ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்

ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்

ஈழ விடுதலை போராட்டத்தில் சகோதர படுகொலைகள் மூலம் கொல்லப்பட்ட அனைவருக்கும் சிலை – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்

ஈழ விடுதலை போராட்டத்தில் போராடி உயிர் நீத்த அனைவருக்கும் சிலை வைக்க நடவடிக்கை எடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , இலங்கை அரச படைகளாலும் , சகோதர படுகொலைகள் மூலமும் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக எனும் ஒரு நோக்கத்திற்காக போராட வெளிக்கிட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிலை வைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்போம்.

ஈழ விடுதலைப்போராட்டம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுத போராட்டங்கள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு அதனை மீறியும் காலம் கடந்தும் ஆயுத போராட்டம் சென்றுள்ளது. ஆனாலும் ஈழ விடுதலைப்போராட்டத்தில் போராடிய அனைவருக்கும் தான் சிலை வைப்போம்.

போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒரு பொது தூபி அமைக்கப்பட்டு , ஒரு பொது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு , அந்நாளை விடுமுறை நாளாக அறிவிப்பதற்காக நல்லாட்சி காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்து இருந்தமைக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் வாழங்கியிருந்தாலும் இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்தார்.