தை பிறந்தால் லைக்காவில் வேலை போகும்! 60 மில்லியன் பவுண் வரி நிலுவை! அரசியலிலும் சறுக்கல்! வியாபாரத்திலும் சறுக்கல்!
தை மாதம் 31 திகதி லைக்காவின் பணியாளர்கள் 316 பேர் வேலையை இழக்க உள்ளனர். பிரித்தானியாவில் பணியாற்றுகின்றவர்களில் 90 சதவீதமானவர்கள் வேலைநீக்கப்பட, 50க்கும் உட்பட்டவர்களே பிரித்தானியாவில் இருந்து பணியாற்ற உள்ளனர். 2022 இல் லைக்கா நிறுவனம் 24 மில்லியன் பவுண்கள் நட்டமடைந்ததாக கணக்கியல் கோவைகள் தெரிவிக்கின்றது. அத்தோடு கடந்த ஆண்டு பிரான்ஸ் நீதிமன்றம் லைக்கா மோபைல் எட்டாயிரம் பவுண்களுக்கு அதிகனான தொகை வரி செலுத்தவேண்டும் என உத்தரவுவிட்டிருந்தது. அத்துடன் லைக்கா மோபைல் நிதிமோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றசம்சாட்டியிருந்தது. மேலும் பிரித்தானிய நீதி மன்றம் லைக்கா மோபைல் நிறுவனம் 51 மில்லியன் பவுண்கள் வரி செலுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி அண்மையில் தீர்ப்பளித்து இருந்தது.
லைக்கா சுபாஸ்கரனும் லிப்பரா பாஸ்கரனும் 2000ம் ஆண்டுகளில் தொலைபேசி அட்டை விநியோகத்தில் போட்டாபோட்டியாக வளர்ந்தவர்கள். இவர்களுக்கு கீழ் இயங்கியவர்கள் மற்றவர்களது தொலைபேசி அட்டை விற்பவர்களைத் தாக்குவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான ஒரு சம்பவத்தில் லிப்பரா நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கண்டு வசீகரன் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். அன்று 2008இல் அவர் தேசம்நெற்றை அணுகியதால் இச்செய்தி எமது சகோதரப் பத்திரிகையான லண்டன் குரலில் வெளியிடப்பட்டு வசீகரனுக்கு நட்டஈட்டையும் இரு நிறுவனங்களும் வழங்கியது.
இது பற்றி தேசம்நெற்க்குத் தெரிவித்த வசீகரன் தற்போது தனது இடது கண் பார்வையை இழந்துவிட்டதாகவும் 2008இல் நடந்த சம்பவங்களை மீளவும் எண்ணிப்பார்த்தார். மேற்படி வன்முறைச் சம்பவம் பிரித்தானியாவின் மன்செஸ்ரர் பகுதியிலேயே இடம்பெற்றது.
இருபது ஆண்டுகளுக்கு முன் தங்கள் வியாபார விளம்பர நிலைகளுக்காக மல்லுக்கட்டிய இரு நிறுவனங்களும் கடந்த இருபது ஆண்டுகளில் அமோக வளர்ச்சியை எட்டின. லிப்பரா பாஸ்கரன் மொபைல் வியாபாரத்தை விற்று முற்றிலும் தமிழ் சூழலுக்குள் தனது எஞ்சிய காலத்தை கழிக்க எண்ணியுள்ளார். விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட ஐபிசி ஊடகத்தை பொறுப்பேற்ற பாஸ்கரன் ஒரு முதலமைச்சர் கனவோடு இயங்கி வருகின்றார். இவரது கனவை குலைத்து வரும் எம்ஏ சுமந்திரனை ஐபிசி பாஸ்கரன் முழுபலம் கொண்டு ஓரம்கட்ட முனைந்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். எம் ஏ சுமந்திரனை தமிழ் தேசத் துரோகியாக்கியதில் பாஸ்கரனின் பங்கு அளப்பெரியது. ஆனாலும் ஐபிசி பாஸ்கரன் எதிர்பார்த்தது போல் தமிழரசுக் கட்சியை தன் பண, ஊடக பலத்தைக் கொண்டு தோற்கடிக்க முடியவில்லை. சுமந்திரனையும் கட்சியை விட்டு துரத்த முடியவில்லை. இப்போதும் ஐபிசி பாஸ்கரனின் முதலமைச்சர் கனவுக்கான தடை விலகவில்லை.
மாறாக அல்லிராஜா சுபாஸ்கரன், நேரடியாக அரசியலில் குதிக்கும் ஆர்வத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அரசியலில் தான் ஒரு ‘கிங்மேக்கர்’ ஆக வரவேண்டும் என்ற ஆசை நிறையவே உள்ளது. லண்டனில் 24 மில்லியன் பவுண்கள் நட்டக் கணக்கு 2022இல் காட்டப்பட்டாலும் இலங்கைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்தார். தமிழ் பொது வேட்பாளராக சங்கு அரியநேந்திரன் நிறுத்தப்பட்டு அவரது வெற்றிக்கு நிதி வாரி வழங்கப்பட்டது. மறுபுறம் ஜனாதிபதி ரணிலுடைய தேர்தல் பிரச்சார நிதியையும் அல்லிராஜா சுபாஸ்கரனே வழங்கியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றியை உறுதிப்படுத்தவே தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதனை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்தவர்கள் முற்றாக மறுக்கின்றனர்.
மேலும் பாராளுமன்றத் தேர்தலிலும் தெற்கில் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 15 லட்சம் சமபளம் கொடுத்து ஒலிவாங்கியில் போட்டியிட்டவைத்தார். வடக்கில் சங்கு சின்னத்தில் முதலீடு செய்தனர். சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக அது முடிந்தது. அதன் பாராளுமன்ற உறுப்பினர்களில் செல்வம் அடைக்கலநாதனைத் தவிர ஏனையவர்கள் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களை இழந்தனர். வி ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் நிதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வியாபராத்தில் சறுக்கினார்களோ அல்லது கணக்குப் புத்தகத்தை சறுக்க வைத்தார்களோ என்பது எல்லாம் ‘லிங்க பூசை’ ஆசாமி புலிக்கள் முரளிகிருஸ்ணனுக்குத் தான் வெளிச்சம். ஆனால் அரசியலில் சாண் ஏறாமலே முழம் சறுக்கியது. ‘ஒருவன்’ என்று தற்போது ஒரு ஊடகத்தையும் ஆரம்பித்துள்ளார்கள்.
ஆரம்பத்தில் வெக்ரோன் தொலைக்காட்சியை நடத்தியவர்கள் தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒருவன் என்ற ஊடகத்தை ஆரம்பித்துள்ளனர். பணம் பலதும் பத்தும் செய்யும் என்பதற்கு லைக்கா சிறந்த உதாரணம்.
லைக்காவுடைய பெரும்பாலான வர்த்தகச் செயற்பாடுகள் தற்போது இந்தியா நோக்கி நகர்த்தப்படுகிறது. ஏற்கனவே ஐரோப்பாவில் 60 மில்லியன் பவுண்கள் வரி நிலுவை இருக்கின்ற போது எப்படியும் எதிர்காலத்தில் இந்நிறுவனம் மீதான செயற்பாடுகள் இறுக்கமடையும். அதனால் செலவுக்குறைப்புக்கான செயற்பாடு என்ற பெயரில் லைக்கா இந்தியாவை நோக்கி நகர்கின்றது. மேலும் லைக்கா நிறுவனம் சினிமாவிலும் கணிசமான முதலீடுகளைக் கொண்டுள்ளதால் அவர்கள் இந்தியா – தமிழகம் நோக்கி நகர்கிறார்கள்.