எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர்

பல கோடி கடன் பெற்றவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு மனித உடல்களை அடக்கம் செய்வதற்கு வரி அறவிடுகிறது – சஜித் பிரேமதாச விசனம் !

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்று , கடனை செலுத்தாத 150 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் மனித உடல்களை அடக்கம் செய்வதற்கு வரி அறவிடுதல் எந்தளவுக்கு நியாயமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் உள்ள  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டை தோற்கடித்துள்ளோம். வற் வரியில் புதிதாக இணைக்கப்படும் 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலை  சபைக்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.

வற் வரி சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அதிக அக்கறை கொண்ட அரசாங்கம்  வரி தொடர்பான தகவல்களை சபைக்கு சமர்ப்பிக்கவில்லை. 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலையும் சமர்ப்பிக்கவில்லை.

வற் வரி அதிகரிப்பதை காட்டிலும் அதனை செயற்படுத்துவதற்கு ஏதுவாக அமைய காரணிகள் தொடர்பில் ஆராய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் குறுகிய காலத்துக்குள் 600 பில்லியன் ரூபா முதல் 700 பில்லியன் ரூபா வரையிலான வரி வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளது.

வரி வருமானம் இழப்பை தொடர்ந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் புத்திஜீவிகள் நாட்டை விட்டு நாளாந்தம் வெளியேறுகிறார்கள். பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டு மக்கள் மீது சுமையையும் அரசாங்கம் திணித்துள்ளது.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி, பொருளாதார படுகொலையாளிகள் என்று  உயர்நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால்,டப்ள்யூ.டி லக்ஷமன்.எஸ்.ஆர்.ஆட்டிகல,பி.பி.ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.

பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களின் குடியுரிமையை பறித்து,அவர்கள் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும். இதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்ற 150 பேரின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு  நிதியமைச்சரிடம்  பலமுறை கோரிக்கை விடுத்தேன். ஆனால் இதுவரை அது தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை. இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள  மக்களை அடக்கம் செய்வதற்கும் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு நியாயமானது என்றார்.

வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

உலகத்துக்கு நல்லிணக்கம் தொடர்பாக எடுத்துக்கூறாமல் நாட்டிலும் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

 

இதேநேரம் இவ் வருடத்தின் பெப்ரவரி மாதத்திற்குள் வடக்கு கிழக்கில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என கடந்த வருடம் ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காயிருந்தார்.

 

வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களும் ஏனைய பகுதி வாழும் மக்களும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

போதைப்பொருள் சோதனைகளின் போது மாணவர்களின் புத்தகப்பைகளில் வெற்று உணவுப் பெட்டிகளே உள்ளன – எதிர்க்கட்சித் தலைவர் கவலை !

தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல், செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கிறது எனவும், போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் பெட்டிகளைக் கொண்ட பைகள் மாத்திரமே காணக்கிடைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளை கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து கூட இல்லாத பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது எனவும் தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 45 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்றை இன்று (20) கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து,பெற்றோருக்கு உணவளிக்க வழியில்லாத நிலையில்,பாடசாலை பைகளை பரிசோதிப்பதை விடுத்து,அவர்களுக்கு சரியான போஷாக்கை அளிக்கும் திட்டத்தை தயாரிப்பதே அரசாங்கத்தின் பணியாக இருக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்நாட்டில் உள்ள 43 இலட்சம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பாடசாலை காலத்தில் போஷாக்கான உணவுவேளையொன்று வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா,நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் வீசப்பட்டபோது,அந்நகரங்களில் பெரும் அழிவுகள் நிகழ்ந்த போதிலும்,நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் ஜப்பான் மீண்டும் தலை தூக்கி உலகின் சக்தி வாய்ந்த நாடாக மாறியதாகவும்,பின்லாந்து போன்ற நாடுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னோக்கிய கல்வித் திட்டங்களை உருவாக்கி மேம்பட்ட கல்வி பயணத்தை செயல்படுத்தி வருவதாகவும்,கல்வியை வலுப்படுத்தியதன் மூலம் வியட்நாம் போன்ற நாடுகள் தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காலங்காலமாக, நம் நாட்டில் ஒரு மனப்பாட கல்வி முறையே உள்ளதாகவும், நம் நாட்டிற்கு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் கல்வி முறையொன்றே தேவைப்படுவதாகவும், தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போஷாக்கில்லாத ஒரு சமூகமாக இந்த பாடசாலை மாணவர்கள் உருவெடுத்துள்ளதாகவும்,அவர்களுடைய சாப்பாட்டு பெட்டிகளை பரிசோதனை செய்வதை விட்டு அவர்களுக்கு எவ்வாறான திட்டங்களை வழங்க முடியும் என்று அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் இந்த நாட்டினுடைய அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு, இலவச சீறுடை திட்டங்களை வழங்கிய ஒரு ஜனாதிபதி எனவும், இந்நாட்டில் இருக்கக்கூடிய நாற்பத்து மூன்று இலட்சம் மாணவர்களுக்கும் அவ்வாறான திட்டங்களை தான் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையர்களாக சகோதரத்துவத்தோடு, நட்புறவோடு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மனோபாவத்துடன் நாமனைவரும் செயற்பட வேண்டும் எனவும், இலங்கை பெஸ்ட் என்பது எங்களுடைய ஒரு வேலைத்திட்டமாக இருப்பதாகவும், இருநூற்று இருபது இலட்சம் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நாட்டை உலகில் முதலிடத்திற்கு ஸ்தானப்படுத்துவதே தங்களுடைய கருத்திட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டோராவில் கூறப்பட்ட வெளிநாடுகளில் உள்ள டொலர்களை இலங்கைக்கு கொண்டு வாருங்கள் – எதிர்க்கட்சித் தலைவர்

மோசடி தொடர்பாக பண்டோராவில் வெளியான தகவலின் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள டொலர்களை இலங்கைக்கு கொண்டுவருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை கொண்டுவருவதன் மூலம் டொலர் தட்டுப்பாட்டை சரி செய்யலாம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன் மூலம் மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடும், டொலர் நெருக்கடியும் தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்யாமல் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் கடன் வாங்குவது பிரச்னைக்கு தீர்வாகாது என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச வளங்களும் அரச சொத்துக்களும் மீட்கப்பட வேண்டும் என்றாலும் தற்போதைய அரசாங்கம் அதற்காக செயற்படும் என்ற நம்பிக்கை இல்லை என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

உயர்தர மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை பூர்த்தி செய்யாது பரீட்சை வைக்கிறார்கள் – சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு !

பாடத்திட்டத்தை உரிய வகையில் பூர்த்தி செய்யாது, உயர்தர பரீட்சையினை நடத்த முற்படுவது, மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹட்டனில் நேற்று (16) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர், பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்யாது எவ்வாறு பரீட்சையினை நடத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் காரணமாக இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், அதனை பெற்றுக்கொள்வதில் மாணவர்களுக்கு பாரிய அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தன.

சிலருக்கு தொழில்நுட்ப வசதிகள் கிடைத்திருக்கவில்லை. ஆனால் முழுமையான பாடத்திட்டத்தையும் உள்ளடக்கியவாறு பரீட்சைகளுக்கான வினாப்பத்திரங்களை தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.