கடற்தொழில் அமைச்சர்

கடற்தொழில் அமைச்சர்

“என்னுடன் கொண்டுள்ள அரசியல் பேதங்களை மறந்து வடக்கு கடற்றொழிலாளர்களின் துயரங்களை போக்க ஒன்றாகுங்கள்.” – தமிழ்தலைவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் !

இந்திய இழுவைப்படகுகள் மற்றும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத கடற்றொழில்களால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக வடமாகாண தமிழ் பேசும் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், என்னுடன் அரசியல் பேதங்களைக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் அவற்றை மறந்து வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் விடயத்தில் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருந்தால் தமிழகப் பயணத்தில் நான் பங்கேற்பதற்கு தயராகவே உள்ளேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றை தடுத்து நிறுத்தக்கோரியும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவ்விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண கடற்றொழிலாளர்கள் இந்தியா மீனவர்களின் அத்துமீறல்கள், மற்றும் சட்டவிரோதமான இழுவைப்படகு உள்ளிட்ட மீன்பிடியால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த விடயம் சம்பந்தமாக நான் தொடர்ச்சியான கரிசனைகளைச் செலுத்தி வருகின்றறேன். மேலும் குறித்த விவகாரத்தினை தீராப்பிரச்சினையாக நீடித்துச் செல்வதற்கு இடமளிப்பதற்கு நான் விரும்பவுமில்லை.

ஆகவே, உத்தியோக பூர்வமான பேச்சுவார்த்தைகள், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு அப்பால் வடமாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் பங்கேற்பைச் செய்ய வேண்டும். அவர்கள் அனைவருக்கும் தமிழகத்தின் பல்வேறு அரச மற்றும் அரசியல் தரப்பினருடன் தொடர்புகள் காணப்படுகின்றன. அந்த தொடர்புகளின் ஊடாக எமது கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

வெறுமனே, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றார்கள், இலங்கை கடற்படை தாக்குகின்றது என்ற விடயத்தினை மையப்படுத்திய பிரசாரங்களுக்கு அப்பால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாலும், இழுவைப்படகு உள்ளிட்ட சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை பின்பற்றுவதாலும் ஏற்படுகின்ற இழப்புக்கள், வளப்பறிப்புக்கள் சம்பந்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் அன்றாட மற்றும் எதிர்கால நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாகியிருப்பதையும் எடுத்துரைக்க வேண்டியுள்ளது. ஆகவே, இந்த விடயத்தில் அனைத்து அரசியல் தரப்பினரும் தமிழகத்துக்கு தெளிவு படுத்தல்களை மேற்கொண்டு இப்பிரச்சினைக்கான முற்றுப்புள்ளியைப் பெறுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் அரசியல் பேதங்களை மறந்து செயற்படுவதற்கு நான் தயராகவே உள்ளேன். எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையானதும் நிரந்தரமானதுமான தீர்வினைப் பெறுவத்கு எனது ஒத்துழைப்புக்களை அர்ப்பணிப்புடன் வழங்க தயாராகவே உள்ளேன்.

அதற்காக, வடக்கு தமிழ் பேசும் அரசியல் வாதிகள் கூட்டாக தமிழகத்துக்கு செல்வதற்கும், அவ்வாறு செல்கின்றபோது அரசியல் பேதங்களை மறந்து என்னையும் உள்ளீர்க்க விரும்பினால் நான் பங்கேற்பதற்கு தயாராகவே உள்ளேன். மேலும், இந்த விடயத்தில் அனைத்து அரசியல் தரப்புக்களும் தாம் தமிழகத்துடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளை எமது கடற்றொழிலாளர்களின் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

“தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய வேண்டும்.” – அமைச்சர் டக்ளஸ் அறிவுரை!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழிலாளர்களின் நலனுக்காக இந்திய தூதுவரை சந்திப்பதற்கான தமது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டிருப்பது அவர்களின் சுயநல அரசியலை வெளிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 

சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்காக நன்கொடையாக பெற்றுக் கொண்ட மண்ணெண்ணையை பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக இன்று வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில் முறைகளையும் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக, கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் மறுதினம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமது நிலைப்பாட்டினை அவர்கள் மாற்றியிருந்தனர். இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதி தொடர்பில் பேசக்கூடியவராக நான் இருக்கின்றேன் ! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகிய நான், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதி தொடர்பில் பேசக்கூடியவராக இருப்பதோடு, அதனூடாக வடக்கின் அபிவிருத்தி திட்டங்களை முடிந்த வகையில் செயல்படுத்துவேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் நான் மிகுந்த கரிசனையாக உள்ளதோடு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எனது பலத்தைப் பிரயோகித்து மக்களின் பிரச்சினைகளை இலகுபடுத்துவேன். வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்கு பயன் அடையக்கூடிய திட்டங்களாக செயல்படுத்துவதோடு குறித்த திட்டங்களை நான் செயற்படுத்துவதை யாரும் தடுக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்கு பயன் அடையக்கூடிய திட்டங்களாக செயல்படுத்துவதோடு குறித்த திட்டங்களை நான் செயல்படுத்துவதை யாரும் தடுக்கவும் முடியாது.

கடந்த காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் சுயலாப அரசியல் கூட்டுக்களால் தடுக்கப்பட்டதோடு மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகள் உரிய மக்களுக்கு சென்றடையவில்லை. இம்முறை தேர்தலில் வடமாகாணத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இரண்டு ஆசனங்களை மக்கள் வழங்கியுள்ளனர்.

இதன் மூலம் இருப்பதை பாதுகாத்து முன்னோக்கிச் செல்வதே எமது நிலைப்பாடாகும். தற்போது நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் சட்டியிலிருந்ததை அடுப்பில் விழ வைத்து விட்டார்கள்.

ஏனெனில் சில தமிழ் அரசியல் கட்சிகள் மக்களுக்குத் தேவையானது எது என சிந்திக்காமல் விதண்டாவாத பேச்சுக்களால் தமிழ் மக்களுக்கு இருக்கின்றவற்றை கூட இழக்கக் கூடிய நிலைக்கு இட்டுச் செல்கிறார்கள்.

இந் நிலையில் இவ் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் விளிப்படையாமல் விட்டால் அதன் விளைவுகளை மக்களே ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகி விடும் 19 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

இத் திருத்தத்தின் மூலம் அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கு தடையாக இருந்த விடயங்கள் நீக்கப்பட்டு புதிய விடயங்கள் உட்சேர்க்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.