உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்

“தேர்தலை விட பொருளாதாரமே முக்கியம்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ட்வீட் !

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் கிடைக்காவிட்டால், நாட்டின் அத்தியாவசிய செலவுகளுக்காக கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக கொடுப்பனவுகளை செலுத்த முடியாத நிலையில் எதிர்வரும் தேர்தலுக்கான செலவுகளுக்கு சரியான வரவு செலவு திட்டத்தை வழங்குமாறு நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம், மேலும் எங்கள் செலவினங்களை கவனமாக திட்டமிட வேண்டும். ஆண்டு முழுவதும் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. எனவே தற்காலிக அடிப்படையில் நிதியை விடுவிக்க முடியாது. எதிர்பார்த்தபடி மார்ச் மாதத்தில் IMF கிடைக்காத பட்சத்தில் நாம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

தேர்தல் செலவு குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. தேர்தல் கமிஷன் 10 பில்லியன் ரூபாய் என மதிப்பிட்டது, ஆனால் 6 பில்லியன் ரூபாய் கேட்டது. எங்களால் தற்காலிகமாக பணம் செலுத்த முடியாது, எனவே அவற்றை ஆய்வு செய்து சரியான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்க நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

எங்களிடம் தேவையான அனைத்து பணமும் இல்லை, எனவே முன்னுரிமைகளுக்கு பணம் கொடுக்கப்பட வேண்டும். 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் திவால்நிலையை எதிர்கொள்ளும் சிறு தொழில்களுக்கு நிவாரணம் வழங்க 20 பில்லியன் ஒதுக்கியுள்ளோம். இந்தக் கொடுப்பனவுகளைத் தாமதப்படுத்த வேண்டுமானால் பாராளுமன்றம் எனக்குத் தெரிவிக்கலாம்.

பொருளாதாரம் எனது முன்னுரிமை. பொருளாதாரம் மேம்படாவிட்டால் நமக்கு நாடு இருக்காது. நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினை ஒன்று உள்ளது. நாட்டை இழந்து அரசியலமைப்பை வைத்துக் கொள்ளலாமா? நாட்டைப் பாதுகாத்தால்தான் அரசியலமைப்பைப் பாதுகாக்க முடியும்” என்றார்.

“டிஜிட்டல் வாக்களிப்பு முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.” – இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கம்

வாக்கெடுப்பு நடத்தும் போது ஏற்படும் கணிசமான செலவைக் குறைத்தல் உட்பட பல்வேறு வழிகளில் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில், விரைவில் டிஜிட்டல் வாக்களிப்பு முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தேர்தல் செலவு மற்றும் தேர்தல் பணியாளர்களின் தேவையை வெகுவாகக் குறைக்கும் என இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கத்தின் அழைப்பாளர் அமண்டா ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு முறையை டிஜிட்டல் மயமாக்குவதை ஒரு செலவாக கருதாமல் எதிர்கால முதலீடாக கருத வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகம் மற்றும் மக்களின் மேலாதிக்கத்தை மதிக்கும் பட்சத்தில் அரசியல் சாதக பாதகங்கள் பற்றி சிந்திக்காமல் டிஜிட்டல் வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

“தேவையான திகதியில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சடித்து ஒப்படைக்க முடியாத காரணத்தினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படும் என கூறப்படுகிறது. பிரிண்டிங் பில் கோடிக்கணக்கில் உள்ளது. நாம் ஏன் டிஜிட்டல் முறைக்கு செல்ல முடியாது? டிஜிட்டல் வாக்களிப்பு மூலம் போக்குவரத்து, ஊழியர்களுக்கு பணம் செலுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் செலவிடப்படும் கணிசமான தொகை மிச்சமாகும்,” என்றார்.

2048 ஆம் ஆண்டிற்குள் இந்த நாட்டை செழிப்பாக மாற்ற அரசாங்கம் எண்ணுகிறது. அதற்கு பொது சேவையை டிஜிட்டல் மயமாக்குவது அவசியம். அந்த வகையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிரேஷ்ட குடிமக்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரிபவர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு, கொவிட் -19 தொற்றுநோயின் போது இந்தியா 2021 இல் மொபைல் அடிப்படையிலான மின்-வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இது ஒரு முன்னோடி திட்டம் மற்றும் இது 95 சதவீதம் வெற்றி பெற்றது. அதே சமயம், 1989 முதல் வாக்குச் சாவடிகளில் கூட்ட நெரிசலைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்துகிறது. இந்தியாவால் அதைச் செய்ய முடிந்தால், 22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் ஏன் அதைச் செய்ய முடியாது? எனவும் அவர் கேட்டுள்ளார்.

மின்னணு தபால் மூலம் வாக்களிக்கும் முறை, தொலைபேசி மூலம் வாக்களிக்கும் முறை அல்லது இணையவழி வாக்களிப்பு முறைக்கு செல்லுமாறு சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நகரங்களில் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குவதே எங்கள் முன்மொழிவு. மின்னணு வாக்குப்பதிவுக்கு இடமளிக்க தேவையான சட்டங்களை மாற்றவும். வாக்களிப்பது மட்டுமல்ல, அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

“அரசியல் தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு உண்டு.” – மகிந்தராஜபக்ச

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கிடையாது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்  என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இன்று (21) காலை பாராளுமன்ற அமர்வு கூடிய போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சபை பீடத்திற்கு வருகை தந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சபாநாயகர் சபை நடவடிக்கைகளை நாளை காலை 09.30 மணிவரை ஒத்திவைத்தார்.

இதன் பின்னர் பாராளுமன்ற பிரதான கட்டத்தொகுதிக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில்   ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்றும் பிற்போடப்பட்டவில்லை.அத்துடன் தேர்தலை பிற்போட வேண்டிய  தேவை ஏதும் தற்போது கிடையாது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். அத்துடன் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.

நெருக்கடியான காலக்கட்டத்திலும் தேர்தல்கள் பல நடத்தப்பட்டுள்ளன. ஆகவே தேர்தலுக்கு அச்சமடைய தேவையில்லை. அரசியல் தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு உண்டு என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழு

போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி, திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை, மேலும் வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு போதியளவு பணம் கிடைக்கப்பெறாத நிலையில் அச்சிடல் பணிகள் அரசாங்க அச்சத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதனால் அரசாங்க அச்சகம் உரிய வகையில் வாக்குசீட்டுகளை வழங்காமையினால், எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை காலவரையறையின்றி பிற்போட தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஆதிவாசிகளுக்கென தனியான அரசியல் கட்சி !

ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த தனி அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் என தம்பனை ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலாஅத்தே தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல பிரதேசங்கள் சுயேச்சைக் குழுவாக போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டத்தாலும் பலவந்தத்தாலும் மேற்கொள்ளப்படும் தற்போதைய அதிகாரப் பரவலாக்கல் முறையை இல்லாதொழிப்பதற்கு தமது கட்சி முன்னுதாரணமாகி அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 400 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தெரிவுக்காக சுமார் 4100 பேர் போட்டி !

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாணமாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ,அமல்ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபை களுக்கான தேர்தலில் இம்முறை போட்டியிடுகின்ற கட்சிகள் சுயேட்சை குழுக்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கிற செயற்பாடு முடிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த முறை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.

13 அரசியல் கட்சிகள் சார்பில் 135 வேட்புமனுக்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பில் 15 வேட்புமனுக்களுமாக 150 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு தேர்தலுக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த முறை தேர்தலில் வாக்களிப்பதற்கென யாழ் மாவட்டத்தில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள் அவர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை உள்ளுராட்சி மன்றசட்டத்திற்கிணங்க அந்தந்த வட்டாரங்களிலே வாக்குகள் எண்ணப்பட்டு வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளோம் அந்த வகையிலே 243 வாக்கு எணணும் நிலையங்கள் யாழ் மாவட்டம் முழுவதுமாக அமைக்கப்படவுள்ளன.

எனவே அந்த 243 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டு வட்டார தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படுகிற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.

மொத்தமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமாக வட்டார அடிப்படையில் 243 உறுப்பினர்களும் கட்சிகள் பெற்றுக் கொள்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிந்து அனுப்பப்பட வேண்டிய 159 வேட்பாளர்களுமாக 402 உறுப்பினர்கள் 17 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட வேண்டிஇருக்கின்றது.

இந்த 402 உறுப்பினர்கள் தெரிவிற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 4111வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் 13 கட்சிகள் சார்பில் 3686 வேட்பாளர்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பாக 425 வேட்பாளர்களுமாக 4111 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள் இதன் அடிப்படையில் மொத்த வாக்காளர் தொகையிலேயே 0.85 வீதமான வேட்பாளர்கள் அவர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாட இதுவே சிறந்த சந்தர்ப்பம் – ஜீ.எல்.பீறிஸ்

கடந்த இரண்டரை மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் 7 ​​முறை முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை எனவும், தேர்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய ஆணைக்குழுவை நியமிக்க முற்பட்டால் அது அரசியல் நெறிமுறைகளுக்கு பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தினத்தை பெயரிடும் போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அங்கு இல்லை என்ற வாதத்தை அரசாங்கம் எழுப்புவது தவறு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி உறுப்பினர்களை நியமிப்பது ஒன்றே இத்தேர்தலின் நோக்கமல்ல, அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாட இதுவே சிறந்த சந்தர்ப்பம் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

15 மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 100 !

பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய சுமார் 15 மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல உள்ளூராட்சி சபை மற்றும் மஹியங்கனை உள்ளூராட்சி சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஹாலிஎல பிரதேச சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் வழங்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னாவ உள்ளூராட்சி சபைக்கு ஹெலிகொப்டர் சின்னத்தில் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டதுடன், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் உள்ளூராட்சி சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதேவேளை, கந்தளாய் உள்ளூராட்சி சபைக்கு றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டம் சேருவில உள்ளூராட்சி சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 10 அரசியல் கட்சிகள் மற்றும் 03 சுயேச்சைக் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் கலவான உள்ளூராட்சி சபைகளுக்கு முன்னிலை சோசலிச கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 06 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் நலனுக்காக தமிழ்தேசிய கட்சிகள் கூட்டணி அமைக்கவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டணிகள் மக்களின் நலன்சார்ந்தவை அல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டணிகள் மக்களின் நலன்சார்ந்தவை அல்ல. வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதே அவர்களின் நோக்கமாகும். அங்கு மக்கள் நலன் பின்தள்ளப்படுகிறது.

அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளகின்றன” – என்றார்.

தேர்தல் செலவுகளை இயலுமான அளவு குறைத்தாவது தேர்தலை நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

செலவுகளை இயலுமான அளவு குறைத்தாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அமைய நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு.

ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவது குற்றமாகும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றல் பணிகளில் இருந்து விலகுமாறு அறிவித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது என்பதால் அந்த சுற்றறிக்கை மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்டுள்ள தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது. கட்டுப்பணம் செலுத்தலில் இருந்து விலகுமாறு தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு குறுந்தகவல் செய்தி ஊடாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆணைக்குழு அதற்கு இடமளிக்கவில்லை. தெரிவத்தாட்சி அலுவலர்கள் முறையாக செயற்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆளும் தரப்பினர் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேர்தலுக்காக குரல் கொடுத்தார்கள்.

தேர்தலை பிற்போட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பிற்போடப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டி நீதிமன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார்கள், ஆகவே அவர்கள் தற்போது தேர்தலை பிற்போட முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது நாடாளுமன்ற தீர்மானத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடலாம்.

தேர்தலை நடத்த நிதி இல்லை என குறிப்பிடப்படுகிறது. குறைந்த செலவில் தேர்தலை நடத்த ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

தேர்தல் செலவுகளை இயலுமான அளவு குறைத்தாவது தேர்தலை நடத்த வேண்டும் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.