எஸ்.ஜெய்சங்கர்

எஸ்.ஜெய்சங்கர்

“மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும்” – ஜீவன் தொண்டமானிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதி !

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று (07.01.2021) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடுகளுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புகள் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கேல் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ,நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

“இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” – கூட்டமைப்பிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி !

“இலங்கைத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். குறித்த சந்திப்பு இன்று காலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

TNA

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒருமித்த நாட்டுக்குள்தான் தமிழர்கள் தீர்வு கேட்கின்றார்கள். எனவே, அவர்களின் அபிலாஷைகளான நீதி, சமாதானம், சமத்துவம், கௌரவம் உள்ளடங்கலான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது இலங்கை அரசின் பிரதான கடமை என்பதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான சந்திப்பில் நான் எடுத்துரைத்துள்ளேன்.

மாகாண சபை முறைமையில் மாற்றம் வேண்டாம் எனவும், விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை அரசிடம் நான் வலியுறுத்தியுள்ளேன்.

இந்தியாவினதும் இலங்கையினதும் இணக்கத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதை இலங்கை அரசின் கவனத்துக்கொண்டு வந்துள்ளேன்.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளைச் செய்யும். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனில் இந்தியா அதிக சிரத்தை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது கூட்டமைப்பு சார்பாக இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.