கருணாகரன்

கருணாகரன்

புதிய வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுர் உற்றத்திகளை விருத்தி செய்ய எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை! இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படவுள்ளனர்!! கிளிநொச்சி லிற்றில் எய்ட் இல் சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் மு சந்திரகுமார்

நாடு அடிப்படைத்தேவைகளுக்கு பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்ற நிலையிலும் உள்ளுர் உற்பத்திகளைப் பெருக்க அரசு எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை என்றும் அரசினுடைய இவ்வகையான தூரநோக்கற்ற செயற்பாடுகள் இளைஞர் யுவதிகளையே அதிகம் பாதிக்கும் என்றும் சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் மு சந்திரகுமார் தெரிவித்தார். நவம்பர் 20ம் திகதி கிளிநொச்சி லிற்றில் எய்ட் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். அமரத்துவமடைந்த லிற்றில் எய்ட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சிவஜோதியின் ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய மு சந்திரகுமார், அதிகரித்துள்ள அரச உத்தியோகத்தர்கள் இருப்பதற்கே அலுவலகங்களில் இருக்கைகள் இல்லை எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் அரசு இனிமேல் அரச ஊழியர்களை விலத்துவது பற்றி தீவிரமாக சிந்திப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் குறிப்பி;ட்டதாக மு சந்திரகுமார் அங்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் இறுதியில் இயல், இசை, நாடகக் கலைஞர்கள் வள்ளிபுரம் ஏழுமலைப்பிள்ளை, கணேஸ் விஜயசேகரன், பார்வதி சிவபாதம், செல்லத்துரை விந்தன் ஆகியோர் அவர்களுடைய சேவைக்காக பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் பார்வதி சிவபாதம் அவர்கள் இவ்வாண்டுக்கான 2022 சிவஜோதி ஞாபகார்த்த விருதை வெற்றிகொண்டார். 2022 சிவஜோதி ஞாபகார்த்த விருதை கிழக்குமாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலாவும் சிவஜோதியுடைய தந்தையும் இணைந்து பார்வதி சிவபாதம் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர். மற்றைய கலைஞர்களுக்கு ரூபாய் 5000 மும் அவர்களின் சேவையை கௌரவிக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

‘தனது குழந்தைப் பருவம் முதல் இயல் இசை நாடகத்துறையில் தடம் பதித்து பதின்ம வயதிலும் அதில் ஈடுபட்டு கலைத்துறையிலேயே வாழ்க்கைத் துணையையும் தேர்ந்து கலைத்துறையில் தன் அடுத்த தலைமுறையையும் தடம்பதிக்க வைத்தமைக்காக இயல் இசை நாடகத்துறையில் பார்வதி சிவபாதமும் அவருடைய குடும்பத்தினரும் ஆற்றிய பங்களிப்பை கௌரவிப்பதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டதாக காணொலியூடான தன்னுடைய பகிர்வில் லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவித்தார்.

மு சந்திரகுமார் தன்னுடைய உரையில் ‘இவ்வாண்டு இறுதியுடன் சில ஆயிரம் பேர் அறுபது வயதையெட்டுபவர்கள், ஓய்வுபெறப் போகின்றனர். அந்த வெற்றிடங்கள் எதுவுமே நிரப்பப்படாது’ எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இராணுவ சேவைகளில் 15 ஆண்டுகள் சேவையாற்றியவர்கள் ஓய்வு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். சிங்கள மக்கள் மத்தியிலேயே இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் மேற்கத்தைய சார்புடைய அரசு தற்போது இருப்பக்கரம் கொண்டு போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதைப் பற்றி சர்வதேசமும் தற்போது பெரிதாகக் கண்டுகொள்வதில்லை எனத் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு இனிவரப் போகும் காலங்கள் மிகச்சவாலானதாக அமையும் எனத் தெரிவித்த மு சந்திரகுமார் ‘கிளிநொச்சி மண்ணில் லிற்றில் எய்ட் செய்யும் பணிகள் அளப்பெரியது. பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொழில்நுட்ப கல்வியைக் கற்று வெளியேறுகின்றனர். லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் இளைஞர் – யுவதிகளின் எதிர்காலம் விருத்தி குறித்து மிகுந்த கவனம்கொண்டுள்ளார்’ எனக் குறிப்பிட்ட மு சந்திரகுமார், இன்னும் 15 வருடங்களுக்கு அரச உத்தியோகங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கிளிநொச்சியில் உள்ள இளைஞர் – யுவதிகளுக்கு லிற்றில் எய்ட் ஒரு சிறந்த வாய்ப்பு எனத் தெரிவித்தார்.

அறிவு நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலா:

‘அறிவு – திறன் – மனப்பாங்கு என்ற மூன்று அம்சங்கள் எங்களின் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பரீட்சைக்காக மட்டுமல்லாமல் அதற்கு அப்பாலும் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலா தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘கருத்துக்களை சிந்தனைகளை கொள்கைகளை உருவாக்கியவர்களே வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை அதனை பின்பற்றுபவர்களே பின்நாட்களில் அதனை வளர்த்தெடுக்கின்றனர். சிவஜோதியின் எண்ணங்களும் அவ்வாறே, இன்று பலர் மத்தியிலும் விதைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது’ எனத் தெரிவித்தார்.

‘சிவஜோதியொரு பன்முக ஆளுமை நல்ல கலைஞர்’ எனத் தெரிவித்த வி குணபால ‘நாங்கள் கலைஞர்களை உருவாக்கத் தேவையில்லை, எங்கள் மத்தியில் நல்ல சுவைஞர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் உருவாக வேண்டும’; எனத் தெரிவித்தார். வி குணபாலா தனது உரையில் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி ‘எல்லாவற்றையும் அனுபவித்து உணர்ந்துகொள்ள ஆயள் போதாது ஆனால் பல அனுபவங்களை வாசித்து அனுபவித்துக்கொள்ள புத்தகங்கள் நிச்சயம் உதவும்’ என்பதைச் சுட்டிக்காட்டினார்.

வி குணபாலாவின் தலைமையுரையைத் தொடர்ந்து பத்தி எழுத்தாளர், நூலாசிரியர், கலை இலக்கிய விமர்சகர் சி கருணாகரன் சிவஜோதி நினைவுச் சிறப்புரை நிகழ்த்தினார்.

அறிவு மட்டும் போதாது. நல்ல எண்ணங்களும் இளையோருக்கு ஊட்டப்பட வேண்டும் – எழுத்தாளர் சி கருணாகரன்:

இளையோரை விருத்தி செய்தல்: அறிவு – ஆற்றல் – ஆளுமை – பண்பு – செயல்திறன் என்ற தலைப்பில் சிவஜோதியின் இளையதலைமுறையினரை முன்நிறுத்தும் தன்மையை விதந்துரைத்தார். தற்போது போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனைகள் அதீதமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய கருணாகரன் சர்வதேச என்ஜிஓக்களின் புரஜகட் கலாச்சாரத்தால் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் இது இளைஞர்களின் தவறல்ல அவர்களை நல்வழிப்படுத்தாத பெற்றோர்கள் ஆசிரியர்கள் என் போன்ற சமூகத்தினரதும் தவறு எனச்சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி மண்ணில் மட்டும் வேலைவாய்ப்புகள் இல்லாமல் 20,000 இளைஞர்கள், யுவதிகள் என்ன செய்வதென்று தெரியாமல் பொழுதை வீணடிப்பதாகக் குறிப்பிட்ட கருணாகரன், மண்ணின் மைந்தர் என்று மார்தட்டிக்கொள்ள ஆட்கள் இருக்கின்றனர் ஆனால் மண்ணுக்கு சேவை செய்ய ஆட்கள் இல்லை எனக் குறைப்பட்டார். ‘அரசோ வெளிநாட்டுக்கு போய் உழைத்து வரச்சொல்லி இலவசமாகக் கல்வியைக் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய பயிற்சியையும் கொடுத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றது. எங்கள் நாட்டில் உள்ள வளங்களை வைத்து உற்பத்திகளைப் பெருக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தன்னுரையில் கருணாகரன் கேட்டுக்கொண்டார்.

‘இன்று கிராமங்களிலும் கூட பட்டதாரிகள் இல்லாத வீடுகள் இல்லை என்ற அளவுக்கு வந்துவிட்டது. அப்படி இருந்தும் அறிவான சமூகத்தில் இவ்வாறான போதைப் பழக்கங்கள் தலைவிரித்தாடுவது எதனால்?’ என அவர் கேள்வி எழுப்பினார். அதனால் அறிவு மட்டும் போதாது எனக் குறிப்பிட்ட அவர், ‘நல்ல எண்ணங்கள் வளர்த்தெடுக்ப்பட வேண்டும் அதற்கு இயல், இசை, நாடகம், ஓவியம் என கலையம்சங்களும் அவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

‘கடந்த 12 ஆண்டுகள் லிற்றில் எய்ட் கிளிநொச்சி மண்ணில் கணணித் தொழில்நுட்பத்துடன் ஆளுமையையும் வளர்க்கின்றது. இங்கு புரஜக்ற் கலாச்சாரம் இல்லை. புரஜக்ற் எழுதி நிதிசேகரிப்பு நடைபெறுவதில்லை. மாணவர்களே சிரமதானம் செய்கின்றனர். மாணவர்களே பெயின்ற் அடிக்கின்றனர். அதுவொரு குடும்பமாகச் செயற்படுகின்றது’ என்றும் கருணாகரன் தனதுரையில் குறிப்பிட்டார்.

லிற்றில் எய்ட் மாணவர்களின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வுக்கு லிற்றில் எய்ட் மாணவி செல்வி குகப்பிரியா வரவேற்று உரைநிகழ்த்தினார். ஆசிரியர் பி தயாளன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். கிளிநொச்சி ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் ஆலயப் பிரதம குரு முத்துக்குமார குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரநாத சர்மா சிவஜோதியின் நினைவுகளைக் குறிப்பிட்டு ஆசியுரை வழங்கினார்.

அவரைத் தொடர்ந்து கிளிநொச்சி கருணா நிலைய வண பிதா எஸ் கே டானியல் சிவஜோதியுடைய நண்பரும் கூட ஆன்மீகத்துக்கூடாகவே ஒழுக்கத்தை கொண்டுவர முடியும் எனத் தெரிவித்தார். பொறுப்பற்ற கடமையுணர்வற்ற மனிதர்களைக் கண்டு சிவஜோதி தார்மீகக் கோபம் கொள்வதாகக் கூறிய அவர் ‘கடவுள் ஏன் இவ்வாறானவர்களுக்கு நல்ல சிந்தனையை வழங்குவதில்லை?’ எனத் தன்னிடம் கேட்டபார் என்றும் வண பிதா எஸ் கே டானியல் தன்னுடைய ஆசியுரையில் குறிப்பிட்டார். முன்னைய நிகழ்வு சிவஜோதி ஞாபகார்த்த அரங்காக நடைபெற்றது.