கடல் அட்டை வளர்ப்பு

கடல் அட்டை வளர்ப்பு

கடலட்டை பண்ணைகளை அமைத்து எமது வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள் – அராலி மீனவர்கள்

அராலி பகுதி கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்,

எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பது என்பது “பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது” போலாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கே வருகை தந்த சிலர் எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள். மேலும் இவ்வாறு அட்டைப் பண்ணை அமைக்கும் முயற்சியினை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு இவ்வாறான செயற்பாட்டிற்கு இடமளிக்கவும் மாட்டோம்.

இதேவேளை எரிபொருள் பிரச்சினை எமக்கு பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான அட்டைப் பண்ணைகள் எமக்கு புதிய ஒரு தலையிடியாக மாறியுள்ளது.

எனவே மீனவர்களது நிலையை கருத்தில் கொண்டு மிக விரைவில் இதற்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்றும்  மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

“மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் அல்ல.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் அல்ல.” என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் அல்ல.

மக்களின் எதிர்காலத்துக்கு எது சரியோ அதை முன்பே திட்டமிட்டு பலவற்றை நிறைவேற்றியுள்ளதோடு இன்னும் நிறைவேற்றுவேன்.

கடலட்டை பண்ணைகள் தொடர்பில் சிலர் அறிந்து பேசுகிறார்களோ..?  அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் பேசுகிறார்களோ என எனக்குத் தெரியாது.

வடக்கு மாகாணத்தில் சுமார் 5,000 ஏக்கரில் கடல் அட்டை பண்ணைகளை விரிவுபடுத்த ஏற்கனவே திட்டங்கள் தீட்டப்பப்பட்டுள்ள நிலையில் சுமார் 1,150 ஏக்கரில் கடலட்டைப் பண்ணைகள் செயல்படுத்தப்படுகிறன.

நான் அமைச்சராக வர முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பண்ணைகளும், யாழ் மாவட்டத்தில் 11 பண்ணைகளும் மன்னார் மாவட்டத்தில் 3 பண்ணைகளுமாக 32 பண்ணைகள் காணப்பட்டன.

நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 277 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும்163 பண்ணைகள் அமைக்கப்பட உள்ளது.

யாழ் மாவட்டத்தில் 245 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும் 176 பண்ணைகள் அமைக்கப்படவுள்ளதோடு மன்னார் மாவட்டத்தில் 78 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் இன்னும் பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன.

பருத்தித்தீவு கடல் அட்டை பண்ணையில் சீன இராணுவத்தினர் இருப்பதாகவும் இதனால் இந்தியா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்தப் பண்ணைகளுக்கும் சீனர்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரியாலையில் உள்ள கடல் அட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்தில் ஏற்கனவே சீனர்கள் வந்தார்கள். அங்கு இருக்கின்ற சீனர்களை தவிர வேறு யாரும் இதுவரை கடலட்டை பண்ணை செயற்பாடுகளில் வடக்கில் ஈடுபடவில்லை.

நாரா நிறுவனம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் போன்றவற்றினால் ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளில் தழுவல் அடிப்படையில் கடலட்டை பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. அதற்கான அனுமதிகளை உரிய ஒழுங்கு முறைகளில் பெற்றுக்கொள்வதற்கு தேவையான காலத்தை, வீண் விரயமாக்க கூடாது என்பதனாலேயே தழுவல் முறையில் வழங்கப்படுகின்றன.

ஏனினும், தன்னிச்சையாக யாராவது அனுமதிகள் இன்றி கடலட்டை பண்ணைகளை அமைப்பார்களாயின் அவை அகற்றப்படும்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள பண்ணைகளில் 95 வீதமானவை அந்தந்தப் பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களினாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்தியா, சீனா போன்ற நாடுகள் கடலட்டை பண்ணைகளில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் செலுத்தி வருகினனறன.

அவ்வாறு, என்னை அணுகியவர்களிடம் வருடாந்தம் இரண்டரை கோடி கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்து எமக்கு வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளேன்.

அவர்கள் யாராக இருந்தாலும், எமது மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் பட்சத்திலேயே அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும்.

என்னை பொறுத்தவரையில் இந்தியாவா சீனாவா என்ற வினா எழுப்பப் படுமானால் இந்தியாவே என கூறிக் கொள்வதோடு கடல் சார்ந்து மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் விரைவாகவும் வினைதிறனாகவும் செயல்படுத்தப்படும்´” என அவர் மேலும் தெரிவித்தார்.