காசா அகதி முகாம்

காசா அகதி முகாம்

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் – நாளாந்தம் அங்கவீனர்களாகும் நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் !

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது கால்களை இழந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து Save the Children அமைப்பின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ”3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல், காசாவின் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இத்தாக்குதல்களினால் ஏராளமான சிறுவர்கள் கொல்லப்படுவதும், ஊனமாக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவொன்றாக உள்ளது.

இத்தாக்குதல் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்”என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 50 % க்கும் அதிகமான சிறுவர்கள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் சிறுவர்களின் உடல் நலத்துக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா பகுதியில் அகதி முகாமை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – குழந்தைகள் உட்பட 13 பேர் பலி !

மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள பல வீடுகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று சனிக்கிழமை இரவு இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் அகதிகள் முகாமில் உள்ள அசார் மற்றும் ஜாகவுட் குடும்பங்களின் குடியிருப்புகள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தபட்சம் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

 

காயமடைந்தவர்கள் காசாவின் மத்திய மாகாணத்தில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர்.

நுசிராத் அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்கு மேலதிகமாக இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா நகரில் உள்ள அல்-ஜலா வீதியில் உள்ள மக்களின் குடியிருப்பு பகுதியிலும் தாக்குதலை மேற்கொண்டன.இங்கும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் இரண்டும் பதிவாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் உடனடியாக அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஒக்டோபர் 7 ம் திகதி காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கியதில் இருந்து, 6,500 குழந்தைகள் மற்றும் 4,500 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 16,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 38,000 பேர் காயமடைந்துள்ளனர்.