எல்லாவல மேதானந்த தேரர்

எல்லாவல மேதானந்த தேரர்

“பிரபாகரன் போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள், அம்மக்களை மீண்டும் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.” – மேதானந்த தேரர் விசனம் !

விடுதலிப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள், அம்மக்களை மீண்டும் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றனர் என தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

புராதன பௌத்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் மக்களை குடியேற்றுவதற்காக அவர்கள் தவறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கு இணக்கம் வெளியிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும் பாவத்தை செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குருந்தூர், திரியாய ஆகிய விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் பௌத்தர்கள் அல்லாதவர்களை குடியேற்றுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை மற்றும் திரியாய ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை தொல்பொருளியல் திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருப்பதை தவிர்த்து அதற்கு உரித்துடைய தமிழ் மக்களிடத்தில் கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி கடந்த 8ஆம் உத்தரவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மனதுங்க, பதவி விலகியுள்ள நிலையில், எல்லாவல மேதானந்த தேரர் குறித்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் குறித்த காணிகளை வழங்கப்போவதில்லை என்றும் காணிகள் பற்றிய விடயத்தினை முழுமையாக ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மறுக்கடிதம் அனுப்பியியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு -கிழக்கு தமிழர் தாயகம் எனவும், பூர்வீகம் எனவும் நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை – விக்கினேஸ்வரனின் கருத்துக்கு மேதானந்த தேரர் பதிலடி !

வடக்கு -கிழக்கு தமிழர் தாயகம் எனவும், பூர்வீகம் எனவும் நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை ,  பெரும்பான்மையின மக்களுக்கு அவர்கள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது எச்சரிக்கை கலந்த தொனியில்  கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் முதல் சுதேசிகளின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் எனவும் விக்கினேஸ்வரன் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை” இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. மாறாகப் பிரச்சினைகள்தான் உருவாகும்”  எனவும் அவர் தெரிவித்தார்.

“ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமை இருக்கின்றது.ஆனால் வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டு உரிமையாளருக்குக் குழப்பம் விளைவிக்கக்கூடாது. இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். பெரும்பான்மையின மக்களுக்கு அவர்கள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது.” எனவும் அவர் அழுத்த திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.