கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாரி மலை விவகாரம் தொடர்பில் விதுர விக்கிரமநாயக்க நல்லை ஆதீனம் இடையே கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்

இதன்போது குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலையில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு வகை செய்தல், காங்கேசன்துறையில் உள்ள ஆச்சிரமத்தின் காணி விடுவிப்பு, திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்திலுள்ள பெட்டிக்கடைகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்து சமய தலைவர்களினால் முன்வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க; குருந்தூர்மலை, வெடுக்குநாறி என்பன தொல்பொருள் திணைக்களக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பினும் அனைத்து மதத்தவரும் பாரபட்சமின்றி சுதந்திரமாக வழிபட வழி செய்வதாக உறுதியளித்தார்.

மேலும் திருகோணமலையில் உள்ள சிறு கடைகளை அகற்றல் மற்றும் காங்கேசன்துறையில் உள்ள சைவாச்சிரமத்தின் காணி விடுவிப்பு தொடர்பிலும் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சிவபூமி அறக்கட்டளை அமைப்பாளர் கலாநிதி ஆறு. திருமுருகன், ரிஷிதொண்டுநாத சுவாமிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அரசின் கீழ் பதிவு செய்தே மதமாற்றங்களில் ஈடுபட வேண்டும் – கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

பதிவு செய்யப்படாத மத மாற்றங்களில் ஈடுபடும் மத நிலையங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்படாத மதமாற்றங்களில் ஈடுபடும் மத நிலையங்கள் மீது சோதனை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்குமாறு பௌத்த விவகார ஆணையாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் பீடாதிபதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சமய வழிபாட்டுத் தலங்கள், பௌத்த பிக்குகள் மற்றும் மதச் சிதைவுகள் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளில் பௌத்த பிக்குகளுக்கு ‘வணக்கத்திற்குரியவர்’ மற்றும் ‘பிக்குனிகளுக்கு’ ‘வணக்கத்திற்குரியவர்’ என்ற பட்டங்களைச் சேர்க்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.