இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் வழக்கை மீள விசாரணைக்குட்படுத்துமாறு நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய கோரியுள்ளார்.
தற்போதைய ரணில்-ராஜபக்ச அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக லசந்த விக்ரமதுங்கவின் 15 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சண்டே லீடர் எனும் பத்திரிகையின் ஸ்தாபகரும், ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
அவர் கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் ஆன போதிலும், இந்த கொலைக்கு காரணமானவர்கள் முன்னாள் ஆட்சியாளர்களால் இதுவரை தண்டிக்கப்படவில்லை என கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபாதுகாப்பு வலையத்துக்குள் கொல்லப்பட்ட லசந்த விக்ரமதுங்வின் மரணத்துக்கு இதுவரை நீதி கிடைக்காமை, அரசாங்கத்தின் இயலாமையை வெளிக்காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது இலங்கை, பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி நீதியை நிலைநாட்டும் செயல்முறையிலும் தோல்வி கண்டுள்ளதை வெளிக்காட்டுவதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.