ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தி

துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்திய சஜித் பிரேமதாச ஆதரவாளர்கள் !

கடையொன்றில் வைத்து துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாவலப்பிட்டியில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
மேற்படி தாக்குதல் சம்பவம் அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
நாவலப்பிட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள கடிகாரம் பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளரின் மகனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதோடு, நேற்று (15) முற்பகல் 11 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் ஆதரவாளர்கள் குழுவுடன் குறித்த கடைக்கு சென்று மேற்படி இளைஞனிடம் துண்டுப் பிரசுரம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் அதனை வாங்க மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞன், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுதோடு, வைத்தியசாலையில் பொலிஸாரிடம் முறைப்பாட்டை வழங்கியதன் பின்னர் இன்று (16) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை – தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் உள்ளது. ஆகவே இந்த செயல்முறையில் தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை என சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளோம். அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதுடன். மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) இன்று கண்டியில் வெளியிடப்பட்டது.

 

இதிலேயே இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

மேலும்,6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் மேலும் அதிகபட்ச நிதி திறன் மற்றும் செயல்திறனுடன் மாகாண சபைகள் செயல்படுவதை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம். பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாகத் தகுதியற்றவர் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே டபாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாகத் தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் இன்று (8) தீர்ப்பிட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

டயனா கமகே பிரித்தானியப் பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டு பாராளுமன்றில் அமர்வதற்கு சட்டரீதியாகத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளைடயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

அனுரகுமார – சஜித்பிரேமதாஸ இடையே விவாதத்தை நடத்துவதற்கு நாம் தயார் என சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் அறிவிப்பு !

தேசிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான விவாதத்தை நடத்துவதற்கு தமது சங்கம் தயாராக இருப்பதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான விவாதத்தை சட்டக்கல்லூரி வளாகத்தில் நடத்தவும், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க விருப்பம் தெரிவித்து அக்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கட்சிக்கும் இடையில் நடைபெறவுள்ள விவாதத்தை சட்டக்கல்லூரியில் நடத்துமாறு தமது சங்கம் இரு கட்சிகளின் தலைவர்களிடம் முன்மொழிந்துள்ளதாக இலங்கை சட்டக்கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவர் நவோத் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கும் ,ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த விவாதத்தின் ஊடாக இலங்கை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு முன்வைக்கும் பொருளாதார கொள்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வாய்ப்புள்ளதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விவாதம் செய்ய நான் தயார் – திகதிகளை குறித்து சஜித்பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பிய அனுர குமார திசாநாயக்க !

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி நேற்று(22) அறிவித்துள்ளது.

அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு தேசிய மக்கள் சக்தி கடிதமொன்றை அனுப்பியது. அதற்கமைய மே மாதம் 7, 9, 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

திகதியை தெரிவு செய்ததன் பின்னர் நேரம், விவாதத்திற்கான காலப்பகுதி, இடம் மற்றும் விவாதம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி என்பன தொடர்பில் தீர்மானிக்க முடியும் என தேசிய மக்கள் சக்தி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு வகையில் விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கவில்லையாயின் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதத்திற்கான திகதி இதுவரையில் நிர்ணயிக்கப்படாமையின் காரணமாக மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வற் வரியை அதிகரிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. – கலாநிதி ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வற் வரியை அதிகரிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது போக்குவரத்து சேவை, கல்வி, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது வரி விதிக்க வேண்டாம் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. திரிபோஷா, முட்டை உட்பட உணவு பொருட்களுக்கு வரி விதிக்குமாறு நாணய நிதியம் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. புதிய வரிக் கொள்கையினால் சமூக கட்டமைப்பு மிக மோசமாக பாதிப்படையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெறுவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம். ஆனால், முறையான தரப்படுத்தல்களுக்கு அமைய தீர்மானங்களை எடுக்காமல அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுமாக இருந்தால் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

மொத்த தேசிய உற்பத்தியை 15 சதவீதமாக அதிகரித்துக்கொள்ளாவிட்டால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சியில் மொத்த தேசிய உற்பத்தி 20 சதவீதமாக இருந்தது. அதனை தொடர்ந்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எடுத்த தவறான தீர்மானங்களினால் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளானது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தூரநோக்கமற்ற வகையில் எடுத்த தவறான தீர்மானத்தினால் 600 பில்லியன் ரூபா முதல் 700 பில்லியன் ரூபா வரையான வரி வருமானம் இழக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றது. பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு உயர்நீதிமன்றம் உறுதியான பதிலளித்துள்ளது.

ராஜபக்ஷர்கள், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், லக்ஷ்மன், திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களும் தற்போது தெளிவடைந்துள்ளார்கள்.

பெறுமதி சேர் வரி (வற்) தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் நேரடியாக எதனையும் குறிப்பிடவில்லை. அடுத்த ஆண்டு முதல் 15 சதவீதமாக உள்ள வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படும். தற்போது பூச்சியமாக உள்ள வரி வீதம் அடுத்த ஆண்டு முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்பதை வெளிப்படைத்தன்மையுடன் குறிப்பிடுங்கள்.

வற் வரி தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் கலந்துரையாடப்பட்டது. ஆனால் குழு பரிந்துரைத்த விடயங்களை அரசாங்கம் செயற்படுத்த தயாரில்லை. அடுத்த ஆண்டு முதல் திரிபோஷா, முட்டை உட்பட சகல உணவுப் பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வற் வரி அதிகரிக்கப்படுவதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது வரி விதிக்க வேண்டாம் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

திரிபோஷா, முட்டை ஆகியவற்றுக்கு வரி விதிக்குமாறு நாணய நிதியம் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை.

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதாக குறிப்பிட்டுக்கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். ஆனால் தற்போது வற் வரிக்குள் மண்வெட்டி கூட உள்ளடக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி திட்டம் முறையற்ற வகையில் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தற்காலிகமானதே தவிர நிலையானதல்ல. புதிய வரிக் கொள்கையினால் அடுத்த ஆண்டு சமூக கட்டமைப்பு மிக மோசமாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தாக்கப்பட்ட விவகாரம் – விசாரணை குழு நியமனம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்தார்.

 

இந்த விடயம் தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் 07 ஆம் திகதி சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (20) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சபாநாயகர் குழுவொன்றை அமைத்துள்ளார்.

 

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸவின் தலைமையிலேயே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

இந்த குழுவில் ஆளுங்கட்சி சார்பில் சமல் ராஜபக்ஸ மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

எதிர்க்கட்சி சார்பில் கயந்த கருணாதிலக்கவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

“அரச வருமானத்தை விட அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் அதிகம்.”- அசோக அபேசிங்க

அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக கணக்கு போட்டால் அது அரச வருமானத்தை விட அதிகம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் அரசின் வருமானம் 2 மில்லியன் கோடி என்றும் அரச வருமானத்தை விட அதிக ஊழல் மோசடிகள் அரச நிறுவனங்களில் நடந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க கணக்குகள் குழுவின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அசோக அபேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

100 வருடங்களாக அரசாங்க கணக்குகள் குழு இந்த விடயங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிவித்த போதும் அவை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு ஊழல் செய்தவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அடைந்த நஷ்டத்தை மீட்பதற்கோ, வழக்கு தொடரவோ இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

“இளைஞர் யுவதிகளுக்கு Wi-Fi இலவசமாக வழங்குவதாக கூறிவிட்டு ஊடக சுதந்திரத்தை முடக்குகிறார் ஜனாதிபதி ரணில்.” – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு !

“சர்வதேச  விசாரணையை ஒருபோதும் ஏற்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவை போல் கருத்துரைத்தது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.”என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளுக்காக ஆளும் தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை புகழ்பாடுகிறார்கள். ஜனாதிபதிக்கும் எமக்கும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித முரண்பாடும் கிடையாது.ஆனால் கொள்கை ரீதியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்களின் எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. மக்களின் போராட்டத்தை தடுப்பதற்காக தற்போது நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இளைஞர் யுவதிகளுக்கு வை-பை இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சமூக ஊடகங்களை முடக்குவதற்காக சட்டம் கொண்டு வர முயற்சிப்பது கவலைக்குரியது.

ஜேர்மனிய ஊடகத்துக்கு ஜனாதிபதி வழங்கிய நேர்காணல் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. நேர்காணலில் ஜனாதிபதி குறிப்பிட்ட விடயங்களை கொண்டு ஆளும் தரப்பினர் உற்சாகமடைந்துள்ளார்கள். நேர்காணலின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போல் கருத்துரைத்தார்.

ஜனநாயகத்தை முடக்கி,சர்வதேசத்தை  பகைத்துக் கொண்டு ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. பொதுஜன பெரமுனவினர் கடந்த ஆண்டு லி குவான்யூ , மாத்தீர் மொஹமட் ஆகியோர் என்று குறிப்பிட்டுக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை களமிறக்கி,நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ராஜபக்ஷர்கள் தலைமறைவாகி உயிரை பாதுகாத்துக் கொண்டார்கள். அடுத்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்கி மீண்டும் பாடம் படித்துக் கொள்ள போகிறார்கள்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை அரசாங்கம் உணர்வுபூர்மாக ஆராய்வதில்லை. எண்ணம் போல் விலையேற்றத்தை இலக்காக கொண்டுள்ளது. மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க  அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீண்டும் மின்கட்டணம் அதிகரித்தால் தென்னாசியாவில் அதிக மின்கட்டணம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தை பிடிக்கும்.

தற்போதைய மின்கட்டண அதிகரிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது. பெறும் வருமானத்தில் மக்களால் எவ்வாறு வாழ முடியும். மக்களின் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டால் பாரிய எதிர்விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

“வங்கிகளில் கடன் பெற்றுள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வட்டி வீதத்தை குறைப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – ஹர்ஷடி சில்வா

“வங்கிகளில் கடன் பெற்றுள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வட்டி வீதத்தை குறைப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் வங்கிகள் பெறும் லாபம் தொடர்பாக சனிக்கிழமை (8) அவரது இல்லாத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொண்டுள்ளதன் மூலம் வங்கிகள் அவர்களின் வட்டியை குறைத்துக்கொள்ள முடியும். ஏனெனில் அனைத்து வட்டி வீதங்களும் நூற்றுக்கு 10 வீதத்தால் குறைந்துள்ளது. அதனால் வங்கிகளில் கடன் வட்டிகள் எவ்வாறு குறைவடைந்திருக்கிறது என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கிகள் பண வைப்பாளர்களின் வட்டியை குறைத்திருக்கின்றன. ஆனால் கடன் பெற்றவர்களின் வட்டியை குறைக்கும் விடயத்தில் மலினப்போக்கை கடைப்பிடித்து வருவதாகவே இருக்கிறது.

அதனால் வங்கிகளில் கடன் பணத்துக்கான வட்டி குறைக்கப்பட வேண்டும் என்ற இந்த விடயத்தை மத்திய வங்கி ஆளுநருக்கும் தெரிவித்தோம். அதற்கு மத்திய வங்கி ஆளுநர் அதனை ஏற்றுக்கொண்டார். அதேநேரம் வங்கி பிரதானிகளுக்கும் வட்டி குறைப்பு விடயமாக தெரிவித்திருக்கிறார். வங்கிகள் இதனை செய்ய தவறினால்,வங்கிகளை ஒழுங்கு முறை மூலம் அதனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தற்போது ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் போது அதன் சுமையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். என்றாலும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு மாத்திரமே இதனை மேற்கொள்வதாக தெரிவித்து, வங்கிகளை இதில் இருந்து கைவிட்டார்கள்.

இதனால் கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு பங்குச்சந்தைகள் திறக்கப்பட்ட முதல் தினத்தில் அனைத்து வங்கிகளிலும் பங்குச்சந்தை வியாபாரம் நூற்றுக்கு 25வீதம் விலை அதிகரித்தது. அதனால் வங்கிகளில் பங்குச்சந்தைகள் பாரியளவில் லாபம் ஈட்டி வருகின்றன.அதனால் அவர்கள் ஈட்டிவரும் பாரிய லாபத்தில் இருந்து, வங்கிகளில் கடன் பெறும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.

எனவே வங்கிகளில் பெறும் கடனுக்கான வடடி வீதத்தை குறைக்கும் நடவடிக்கையை மத்திய வங்கி ஆளுநர் மேற்கொள்வார் என நாங்கள் நம்புகிறோம்,. அவ்வாறு இடம்பெறாவிட்டால் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்காக நாங்கள் இந்த விடயத்தை கையில் எடுப்போம். சாதாரண வியாபாரிகளுக்கு அநீதி ஏற்பட நாங்கள் இடமளிக்கப்போவதில்லை.