கந்தையா அகிலன்

கந்தையா அகிலன்

டொக்டர் அர்ச்சுனா தமிழ் மக்களுக்கு வேண்டும்! யாழ் ஊடகங்கள் பிரசுரிக்க மறுத்த, கல்வெட்டில் கூட அச்சிட மறுக்கப்பட்ட தங்கையின் கதை!

இன்று யூலை 12 என்னுடைய அண்ணன் பிரகாஷின் பிறந்த தினம். டொக்டர் அர்ச்சுனா போன்ற ஒருவர் அன்று தெல்லிப்பளை வைத்தியசாலையிலோ யாழ் போதனா வைத்தியசாலையிலோ இருந்திருந்தால் இன்று நான் என் அண்ணனுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொல்லியிருப்பேன். என்னைப் போல் பல நூற்றுக்கணக்கானவர்களும் டொக்டர் அர்ச்சுனா போன்ற மனிதநேயம் மிக்க மருத்துவர்கள் இல்லாததால் தங்கள் உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களில் பலருக்கு என்னைப் போல் கரடுமுரடான வாழ்வு தான். எங்கள் இளமைக் காலங்கள் யுத்தத்திலும் அதன் பாதிப்பிலும் கடந்து போனது. எனது தாயும் தந்தையும் தங்கள் முதுமைவரை வாழ்ந்து இயற்கை எய்தினர். அது இயற்கை. தவிர்க்க முடியாதது. யுத்தம் காரணமாக வவுனியா நெலுக்குளம் முகாமில் தங்கியிருந்த போது 1997 செம்ரம்பர் 20 நான் என் தங்கை மிதுலா என் சினேகிதி மூவரும் வெளியே சென்றிருந்த போது பெரும் விபத்து ஏற்பட்டது. குடிபோதையில் லொறியை ஓட்டி வந்த வின்சன் என்றழைக்கப்பட்ட கந்தையா அகிலன் லொறியை எங்கள் மீது ஏற்றிவிட்டார். தங்கை மிதுலா அவளுடைய பதின்மூன்றாவது வயதில் அவ்விடத்திலேயே உயிரிழந்தாள். அவ்விபத்தில் எனக்கும் எங்களோடு வந்த இன்னுமொரு தோழிக்கும் தலையுட்பட பலத்தகாயங்கள் ஏற்பட்டது. அப்போது அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்த என் அண்ணன் பிரகாஷ் என்னைத் தூக்கி, மற்றவர்களுமாக ஒரு மணி நேரத்திற்குள் ஆறு கிலோமீற்றருக்கு அப்பால் இருந்த வவுனியா வைத்தியசாலைக்கு விரைந்து கொண்டு சென்றனர். நான் சில நாட்களிலேயே சிகிச்சை முடிந்து வீடு திரும்பினேன். என் தோழி ஒன்றரை மாதங்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின் கொழும்பு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகள் பெற்று குணமடைந்தாள். இப்போது நாங்கள் இருவருமே ஜேர்மனியில் வாழ்கின்றோம். மதுபோதையில் வாகனத்தை ஓட்டியவரும் ஜேர்மன் வந்தாலும் அவர் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் குடிக்கு அடிமையாகி குடும்பத்தைப் ;பிரிந்து குடித்தே மாண்டார். அவர் இறந்து சில நாட்களின் பின்னரேயே அவர் இறந்த விடயமும் தெரியவந்தது. நிற்க. இனி வருபவை நான் 2021 பெப்ரவரியில் எனது ஆதங்கத்தை, விமர்சனத்தை அண்ணனின் நினைவாக எழுதி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தேன்.

“எனது குடும்பத்தில் எனக்கிருந்த சொந்தம் என்னைத் தூக்கி விளையாடி, சிராட்டி, பாராட்டிய எனது அண்ணன் பிரகாஷ். பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தது போல் அல்ல, டிப்பர் அடித்தவனை டொக்டர் ஏறி மிதித்த கதையானது, எனது கதை. 2021 பெப்ரவரி 5 இந்த நாள் குடும்பத்தின் மற்றுமொரு மறக்க முடியாத பேரிடர் நிகழ்ந்த நாள். அன்று தான் என்னுடைய ஆருயிர் சகோதரன் இராசரத்தினம் பிரகாஷ் டிப்பர் என்னும் வாகனத்தால் சுண்ணாகம் சந்திக்கு அருகாமையில் விபத்தை சந்தித்த நாள். விபத்து எப்படி நடந்தது? மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பங்கள் பற்றி ஒரு மனிதர் படங்களுடன் பெரிதும் பரிச்சயம் அற்ற இணையத் தளத்தில் வெளியிட்ட செய்தி, முகநூல் ஊடாக பகிரப்பட்டு, எங்களுக்கும் வந்து சேர்ந்தது. அந்தச் செய்தியும் இடம்பெற்று இருந்த படங்களும் எங்கள் மனங்களில் வாழ் நாள் முழுமைக்கும் ஆறாத இரணத்தை ஏற்படுத்தி விட்டது. எங்கள் உள்ளங்களில் பல்வேறு கேள்விகளையும் கொந்தளிப்புகளையும் உருவாக்கி விட்டிருக்கின்றன.

இந்த கல்வெட்டின் ஊடாக ஒரு விழிப்புணர்ச்சி மற்றும் ஒரு சமூக மாற்றத்தை நோக்கிய நகர்வை ஏற்படுத்த முற்படுகின்றேன். மற்றும் எமது உறவின் இழப்பிற்கு தெரிந்தோ, தெரியாமலோ நேரடியாகவே மற்றும் மறைமுகமாகவோ காரணமாக இருந்தவர்களின் மனச் சாட்சியை நோக்கியோ எங்கள் ஆதங்கம் மற்றும் கோபம் வெளிப்படுகிறது.

முதலாவது நாங்கள் விபத்து எவ்வாறு இடம் பெற்றது என்கின்ற வீடியோவைப் பார்த்து விட்டுத் தான் கேட்கின்றேன். மோட்டார் வாகனம் செலுத்தும் பாதையிலே தனது வாகனத்தை செலுத்திய எங்கள் சகோதரனின் வண்டியை போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்காது இடித்து தள்ளி விட்டு வாகனத்தை நிறுத்தாது மேற் கொண்டு செலுத்தி சென்ற சாரதியின் மனநிலை மற்றும் போக்கு, எவ்வாறு அச்சாரதி வாகனம் செலுத்தும் அனுமதியை பெற்றுக் கொண்டார். விபத்தை ஏற்படுத்தி விட்டு விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்லுதல் வளர்ச்சி அடைந்த மேற்கு நாடுகளில் பெரும் குற்றவியல் குற்றமாக கருதப்படுவதோடு வாகன ஓட்டுநனரின் சாரதி அனுமதிப் பத்திரம் கூட பறிமுதல் செய்யப்படும். மற்றும் சிறைத்தண்டனை உட்பட தண்டப் பணமும் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல அசாதாரணமான சூழ்நிலைகளில் (விபத்து, பேரிடர், இயற்கை அனர்த்தம்…) உதவி புரியாது வேடிக்கை பார்ப்பதும் உரிய நேரத்திற்கு காயப்பட்டவர்களை வைத்திய சாலைக்கு கொண்டு போகாமல் ஒரு உயிர் இறப்பதற்கு மறைமுகமாக காரணமானவர்களை குற்றவாளிகளாக மேற்கு நாடுகளில் குற்றவியல் சட்டத்தின் படி தண்டனைக்கு உட்படுத்தும் சட்டங்கள் அமுலில் உள்ளன. வேடிக்கை பார்த்தவர்கள் மீது சமூக கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக சட்டம் தன் கடமையை செய்யும். தன்னலம் சார்ந்து தமது தனிப்பட்ட நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படும் சமூக கட்டமைப்பையும் கல்வித் திட்டத்தையும் வடிவமைத்து இருக்கிற மேற்கு நாடுகளில் தங்கள் குடிமக்கள் பொதுவெளியில் பெருந்தன்மையோடும் சமூகப் பொறுப்போடும் நடக்க வேண்டும் என்று சட்டம்; மக்களை கட்டாயப்படுத்துகின்றது.

ஆனால் நாங்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிவில் யுத்தத்தின் அனைத்து கோர முகங்களையும் கண்டு அனுபவித்து விட்டு, ஒரு விபத்து நிகழும் போது முதலுதவி கூட சரியாக செய்ய தெரியாமல் இருக்கின்றோம் என்றால் எப்படி என்று விளங்கவில்லை. காயப்பட்ட ஆளை நீளமாக படுக்க வைத்து மூளைக்கு இரத்தம் சீராக கிடைப்பதை உறுதி செய்யாமல். பிழையான முதலுதவி மற்றும் காலம் தாழ்த்தி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றமை என பல அசாதாரணமான நடவடிக்கைகளே என் அண்ணன் உயிரிழக்கக் காரணம்.

அது மட்டும் அல்ல. என் அண்ணன் பிரகாஷ் 1990க்களில் நடைபெற்ற ஆனையிறவுத் தாக்குதலில் கையில் காயப்பட்டு சிறிது காலம் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சுகமடைந்தவர். அன்றைய யுத்த சூழலில் யாழ் வைத்தியசாலை காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்த காலகட்டம். ஆனாலும் மருத்துவர்கள் நவீன உபகரணங்களோ அத்தியவசியமான உபகரணங்களோ கூட இல்லாத நிலையில் கடமையாற்றி உயிருக்காகப் போராடிய பலரை தங்கள் சேவை மனப்பான்மையால் போராடி அவர்களை மீள உயிர்ப்பித்துக் கொடுத்தனர். நன்றியைக் கூட பெற்றுக்கொள்ள அன்று மருத்துவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.

ஆனால் இன்று யுத்தத்திற்குப் பின்னர் வைத்தியம் பார்க்கும் தொழில் உயிர் காக்கும் பணி என்ற நிலைமையை தாண்டி பணம் பண்ணும் தொழிலாக மாறி விட்டது. இதனைக் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கண் கூடாக பார்க்க முடிகிறது. சுண்ணாகம் சந்தியில் விபத்து நடந்தது மாலை ஆறு மணியளவில். அவருடைய கையில் இருந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. சன நெருக்கம் இருந்த நேரம். பலரும் வேடிக்கை பாரத்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சில இளைஞர்கள் அடித்து விட்டு நிறுத்தாமல் சென்ற டிப்பரை கலைத்துச் சென்று மருதனாமடத்தில் வைத்துப் பிடித்தனர். ஆனால் விபத்துக்கு உள்ளானவருக்கு இரத்தம் சொட்டிக்கொண்டிருந்த போதும் யாரும் ஒரு கட்டுப் போட்டு குருதிப் பெருக்கை நிறுத்த முன்வரவில்லை. காயப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கவும் முன்வரவில்லை. மருத்துவ வண்டி வரும்வரை காத்திருந்தனர். ஆனால் அவர் விபத்துக்குள்ளானதை படம் எடுத்து செய்தியை முகநூலில் பதிவேற்றிவிட்டார்கள்.

மருத்துவ வண்டி வந்ததும் அண்ணாவை அருகிலிருந்த தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கும் எவ்வித சிகிச்சையும் வழங்கப்படவில்லை. சிகிச்சையல்ல இரத்தப் போக்கைக்கூட நிறுத்த முயற்சிக்கவில்லை. அங்கிருந்து அண்ணா யாழ் போதனா வைத்தியசாலைக்கு கெர்ண்டு செல்லப்பட்டார். அங்கும் அதிகாலை வரை மருத்துவர்கள் பார்க்கவில்லை இரத்தப் போக்கும் கட்டுப்படுத்தப்படவில்லை. பெரும்பாலும் மருத்துவர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவதால் யாழ் வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசரசத்திர சிகிச்சைப் பிரிவுகளில் அதற்கான மருத்துவர்கள் இருப்பதில்லை. தெல்லிப்பளை வைத்தியசாலையிலும் யாழ் வைத்தியசாலையிலும் ஏற்படுத்தப்பட்ட கால தாமதம் கையில் ஏற்பட்ட காயம் தொடர்ச்சியான குருதி இழப்பால் உயிரழப்பிற்கு இட்டுச் சென்றது.

தெல்லிப்பளை வைத்திய சாலையின், யாழ்ப்பாண வைத்திய சாலையின் இந்த அலட்சியத்தை அநியாயத்தை யாரிடம் முறையிடுவது. அரசாங்க பணத்தில் இலவசமாக மருத்துவம் படித்து விட்டு வெளிநாடுகளில் பணம் உழைக்க போவது ஒரு பக்கம், தனியார் வைத்திய சாலைகளை நிறுவி, அரசமருத்துவமனைகளை சீரழித்து வினைத்திறனற்றதாக்கி தனியார் வைத்தியசாலைகளுக்கு மக்களை வலுக்கட்டாயமாக வரப்பண்ணி பணம் புடுங்கும் சுரண்டல் ஒரு பக்கம் என இன்று தமிழர் வாழ்விடங்களில் வைத்திய துறை ஊழலும் முறைகேடுகளும் நிறைந்ததாக மாறி விட்டது. விதி விலக்கான வைத்தியர்கள் இல்லாமல் இல்லை. இங்கே ஒட்டு மொத்தமாக யாரும் குற்றம்சாட்டப்பட வில்லை.

இலங்கையில் மக்களின் வரிப்பணத்தில் ஒரு மாணவர் இலவசமாக மருத்துவம் படிக்க 50 இலட்சத்திற்கும் மேல் செலவு செய்யப்படுகிறது. இந்த இலவச முதலீட்டை வழங்கிய மக்களின் முதுகில் இந்த வைத்தியர்களால் எப்படிக் குத்த முடிகின்றது. எப்படிக் கூச்சம் இல்லாமல் இந்த சலுகையை பெற்ற மனிதர்கள் தனியார் வைத்தியசாலையில் அதிக கட்டணத்தில் சிறந்த சேவையையும் அரசாங்க வைத்தியசாலையில் சம்பளத்தையும் எடுத்துக்கொண்டு ஓய்வுகாலத்து ஊதியத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துவிட்டு அக்கறை அற்ற சேவையையும் புரிய முடிகிறது. யாழ்ப்பாண வைத்தியசாலை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஏன் உள்ளூர் தமிழ் பத்திரிகைகளோ அல்லது தேசிய பத்திரிகைகளோ சுட்டிக் காட்டுவது இல்லை.

தமிழ் மக்களுக்கு சம உரிமை, தன்னாட்சி வாங்கிக் கொடுக்க என்று கூவிக் கொண்டு அரசியலில் ஈடுபடும் தமிழ் அரசியல் வாதிகள் கண்களுக்கு ஏன் இவை எவையும் தெரியவில்லை. விபத்து நடக்கக் காரணமான சாரதி பிணையில் வெளியே, உயிரை விட்டவர் குடும்பம் நியாயம் யாரிடம் கேட்பது எனத் தெரியாது பதறி நிற்கிறது.

எங்கள் சகோதரனுக்கு நடந்த மாதிரி எந்த ஒரு மனிதனுக்கும் நடக்க கூடாது. எங்கள் முயற்சி தொடரும். அதில் ஒரு சிறிய முயற்சியாக இந்த முதலுதவி கையேடு. தயவு செய்து கருத்தூன்றி படிப்பதோடு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!” இது முன்னர் குறிப்பிட்டது போல் 2021 பெப்ரவரியில் எழுதியது.

இந்தக் கட்டுரையை யாழில் உள்ள முன்னணி ஊடகங்கள் அனைத்திற்கும் அனுப்பி இருந்தேன். எந்தவொரு ஊடகமும் அதனைப் பிரசுரிக்கவில்லை. அதனால் என் அண்ணனின் 31ம் நாள் அந்தியட்டி நிகழ்வுகளுக்காக அவருடைய கல்வெட்டில் பிரசுரிப்புக்க வழங்கினேன். கல்வெட்டில் முதலுதவிக் குறிப்புகளுடன் இக்கட்டுரையையும் இணைத்திருந்தேன். அதற்காக 65,000 ரூபாய் கட்டணமும் செலுத்தப்பட்டது. ஆனால் யாழ் வைத்தியசாலையின் மருத்துவர்களின் செயற்பாடுகளை விமர்சிக்கும் இக்கட்டுரையை பதிப்பித்தால் தங்களுக்கு அழுத்தங்கள் வரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் எனது கட்டுரையை கல்வெட்டிலும் பிரசுரிக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தை, இராணுவத்தை, பொலிசாரை விமர்சிக்க முடிந்த என்னால் யாழ் மருத்துவர்களை விமர்சிக்க ஒரு ஊடகம் இருக்கவில்லை. யாழ் மருத்துவர்கள் – தனியார் வைத்தியசாலைகள் ஒரு பெரும் மாபியா உலகமாகவே உள்ளனர். இவர்கள் என் அண்ணணைப் போன்ற பலருடைய அன்புக்குரிய உறவுகளை தினமும் சத்தமில்லாமல் படுகொலை செய்கின்றனர். அங்கு படுகொலை செய்யப்பட்டவர்களினது உடலை வைத்தும் போஸ்மோட்டம் என்ற பெயரில் லாபம் சம்பாதிக்கின்றனர்.

Jaffna (Sri Lanka) Government Medical Officers Association என்ற அமைப்பு தமிழ் மக்களை நோயாளிகளாக்கி படுகொலை செய்யும் நோக்கோடு தான் இயங்குகிறதா? இந்த அமைப்பில் கிரிமினல் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் மீது ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? டொக்டர் கேதீஸ்வரன், டொக்டர் மயூரன், டொக்டர் இந்திரகுமார், டொக்டர் கமலா ஆகியோர் மக்கள் நலன் மற்றும் பாதுகாப்புக் கருதி உடனடியாக இடைநிறுத்தப்பட்டு மருத்துவக்குழுவால் அல்ல ஓய்வுபெற்ற நன்மதிப்புடைய யாழ்ப்பாணம் சாராத சுயாதீன் விசாரணைக்குழவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். மேலும் Jaffna (Sri Lanka) Government Medical Officers Association தங்களுடைய அமைப்பில் உள்ள கிரிமினல் டொக்டர்களைக் கண்டறிந்து அவர்களை மருத்துவ சேவையிலிருந்து முற்றாக இடைநிறுத்தாவிடில், இது அந்த அமைப்பை ஒரு மருத்துவ மாபியா என்ற நிலைக்கே கொண்டு செல்லும். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் டொக்டர் அர்சுனா தட்டியது ஒரு சிறுபொறியே. இந்தப் பொறி இலங்கை முழுவதும் நடைபெறும் ஊழல்கலைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பாகும். மருத்துவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் நீங்கள் யார் பக்கத்தில் நிற்கின்றீர்கள் என்பதை விரைவில் தீர்மானித்துக்கொள்ளுங்கள். மக்களுடைய பக்கமா? மாபியாக்களின் பக்கமா? டொக்டர் அர்ச்சுனா தமிழ் மக்களுக்கு வேண்டும்!