கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்

“இலங்கையின் கல்வி முறையின் மீது பிள்ளைகள் நம்பிக்கை இழந்துள்ளனர்” – நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த !

“தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக” கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது. குறிப்பாக ஒரு சில வருடங்களுக்கு முன்னர் 330,000 ஆக காணப்பட்ட இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் தற்போது 33,0000 ஆக குறைந்துள்ளது.

இதனால் எதிர்காலத்தில் தரம் ஒன்று மாணவர் சேர்க்கை குறைவடையும் நிலை காணப்படுகின்றது.

இலங்கையில் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகி தனியார் வகுப்புகளுக்கு அதிகம் செல்கின்றனர். ஏனெனில் நாட்டின் கல்வி முறையின் மீது பிள்ளைகள் நம்பிக்கை இழந்துள்ளனர்” இவ்வாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் செயற்படும் 18,000 முன்பள்ளி பாடசாலைகளை முறைப்படுத்தி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த

நாடளாவிய ரீதியில் செயற்படும் 18,000 முன்பள்ளி பாடசாலைகளை முறைப்படுத்தி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்  முன் பள்ளிகள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தகைமை தொடர்பில் எதிர்க்கட்சி எம்பி ஹேஷா விதானகே  எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

13வது அரசியலமைப்பு திருத்தத்தின்போது மொன்டிசரி என்ற விடயம் மாகாண சபைக்கு உள்ளீர்க்கப்பட்ட விடயம். அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சராக இருந்த காமினி ஜயவிக்ரம் பெரேராவே அதற்கான அடித்தளத்தை இட்டார்.

அதனை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு நானும் மேல் மாகாண முதலமைச்சராக அப்போது மேல் மாகாணத்தில் அதை அறிமுகப்படுத்தினேன். அந்த வகையில் தற்போது ஒன்பது மாகாணங்களிலும் அது நடைமுறையில் உள்ளது.

இது ஒவ்வொரு  பிரதேசத்துக்கு ஏற்ப வித்தியாசப்பட்டாலும் அதன் அடிப்படை ஒன்றாகவே உள்ளது. பிள்ளைகளுக்கு மூன்று வயதிலிருந்து ஐந்து வயது வரையான காலத்திலேயே மூளை வளர்ச்சி ஏற்படுகின்றது. எமது நாடுகள் போல அன்றி அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த முன்பள்ளி விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் இந்த முன்பள்ளி செயற்பாடுகள் ஐந்து விதமாக இடம்பெறுகின்றன. கிராமங்கள் மற்றும் நகரங்களில் தனித்தனியே இந்த முன்பள்ளிகள் இயங்குகின்றன.

அமைப்புகளினாலும் முன்பள்ளி நடத்தப்படுகின்றன. அத்துடன் மாகாண சபைகளாலும் இவ்வாறான முன்பள்ளி பாடசாலைகள் செயற்படுத்தப்படுகின்றன.

சில பிரபல பாடசாலைகள் அதனோடு இணைந்ததாக இவ்வாறான முன் பள்ளிகளை நடத்துகின்றன. அத்துடன் சர்வதேச பாடசாலைகளோடு இணைந்ததாகவும் முன் பள்ளி பாடசாலைகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் 18, 800 முன்பள்ளி பாடசாலைகள் நாட்டில் இவ்வாறு இயங்குகின்றன.

கல்வியமைச்சானது தற்போது முதல் கட்ட பயிலுனர்களை தெரிவு செய்துள்ளது. அனைத்து மாகாணங்களிலுமிருந்து பயிற்சி அளிக்கப்பட்ட 550 பேருக்கு ஆரம்ப அடிப்படை பயிற்சிகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். கல்வி அமைச்சின் பணிப்பாளர் ஒருவரும் அந்த நடவடிக்கைகளில் தொடர்பு படுகின்றார்.

யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் நாம் அனைத்து பாடசாலைகளையும் அழைத்து ஆரம்ப பாடசாலை தொடர்பான முழுமையான செயலமர்வை நடத்தி முடித்தோம். அந்த வகையில் உரிய  புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டாம் தவணை பாடசாலைகள் ஆரம்பமாகும் போது அவர்கள் அனைவருக்கும் பயிற்சி வழங்குவோம்.

அவ்வாறானவர்கள் கல்வி பொது தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரத்தில் சித்தியடையாமல் இருந்தால் அவர்கள் ஆரம்பத்தில் பவுண்டேஷன் கோர்ஸ் செய்து அதன் பின்னர் டிப்ளோமோ பட்டப்படிப்பு என மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் திறந்த பல்கலைக்கழகத்தின் 26 கிளைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவர் கொழும்புக்கு வர வேண்டிய அவசியம் கிடையாது. அங்கு கற்க முடியும் என்றார்.

பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க தொடர்ந்தும் பல நடவடிக்கைகள் – சுசில் பிரேமஜயந்த

பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், இதற்காக பாடசாலை நூலகங்களுக்கு மேலதிகமாக 4 வாசிப்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

குறித்த புத்தகங்கள் இ-தக்சலாவ இணையத்தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

 

குறித்த புத்தகங்கள் இங்கே…

https://www.ethaksalawa.moe.gov.lk/moodle/mod/url/view.php?id=57266

முதுகுத்தண்டு குறைபாடுள்ள குழந்தைகளாக மாறும் இலங்கை பாடசாலை மாணவர்கள் !

இன்று அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் சுமந்து செல்ல முடியாத பாரிய பாடசாலை புத்தகப் பைகளை  பாடசாலைக்கு கொண்டு செல்வது  அவர்களின் முதுகுத்தண்டு குறைபாடுள்ள குழந்தைகளாக மாறுவதற்கு பிரதான காரணமாக அமைவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

எனவே,கல்வி அதிகாரிகள் கண் திறந்து குழந்தைகள் கல்வியை எளிதாக தொடர்வதற்கு தேவையான பின்னணியை தயார் செய்யுமாறு  நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தினார்.

‘ஸ்கொலியோசிஸ்’ எனும் முதுகுத்தண்டு நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்காக பொது  மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவ மாணவிகள் பங்கேற்றலுடன் விழிப்புணர்வு நடைபவனி மற்றும்  மருத்துவ முகாம் என்பன கடந்த சனியன்று (02) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நடைபவனியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் அப்பலோ வைத்தியசாலைகள் குழுமத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடை பவனியை செரண்டிப் குழுமம் மற்றும் லங்கா ஈ டொக் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

“நாட்டில் பெருமளவான சிறுவர்களுக்கு முதுகுத்தண்டில் பிரச்சினையால் அவதியுற்று வருகின்றனர். இந்நோய் குறித்து குறைந்தபட்ச அறிவே மக்களிடையே உள்ளது. இதனால், குழந்தைகளை நோயிலிருந்து காப்பாற்றும் திறன் குறைந்துள்ளது. எனவே, பெற்றோர்களுக்கு இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

இதன் காரணமாகவே, இந்த விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது “என செரண்டிப் குழுமத்தின் தவிசாளரும் லங்கா ஈ டொக் அமைப்பின் நிர்வாக இயக்குநருமான கலாநிதி நிலூக்க வெலிக்கல குறிப்பிட்டார்.

இந்திய அப்பலோ வைத்தியசாலைகள் குழுமத்தின் சர்வதேச பிரிவின் துணைத் தலைவர் ஜிது ஜோஸ், மருத்துவமனையின் அறுவை சிகிச்சை தலைவர் சஜன் கே ஹெக்டே, முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் அப்பாய் கிருஷ்ணன், வைத்தி நிபுணர் விக்னேஷ் ஆகியோருடன் இந்திய மற்றும் இலங்கை நிபுணர்களும் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையின் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

உயர்தரத்தை கொண்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புதிய தொழிநுட்பத்தின் மூலம் மாணவர்கள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி 3,000 உயர்தர பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பாடசாலையிலேயே தொழிற்கல்வி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

உயர் தரத்தை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலையிலேயே தொழிற்கல்வி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி அறிவு கொண்ட தொழில்சார் கல்வி குறித்த நடைமுறை பயிற்சி மற்றும் கோட்பாட்டு ஒத்திகையுடன் கூடிய நிகழ்ச்சி இவ்வாறு நடத்தப்படவுள்ளது.

உயர்தரக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களை தொழிற்கல்விக்கு வழிநடத்தும் நோக்கில் இந்தத் தொழிற்பயிற்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 299 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உயர் தரப் பரீட்சைக்காக தோற்றியுள்ள மாணவர்கள் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி முன்னர் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யலாம்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்தி தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“ஆசிரியர் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்விப் பல்கலைக்கழகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும்.” – கல்வி அமைச்சர்

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் கல்வி முறைமைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இலங்கையின் முன்பள்ளிக் கல்வி, பாடசாலைக் கல்வி, தொழிற்பயிற்சிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய நான்கு துறைகளும் ஏனைய முன்னேறிய கல்வி முறைகளுக்கு அமைவாக பாடநெறிகள் மற்றும் வளங்களுக்கு இணையாக அபிவிருத்தி செய்யப்படும்.

இதனடிப்படையில் குறித்த நான்கு கல்வித் துறைகளும் சர்வதேச மட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படும்.

எதிர்காலத்தில் ஒன்றிணைக்கப்பட்ட ஆசிரியர் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்விப் பல்கலைக்கழகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும்.

இதன்மூலம் யாழ் குடாநாட்டின் கேந்திர நிலையமாக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அமையும். வடமாகாணத்தில் உள்ள ஆசிரியர் பயிலுனர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும். இதன்மூலம், 2027ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பயிற்சியுடன் பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்புவதே எமது எதிர்பார்ப்பு.

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் இருந்து முறையான தொழில்சார் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான பரந்த வாய்ப்புகள் உருவாக்கப்படும்” இவ்வாறு சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

“வணிகமயமாக்கப்பட்ட டியூஷன் வகுப்புகளால் இலவசக் கல்வி அழிந்து போய்க்கொண்டிருக்கிறது.” – கல்வி அமைச்சர் விசனம் !

மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது எனவும் பாடசாலை வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி மாற்றத்தின் கீழ், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு கூட மாணவர்கள் வருகைக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற வேண்டும் . அதன்படி, எதிர்காலத்தில் மாணவர்கள் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது அனைத்து தரங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

1,500க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒரு மண்டபத்தில் கூட்டி சொற்பொழிவு செய்வதன் மூலம் கல்வி என்பது அடையக்கூடிய ஒன்று அல்ல என்றும் . தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் உட்பட ஆரம்ப வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இவ்வாறான கற்பித்தல் முறைகளை பிரயோகிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோர்கள் கஷ்டப்பட்டு தங்கள் குழந்தைகளை டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பினால் பாடசாலைகள் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என தெரிவித்த அவர், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களுக்கு முகங்கொடுத்து சிரமங்களை எதிர்நோக்கும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்விக்காக பெரும் தொகையை ஒதுக்க வேண்டிய இக்கட்டான நிலையை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

வணிகமயமாக்கப்பட்ட டியூஷன் வகுப்புகளால் இலவசக் கல்வியின் நோக்கம் மறைந்து வருவதாகவும் இவ்வாறானதொரு நிலைமை வேறெந்த நாட்டிலும் காணப்படவில்லை எனவும், இந்த நாட்டில் ஆரம்பகால கல்வி தொடர்பாக தற்போதுள்ள கருத்துக்கள் மற்றும் அளவுகோல்கள் முற்றாக மாற்றப்பட வேண்டிய மட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தொடர்ந்து மூடப்பட்ட பாடசாலைகள் – 85 வீதமான மாணவர்களிடம் குறைந்துள்ள எழுத்தறிவு திறன் !

கடந்த 3 வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்களால் கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவர்களில் 85 சதவீதமானவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.கல்வி அமைச்சின் தலைமையில் சுமார் 800 நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் கிடைக்கப்பபெற்றதாகத் தெரிவித்த அமைச்சர், ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சியையும், பாலர் பாடசாலைகளை இயக்குபவர்கள் தொடர்பில் கடுமையான அவதானங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.கொழும்பில் 16 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், “கல்வி அமைச்சின் தலைமையில் 800 அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட மதிப்பீட்டிற்கு அமைய தரம் 3 இல் கல்வி கற்கும் மாணவர்களில் 85 வீதமானவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை. இது அவர்களின் இடைநிலை பாடசாலையின் மாற்றத்துக்கும் அதற்கு அப்பாலான வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இன்றியமையாததாகும்” என்றார்.“ தேசிய வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டை குறிப்பாக ஆரம்பத் தரங்களுக்கு அதிகரிக்க வேண்டிய அவசர தேவை காணப்படுகின்றது.

சிறுவர்களின் அடிப்படைக் கற்றலை ஊக்குவிக்கும் அதேநேரம், கல்வியில் முக்கிய மறுசீரமைப்புக்களை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய திறன் மிக்க மனித வளத்தைக் கட்டியெழுப்ப முடியும்” என கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

“ கொவிட் பரவலால் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டாலும் பெரும்பாலும் ஆசிரியர்கள் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினர். இவ்வாறு கற்றல் செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். “ கற்றல் முறைமை மற்றும் பாடசாலை தரங்களில் முதலில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. முக்கிய மாக ஆரம்பப் பிரிவில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.இதேவேளை, “ நாடளாவிய ரீதியில் பல பாலர் பாடசாலைகள் காணப்படுகின்றன. அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் எவ்வாறான பயிற்சிகளைப் பெற்று கற்பிக்கின்றார்கள் என்பதை ஆராய வேண்டிய தேவை காணப்படுகின்றது. உயர் தர பரீட்சையைவிட 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை முக்கியமான தொன்றாக எமது சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது. இதனை முற்றிலும் மாற்ற வேண்டும். ஏன் இந்த மாற்றங்களை செய்வதற்கு விடுகிறார்கள் இல்லை. ஆசிரியர் சங்கங்கள் சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்றார்.இங்கு உரையாற்றிய யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக் கூறுகையில்,

“ எழுத்தறிவு எண்ணறிவு மற்றும் சமூகப் பொருளாதாரத் திறன்களே சிறுவர்கள் தமக்கான மற்றும் தமது குடும்பங்கள், சமூகங்கள் உள்ளடங்கலாக நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன என்று குறிப்பிட்டார்.“நாடு எதிர்கொண்டுள்ள தொடர்ச்சியான இன்னல்களால் கல்வியை இழப்பவர்கள், மெதுவாகக் கற்றுக்கொள்பவர்கள், கல்வியில் பின்தங்கியுள்ள சிறுவர்களின் கற்றல் சாதனையில் விரிவடைந்துவரும் ஏற்றத்தாழ்வுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சின் முயற்சிகளைப் பாராட்டுகின்றோம்” எனத் தெரிவித்தார்.இதேவேளை, கடந்த 3 வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்கள் மற்றும் அவ்வப்போது கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் பாதிக்கப்பட்ட நாடு முழுவதிலுமுள்ள 1.6 மில்லியன் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை மீட்பதற்கு உதவி செய்யும் தேசிய முயற்சிக்கு கல்வி அமைச்சும் யுனிசெப் நிறுவனமும் தலைமை தாங்குகின்றன. மொத்த தேசிய உற்பத்தியில் 2 வீதத்திற்கும் குறைவான தொகையையே இலங்கை தற்போது கல்விக்காக ஒதுக்கியுள்ளது. இது கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 முதல் 6 வீதங்களாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச அளவுகோலுக்கு கீழ் காணப்படுவதுடன் தெற்காசியப் பிராந்தியத்தில் இதுவே மிகவும் குறைவாகவும் காணப்படுகின்றது.கற்றல் நெருக்கடியானது பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுவர்களையும் ஆரம்பத் தரங்களில் உள்ள சிறுவர்களையும் பெருந்தோட்டத் துறையில் உள்ளவர்களையும் பாதித்துள்ளது.”கற்றல் மீட்பு” தொடர்பில் அபிவிருத்திப் பங்காளர்களின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கில் கல்வி அமைச்சு மற்றும் யுனிசெப் ஆகியன கடந்த ஜூலை மாதம் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்ததுடன் குறைபாடுகள் மற்றும் முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கு 9 மாகாணங்களிலும் செயலமர்வுகளை நடத்தின.இதன் இறுதி நிகழ்வு 16 ஆம் திகதி புதன்கிழமை கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டியன் ஸ்கூக் மற்றும் அரசாங்க அபிவிருத்திப் பங்காளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அடிப்படைவாத அரசியலுக்கு பயன்படுத்தப்படும் உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் – கல்வி அமைச்சர்

உயர் தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமத்தினால் இளைஞர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, அந்த இளைஞர்களை அடிப்படைவாத அரசியலுக்கு தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகள் நடப்பதாக புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் உடன்படிக்கையில்  தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே கல்வியமைச்சர் இதனை கூறியுள்ளார்.

உயர் தரப்பரீட்சை விடைத்தாள்கள் திருத்தப்படுவது தாமதமாகியதால் 18 வயது முதல் 20 வயதான இளைஞர்கள் கடும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இளைஞர்களின் இந்த அசௌகரியத்தை பயன்படுத்தி,  குறுகிய அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய அடிப்படைவாத அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாக புலனாய்வு அறிக்கை மூலம் கடந்த வாரம் தெரியவந்துள்ளது.

விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

செயன்முறை பரீட்சைகளை முன்கூட்டியே நடத்துவதால் ஏற்படும் தாமத்தை முடிந்தவரை  தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

உயர் தரப்பரீட்சையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகளும் தோற்றியுள்ளதால்,  தமது பிள்ளைகள் மற்றும் ஏனைய பிள்ளைகளுக்காக விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் இணையுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.