கஜேந்திரன்

கஜேந்திரன்

“போலியான செயற்பாடுகளால் சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை அரசு.”- கஜேந்திரன் சாடல் !

“அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் வருகின்ற நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.”என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தமிழ் அரசியல் கைதிகள் 10 தொடக்கம் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடுகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கத் தரப்பு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் வருகின்ற நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது சர்வதேச நியமங்களுக்கு முரணாக மோசமான சட்டம் என்பதை ஐநா மனித உரிமை பேரவை உட்பட பல்வேறுபட்ட சர்வதேச சமூக அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான பல்வேறுபட்ட விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளன.

நாங்கள் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம்.இத்தகைய நிலையில் அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தாங்கள் இதனை மாற்றி அமைப்போம் என்று வாக்குறுதிகளை வழங்கி உள்ளார்கள்.

ஆனால் இன்று வரை அந்த சட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை. எங்களுடைய நிலைப்பாடு இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். இந்த சட்டம் முழுமையாக நீக்கப்படும் போது அதன் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை மாற்றி அமைக்கிறோமெனக் கூறிக்கொண்டு பலவித ஏமாற்று வித்தைகளை செய்துவருகின்றது.

குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் 16 அரசியல் கைதிகளை விடுவித்துள்ளார்கள். விடுவிக்கப்பட்டவர்கள் ஆறு மற்றும் எட்டு மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்பட வேண்டியவர்களைத் தான் இந்த அரசாங்கம் விடுவித்தது. மாறாக நீண்டகாலமாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்டகால கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர்கள் நெருங்கி வருகின்ற வேளையில் புலிகளை மீளுருவாக்க முயற்சித்தார்கள், சமூக வலைத்தளங்களில் பிரபாகரனின் படத்தை காண்பித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சுமார் 100 பேர் வரை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து விட்டு அரசியல் கைதிகளை விடுவித்தது போன்று போலியான முகத்தை காண்பிப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சர்வதேச சமூகம் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையான கண்காணிப்பை செய்ய வேண்டும். சிறைச்சாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அங்கங்கவீனர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என பலதரப்பட்டவர்கள் உள்ள நிலையில் இவர்கள் உள ரீதியாக தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்களை விடுவிப்பதற்கும் அனைத்து அரசியல்கைதிகளையும் விடுவிப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத்தலைவர் என குறிப்பிடதால் குழம்பியடித்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் !

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசிய தலைவர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், குறிப்பிட்டதை அடுத்து  நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கை நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை மறுக்கும் வகையில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ”தேசிய தலைவர்” என்ற பதத்தை பயன்படுத்தினார்.

இதன்போது பெண் ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல எழுந்து, பயங்கரவாத தலைவர் ஒருவரை இலங்கையின் நாடாளுமன்றத்தில் தேசிய தலைவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன் நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து செல்வராஜா கஜேந்திரனின் கருத்துக்களை நீக்குமாறும் சீத அரம்பேபொல கோரிக்கை விடுத்தார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கருத்துரைத்த போது,

அது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் உரிமை என்று குறிப்பிட்டார். எனினும் கஜேந்திரனின் கருத்தை நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து நீக்குவது தொடர்பில் தாம் சபாநாயகருக்கு தெரியப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து ஏனைய ஆளும் கட்சி உறுப்பினர்களும் தேசிய தலைவர் என்ற பதத்தை நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து நீக்கவேண்டும் என்று சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அதனை சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரான வேலுக்குமார்  ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், தமக்கிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், இந்த விடயத்தை சபாநாயகருக்கு அறிவிக்க மாத்திரமே முடியும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு மத்தியில் உரையாற்றிய, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு கருத்துக்கள் இருக்கமுடியும். எனினும் அந்த கருத்துக்களை ஏனைய உறுப்பினர்களால் பலவந்தமாக மௌனிக்கச் செய்யமுடியாது என்று குறிப்பிட்டார்.

“கஜேந்திரனை கைது செய்த காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“கஜேந்திரனின் நாடாளுமன்ற சிறப்புரிமையை அவமதித்த யாழ். காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மற்றும் நேற்றைய சம்பவத்தோடு தொடர்புடைய ஏனைய காவற்துறையினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபனின் நினைவுத் தூபிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனியாகத்தான் சென்றார். மக்களை அணிதிரட்டவில்லை. வருடா வருடம் குடும்பத்தோடு அமைதியாக அஞ்சலி செலுத்துவார். அதுபோல் இம்முறையும் கடந்த நாட்களாக அஞ்சலி செலுத்தி வந்தார். ஆனால், நேற்றைய தினம் அஞ்சலி செலுத்த முயன்றபோது அங்கிருந்த காவற்துறையினர் தடுத்தனர். எதற்காகத் தடுக்கிறீர்கள்? நீதிமன்ற தடை உத்தரவு  உள்ளதா? என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், காவற்துறையினரிடம் வினவினார். எனினும், காவற்துறையினர் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர முடியாது எனக்  கூறியே அவ்விடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனைக் கைதுசெய்தனர்.

எனினும், கஜேந்திரன் கைது செய்யப்பட்டு விடுவிக்கும் நேரத்தில்  “நினைவுகூர்வது தவறு என நாங்கள் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாலே கைதுசெய்தோம்” என்று காவற்துறையினர் கூறினர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் . அவ்விடத்தில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றியே நினைவேந்தல் செய்ய முற்பட்டார். காவற்துறையினருக்கும் தனக்கும் இடையில் ஒரு சமூக இடைவெளியைக் கூட அவர் பின்பற்றியிருந்தார். ஆனால்,காவற்துறையினரே தனிமைப்படுத்தல் விதிகளை மீறிச் செயற்பட்டனர். அராஜகமாக கஜேந்திரனின் உடலைப் பிடித்து, காலால் தட்டி கலவரம் போன்ற நடவடிக்கைகளை காவற்துறையினர் மேற்கொண்டனர்.

அவர் கைது செய்யப்பட்டதை அறிந்து அவ்விடத்துக்குச் சென்ற எமது கட்சியின் இரு பெண் உறுப்பினர்கள் காவற்துறையினரால் சட்டவிரோதமாகக் கையாளப்பட்டனர். கொரோனா விதிமுறைகளை மீறியதாக கஜேந்திரன் கைது செய்யப்பட்டிருந்தால் அவர் அந்த நினைவிடத்துக்குச் சென்ற போதே கைதுசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஏன் கற்பூரம் ஏற்றி நினைவேந்தல் செய்ய முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டார்?

கஜேந்திரனை கைது செய்தமைக்கு கொரோனா விதிமுறைகள் காரணமல்ல நினைவேந்தல் செய்தமையே காரணம் எனத் தெரிகின்றது. ஏனெனில் நினைவேந்தல் மேற்கொண்ட இடத்தில் கஜேந்திரன் மாத்திரம் இருக்கவில்லை. ஊடகவியலாளர்கள் இருந்தார்கள். திலீபனின் நினைவிடத்தில் காவற்துறையினர் வந்தததை அறிந்ததும் பல பொதுமக்களும் கூடினார்கள். கொரோனா விதிமுறைகளை மீறியதாக கஜேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திருந்தார்கள் எனில் ஏன் அங்கு கூடிய மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உண்மையில் கஜேந்திரன் சுகாதார விதிமுறைகளை மீறவில்லை. அவர் நினைவேந்தல் மேற்கொண்டமைக்காவே கைதுசெய்யப்பட்டார்.

யாழ். காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மற்றும் நேற்றைய சம்பவத்தோடு தொடர்புடைய ஏனைய காவற்துறையினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம். எதிர்வரும் 27 ஆம் திகதி காவற்துறையினரின் நடவடிக்கைகளைப் பொறுத்து எமது நடவடிக்கைகள் தொடரும். இது தொடர்பில் அடிப்படை மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

சபாநாயகருக்கும் தெரியாமல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கஜேந்திரனின் சிறப்புரிமை தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளோம். சட்டரீதியான ஆலோசனைகளையும் பெறவுள்ளோம். ஐ.நா. அமர்வுகள் நடைபெறுகின்ற நிலையில் கூட காவற்துறையினர் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். கஜேந்திரனை கண்ணியமாக அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாது கற்பூரம் கொளுத்தும்போதே காவற்துறையினர் நினைவேந்தலைத் தடுக்கும் முகமாக செயற்பட்டனர்.

தமிழ்த் தேசத்து மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்த அரசு கொடுக்கும் எந்தவொரு வாக்குறுதியையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் நாம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாகக் கூறுகின்றோம் – என்றார்.

“மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்ற நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது” – கஜேந்திரன்

“மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்ற நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.

இன்று(18.01.2021) மண்டதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனை கண்டித்து பொதுமக்களும் தமிழ்அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களிடம் பேசும் போதே கஜேந்திரன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

29 குடும்பங்களை சேர்ந்த மக்களும் தங்களின் சொந்த நிலங்களை இழக்க தயாரில்லை. மீண்டும் மீண்டும் மக்களை குழப்பும் விதத்தில் காணி திணைக்களம் நடந்துகொள்கின்றது. பிரதேச செயலாளர் இந்த பிரதேசத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் அவர்களிற்கு இதனை தெரிவிக்கவேண்டும்.

மீண்டும் மீண்டும் நிலங்களை அளப்பதற்கு அனுப்புகின்றனர் ஆற்றில் ஒடும் நீர் நித்திரையா முழிப்பா என பார்ப்பதற்கு கொள்ளி வைத்து பார்ப்பது போல காணித்திணைக்களம் செயற்படுகின்றது, இது மக்களை குழப்புகின்ற முயற்சி மக்களிற்கு இதில் விருப்பமில்லை என காணித்திணைக்களத்திற்கும் அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும்.

மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை அரசாங்கம் எடுக்கவில்லை,காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் தான் அலுவல்கள் இடம்பெறுகின்றன. காணித்திணைக்களத்திடம் இந்த நோக்கத்தை கைவிடுமாறு பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும். வாழ்க்கையில் கடற்படையினருக்கு காணி கொடுப்பதற்கு ஒருபோதும் மக்கள் இணங்கமாட்டார்கள் இந்த மக்களும் தங்கள் காணிகளை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என அவர் தெரிவித்தார்.

“வடக்கின் அபிவிருத்திக்காக நடப்பு ஆண்டில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை” – பாராளுமன்றில் கஜேந்திரன் !

‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் பாரிய தோல்வியொன்றைச் சந்திக்கும்”  என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம், நேற்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. குறித்த  விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த தேர்தல் காலத்தின்போது பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. சுதந்திரக் கட்சி சார்ந்தவர்கள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

பருத்தித்துறையில் இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவரின் பதவி கடந்த ஓகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உள்ள பட்டியலில் அவரின் பெயர் இருந்ததாகவும் பின்னர் வந்த பட்டியலில் இல்லையென்றும் அவர் இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதுபோன்று 600ற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன. வடபிராந்திய போக்குவரத்துத் திணைக்களத்தில் தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்தல் காலத்தில் தமக்குப் பணியாற்றியவர்கள் இவ்வாறு பதவியில் இணைக்கப்படுகின்றனர்.

இரண்டு அரசாங்கங்களும் மாறி மாறி இவ்வாறான செயற்பாடுகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட செலவீனங்களையும் தாண்டிய சட்டவிரோதமான செலவீனங்களுக்கும் சேர்த்து அங்கீகாரம் பெறுவதற்கு விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற வடமாகாண போக்குவரத்து சபையானது சீரழிந்து வருகிறது. ஏதாவது விபத்தொன்று இடம்பெற்றால் இதற்கான தீர்ப்புக்காக சம்பந்தப்பட்ட சாரதிகள் கொழும்புக்கு அனுப்பப்படுகின்றனர். ஏனைய மாகாணங்களில் அவ்வாறு இல்லை. வடமாகாணத்தின் கல்வி நிலைமை மோசமாகியுள்ளது. கல்வி நிர்வாக சேவையின் வகுப்பு ஒன்றைச் சேர்த்த வடபகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் ஆக்குகின்றோம் என்ற போர்வையில் பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் நிலைமைகள் காணப்படுகின்றன. மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகளுக்கு வசதிகள் எதுவும் இல்லை. இவ்வாறான நிலையில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் முன்பள்ளிகளை அமைத்து ஆசிரியர்களுக்கு சம்பளங்களை வழங்கி அவற்றை நிர்வகித்து வருகிறது.

மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள விடயம் வேண்டும் என்றே சீரழிக்கப்படுகின்றன. இந்த மாதிரியான முறைகேடான செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும். யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடபகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் பாரிய தோல்வியொன்றைச் சந்திக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.