காரணம் என கபேயின் நிறைவேற்று பணிப்பாளர் மானாஸ் மக்கீம் தெரிவித்துள்ளார்.

பெண் அரசியல்வாதிகள் பொலிஸ் அல்லது தங்களின் கட்சி தலைமையிடம் இது குறித்து முறைப்பாடு செய்தாலும் எந்த பயனும் இல்லை  அவர்களே தங்கள் தீர்வுகளை தாங்களே காணவேண்டியுள்ளது என தெரிவித்துள்ள அவர் பெண் வேட்பாளர்களிற்கு ஒதுக்கீடு முறை ஆண் வேட்பாளர்களிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது இதன் காரணமாக இதன் காரணமாக அவர்கள் டிஜிட்டல் துன்புறுத்தல்களில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கணிப்பின் போது 55 வீதமான பெண் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் தங்கள் அரசியல் வாழ்க்கையின் போது துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என மானா மக்கீன் தெரிவித்துள்ளார்.

எனினும் டிஜிட்டல் துன்புறுத்தலே தற்போது வழமையான ஒன்றாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் தங்களின் கட்சியை சேர்ந்தவர்களே இதனை செய்கின்றனர் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.