பொருளாதார யுத்தத்துக்கு முகம்கொடுத்திருக்கும் எமது நாட்டை அதில் இருந்து மீட்கும் பயணத்தில் இஸ்ரேலை முன்மாதிரியாக்கொண்டு இணைந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடமும் அநுரகுமார திஸாநாயக்கவிடமும் இளைஞர் யுவதிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
இஸ்ரேலில் இடம்பெற்று வரும் யுத்தத்தின் மூலம் எங்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த முன்மாதிரியான விடயங்கள் இருக்கின்றன. அதுதான் இஸ்ரேல் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் தேசிய இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொண்டு நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினையில் ஒன்றாக இணைந்து செயற்பட அவர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசியல் பேதங்களை பின்தள்ளிவிட்டு ஒன்றாக இணைந்துசெயற்பட இஸ்ரேல் தற்போது எடுத்துள்ள தீர்மானம் இலங்கைக்கு சிறந்த முன்மாதிரியை வழங்குகிறது.
இலங்கை பொருளாதார ரீதியில் யுத்தம் ஒன்றுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் இலங்கையிலும் எதிர்க்கட்சிக்கும் வேறு அரசியல் கட்சிகளுக்கும் தற்போது இருக்கும் பொறுப்பு இதுவாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அதேபோன்று வெளிநாடுகளில் இருக்கும் இஸ்ரேல் இளைஞர் யுவதிகள் தங்களின் நாட்டுக்கு வந்து, தற்போது நாட்டுக்காக செயற்பட தயாராகி வருகின்றனர்.
தங்கள் நாடு நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நேரத்தில் இளைஞர் யுவதிகள் தங்களின் கடமையை செய்வதற்கு முன்னுக்கு வருகிறார்கள். இதுவும் எமது நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த முன்மாதிரியாகும்.
அதனால் இஸ்ரேலை முன்மாதிரியாக்கொண்டு நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கு இணைந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடமும் அநுரகுமார திஸாநாயக்கவிடமும் இளைஞர் யுவதிகளிடமும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.