கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்

ஜனாதிபதியின் அதிகாரங்களை பெறுகிறார் கமலாஹாரிஸ் !

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக   கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும்.
இந்நிலையில், ஜனாதிபதிக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபர் கமலா ஹாரிசிடம் அதிபர் ஜோ பைடன் ஒப்படைக்க  உள்ளார் என்ற தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

“ஜனவரி 20-ம் திகதிக்கு பின் சரித்திரத்தை மாற்றி அமைக்கப் பாடுபடுவோம்” – கமலா ஹாரிஸ் நம்பிக்கை !

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனவரி 20-ம் திகதி பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது எனவும், ஜனவரி 20-ம் திகதிக்கு பின் சரித்திரத்தை மாற்றி அமைக்கப் பாடுபடுவோம் எனவும் துணைஜனாதிபதியாகவுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
2020-ம் ஆண்டு மிகவும் துயரம் மிகுந்த ஆண்டாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கொரோனா வைரஸ் தாக்கம் முதல் காட்டுத்தீ மற்றும் சூறாவளி, இனப்பாகுபாடுவரை அமெரிக்கர்கள் ஏகப்பட்ட வலி மற்றும் வேதனையை சந்தித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் சிறந்த முன்னேற்றத்தையும் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது சவாலான பணிகளை மேற்கொண்ட முதல் நிலை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள். 2021-ம் ஆண்டு எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும். சரித்திரத்தை நாம் மாற்றி அமைக்க உள்ளோம். உங்களுக்கும் உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

‘தகுதியானவர்களைத் விரட்டி அடியுங்கள்!’ – தமிழ்ச் சூழல்; ‘தகுதியானவர்களை துரத்திப் பிடியுங்கள்!’ – சர்வதேசச் சூழல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்தவர்களில் ஓப்பீட்டளவில் தகுதியான பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன். இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் எம் ஏ சுமந்திரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விரட்டியடிக்க அக்கட்சிக்குள் பல்வேறு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் தமிழ் சமூகவலைத்தள கனவான்களும் படாத பாடுபட்டனர். அதே போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர் மணிவண்ணன். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவரை ஓரம்கட்டுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காய்நகர்த்தி வருகின்றார். எங்கே மணிவண்ணன் தனக்கு போட்டியாகி விடுவாரோ என்பதற்காக தனக்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போடக் கூடிய ‘குதிரை’ கஜேந்திரனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படுகிறது.

அரசியலில் மட்டுமல்ல அரசியலுக்கு வெளியேயும் குறிப்பாக அதிகாரத்தில் உள்ள அல்லது அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் யாழ்ப்பாணத் தமிழன் இவ்வாறுதான் சிந்திக்கின்றான். போராட்டகாலங்களில் கூட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள்: வே பிரபாகரன், உமா மகேஸ்வரன் போன்றவர்கள் கூட எங்கே தங்களிலும் பார்க்க திறமையானவர்கள் வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தனர். இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் கூட ஒரு நேர்மையான, ஆளுமைமிக்க ஒருவர் துணைவேந்தராக வரக்கூடாது என்பதில் யாழ் பல்கலைக்கழக சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அதனால் தான் அவர்கள் பாலியல் வல்லுறவு புரிந்தவர்களைக் கூட இன்றும் பேராசிரியர்களாக வைத்துள்ளனர். துணைவேந்தர்களாக வருவதற்கு சிபாரிசு செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

இதற்கெல்லாம் முற்றிலும் மாறாக சர்வதேசம் இயங்குகின்றது. அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பின்புலம் கொண்ட ஒருவர் போட்டியிடுவதாக கொண்டாடும் நாம் அதன் பின்னணியைச் சற்று நோக்க வேண்டும். ஜனநாயகக் கட்சியில் துணைவேட்பாளராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவர். இவர் ஜோ பைடனுக்கு எதிராக பலத்த சவாலை விடுத்ததுடன் ஒரு விவாதத்தின் போது ஜோ பைடனை நிலைகுலைய வைத்தார். ஜோ பைடனுக்கு அந்நேரத்தில் சொல்வதற்கு வார்த்தைகள் கூட வரவில்லை. அவரது ஆதரவை சற்று தடுமாற வைத்தவர்.

இருந்தாலும் ஜோ பைடனின் மகன் உப ஜனாதிபதித் தெரிவில் கமலா ஹாரிஸை தெரிவு செய்தார். அவருடைய திறமைக்காகவும் அவருடைய அரசியல் கொள்கைகள் தன்னுடைய அரசியல் கொள்கைகளுக்கு சமாந்தரமாக இருப்பதாலும் ஜோ பைடன் கமலா ஹாரிஸை தனது உபஅதிபராகத் தேர்வு செய்துகொண்டார். ஜோ பைடன் (77 வயது) யைக் காட்டிலும் மிக இளமையான கமலா ஹாரிஸ் (வயது 55) தனக்குப் பின் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு ஏற்ற வகையிலேயே இத்தேர்வு இடம்பெற்றுள்ளது. மேலும் ஜோபைடன் ஜனாதிபதி ஆனாலும் கமலா ஹாரிஸே கூடுதல் ஆதிக்கம் செலுத்தவார் என்றும் நம்பப்படுகின்றது. 2024இல் தவறினால் 2028இல் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிடலாம் என்று நியுயோர் ரைம்ஸ் எதிர்வு கூறியுள்ளது.

தற்போதைய அதிபர் டொனால் ட்ரம்மின் முதலாவது எதிரியாக கமலா ஹாரிஸே இருக்கப் போகின்றார். அவர் ஒரு குடிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் பொது மருத்துவச் சேவைக்கு ஆதரவானவராகவும் இருப்பதால் டொனால் ட்ரம்மின் முதல் தாக்குதல் இலக்கு கமலா ஹாரிஸாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

தமிழ் சமூகம் இந்த சர்வதேச அரசியலில் இருந்து ஏதாவது பாடங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதா? என்பது தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.

நிறவெறிக்கு வாக்சின் எனும் தடுப்பு மருந்து கிடையாது, இதை ஒழிக்க நாம்தான் பாடுபடவேண்டும் – கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் தெற்காசிய பெண்மணியாக துணை ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நிற்க தேர்வு செய்யப்பட்ட ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ், அமெரிக்காவுக்காக உயிர்த்தியாகம் செய்த ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை நினைவுகூர்ந்தார்.

சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்பதை ஜனநாயகக் கட்சி மீண்டும் வலியுறுத்தி செயல்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார்.

ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கமலா ஹாரிஸ் பேசியதாவது:

நிறவெறிக்கு வாக்சின் எனும் தடுப்பு மருந்து கிடையாது, இதை ஒழிக்க நாம்தான் பாடுபடவேண்டும். ஜார்ஜ் பிளாய்ட், பிரியோன்னா டெய்லர் இன்னும் எத்தனையோ பேர்களைக் குறிப்பிட வேண்டும் நம் குழந்தைகள், நாம் அனைவருமே, சம நீதி என்பதற்காகப் போராட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் விடுதலை பெறாமல் முழு விடுதலை சாத்தியமல்ல.

பெண் உரிமைக்காக போராடிய தலைவர்கள் மேரி சர்ச் டெரெல், மேரி மெக்லியாட் பெத்யூன், ஃபானி லூ ஹேமர், டயான் நேஷ், கான்ஸ்டன்ஸ் பேக்கர் மோட்லி மற்றும் ஷிர்லி கிரிஷோம் ஆகியோரது சிவில் விடுதலைக்கான போராட்டங்கள், கருத்துக்கள் நமக்குப் போதிக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்கர்களாக அவர்கள் தோள்களில்தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

எந்த ஒரு பிரபல்யத்துக்கும் இடம்கொடுக்காமல் அவர்கள் போராடினர், ஊர்வலம் நடத்தினர், இவர்கள்தான் நம் வாழ்க்கையை தீர்மானித்தவர்கள். இவர்கள்தான் பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோரது ஒளிமிகுந்த தலைமைக்கு முன்னோடிகளாவார்கள்.

அடுத்தவர்களுக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கையின் நோக்கம் அர்த்தம் என்று என் தாயார் ஷியாமளா கோபாலன் எனக்குக் கற்றுக் கொடுத்தார். இன்றைய இரவில் அவர் இங்கு இருக்க வேண்டும் என்று என் மனம் கருதுகிறது. மேலேயிலிருந்து என்னை அவர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

என்னை என் அம்மா பெற்ற போது நான் உங்கள் முன்னிலையில் இந்த மேடையில் நின்று பேசுவேன் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு என்னை நிற்கவைத்ததை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார் கமலா ஹாரிஸ்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு!

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை தேர்வு செய்வதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் என்ற பெருமையைப் பெறுவார். இவரின் தாய் இந்தியர், பூர்வீகத்தில் தமிழகப் பெண் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தல் நடந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டில் ஜோ பிடனுக்கு எதிராகக் கட்சிக்குள் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ஆனால், தன்னால் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை, நிதி திரட்டமுடியவில்லை என்பதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலில் இருந்து  விலகினார். இந்த சூழலில் கமலா ஹாரிஸை ஜோ பிடனே தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான நெருக்கடிகள், அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க ஆப்பிரிக்கவைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது கறுப்பின மக்களின் வாக்குகளைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோதும், சான் பிரான்ஸிக்கோவின் மாவட்ட அட்டர்னி ஜெனரலாக இருந்தபோதும் கமலா ஹாரிஸின் பணி வெகுவாகப் பாராட்டப்பட்டது. குறிப்பாக இனவெறித்தாக்குதல், போலீஸாரின் அடக்கு முறைக்கு எதிராக கமலா ஹாரிஸ் கடுமையாக குரல் கொடுத்தார்.

இது நாள்வரை அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாகவோ அல்லது துணை ஜனாதிபதியாகவோ எந்த அமெரிக்கப் பெண்ணும் இருந்ததில்லை. அதிலும் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் தேர்தலில் போட்டியி்ட்டு வென்றதில்லை. கடந்த 1984-ம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் சார்பில் ஜெரால்டைன் பெராரோ, 2008-ல் சாரா பாலின் இருவரும் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

 

அமெரிக்காவின் ஒக்லாந்தின் ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும், இந்தியப் பெண் அதிலும் குறிப்பாக தமிழரான ஷியாமளா கோபாலுக்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிஸ் கடந்த 2003-ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்ஜெனரல் தேர்தலில் போட்டியி்ட்டு வென்றார்.

அதன்பின் 2010-ம் ஆண்டில் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு கலிபோர்னியா செனட்டராக கமலா ஹாரிஸ் தேர்வுசெய்யப்பட்டு அவரின் பேச்சும், அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் குறித்த கேள்விகளும் அவரின் பக்கம் கவனத்தை ஈர்த்தன.

கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் பூர்வீகத்தில் ஒரு தமிழ் பெண். கமலா ஹாரிஸின் தாய்வழித் தாத்தா பி.வி.கோபலன் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த ஜாம்பியாவுக்கு நிர்வாகப் பணிக்கு அனுப்பப்பட்டார்.

பி.வி. கோபாலின் மகள் ஷியாமளா கோபாலன். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஷியாமளா கோபாலன், நியூட்ரிசியன் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றினார்.

 

இல்லிநாய்ஸ், வி்ஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் மார்க்கப்புற்று நோய் ஆய்வாளராக ஷியாமளா கோபாலன் இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஷியாமளா கோபாலன் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.