காசா – இஸ்ரேல்

காசா – இஸ்ரேல்

இஸ்ரேலுக்கு எதிரான மாணவர்கள் போராட்டங்களால் திணரும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள்!

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவகளிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ள பொலிஸார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.

 

அவுஸ்டினின் டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட 34 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தென்கலிபோர்னியா பல்கலைகழகத்தில் 50க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இஸ்ரேலுடன் தொடர்புகளை கொண்டுள்ள ஆயுதவியாபாரிகளுடனான தொடர்பை துண்டிக்கவேண்டும் என கோரி நியுயோர்க்கின் கொலம்பியா பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழகத்தை சூழ கூடாரங்களை அமைத்து போராட்டங்களை ஆரம்பித்ததை தொடர்ந்து அமெரிக்காவின் பல பல்கலைகழங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் பல்கலைகழகங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

கலிபோர்னியாவில் யுசிபேர்க்லே மற்றும் யுஎஸ்சி பல்கலைகழங்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

 

கலிபோரினா அரச பொலிடெக்னிக் பல்கலைகழகத்தில் தளபாடங்கள் கூடாரங்கள் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டதால் பல்கலைகழகம் மூடப்பட்டது.

பாலஸ்தீன ஆதரவு குழுவை சேர்ந்த மாணவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டமைக்கும் காசா யுத்தத்திற்காக பல்கலைகழகம் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தும் ஹவார்ட் பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

மாசசூட்ஸ் முதல் கலிபோர்னியா வரை பல பல்கலைகழங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணிகள் மற்றும் பல்கலைகழகங்களை சுற்றி முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவில் தீவிரமடையும் இஸ்ரேலுக்கு எதிரான பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் !

அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கொலம்பிய பல்கலைகழகம் வகுப்பறை கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. நியுயோர்க் பல்கலைகழகத்திலும் யால் பல்கலைகழகத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவின் பல பல்கலைகழகங்கள் ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தினால் உருவாகியுள்ள பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கொலம்பிய பல்கலைகழகத்தின் வெளியே முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர்.

அதேவேளை ஏனைய பல்கலைகழகங்களில் கொலம்பிய பல்கலைகழகத்தில் ஏற்பட்ட நிலை உருவாகியுள்ளது.

நியுயோர்க் பல்கலைகழகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பல்கலைகழத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.

முதலில் அவர்களை வெளியேற சொன்னோம்  எனினும் நிலைமை குழப்பகரமானதாக மாறிய பின்னர் பொலிஸாரை அழைத்தோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மிரட்டும் கோசங்கள் மற்றும் யூத எதிர்ப்பு கோசங்களை கேட்க முடிந்ததாக  பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வளாகத்திற்குள் மாணவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு பல்கலைகழகம் அனுமதிப்பது கடும் கண்டணத்திற்குரியது என நியுயோர்க் பல்கலைகழக சட்டககல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள்காரணமாக மாணவர்கள் மத்தியிலான பதற்றமும் அதிகரித்து காணப்படுகின்றது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைகழகங்கள் கண்டிக்கவேண்டும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து விலகியிருக்கவேண்டும் என பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

இதேவேளை இஸ்ரேலிற்கு எதிரான விமர்சனங்கள் அனேகமாக யூதஎதிர்ப்பை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய மாணவர்கள் தாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதுடன் ஹமாஸ் இன்னமும் பணயக்கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொலம்பிய பல்கலைகழகத்திலும் பதற்ற நிலை அதிகமாக காணப்படுகின்றது.

“பேரரசு இறையியலும் காசா இனப்படுகொலையும் – மேற்குலகின் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது?” பெத்தலகேம் பாதிரியார் முன்தார் ஐசாக்

பெத்தலகேம் தேவாலயத்தின் பாதிரியார் முன்தர் ஐசாக் டிசம்பர் 22 அன்று வழங்கிய பிரசங்கத்தில், மேற்குலக நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து இன அழிப்புக்கு ஆதரவளிப்பதை வன்மையாகச் சாடினார். மேற்குலக கிறிஸ்தவ நாடுகள் தார்மீகப் பண்பை இழந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், பாலஸ்தீனம் அழிவுகளில் இருந்து மீண்டெழும் ஆனால் இன்று இன அழிப்புக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்றைக்கும் தங்கள் கறையைக் கழுவிக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தேசம்நெற் நடத்திய கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு பேச்சாளர்களினதும் உரைகளை எதிரொலிப்பது போல் பாதிரியார் முன்தார் ஐசாக்கின் பேச்சு அமைந்தது.

குழந்தை யேசு பிறந்த மாட்டுத்தொழுவம் அமைந்த பெத்தலகேமில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயம். வழமையாக இத்தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை மிகச் சிறப்பாக நடைபெறுவது வழமை. ஆனால் இம்முறை காசாவில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அத்தேவாலயம் சோடித்து அழகு படுத்தப்படவில்லை. இஸ்ரேல் இராணுவம் காஸா மீது நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலையும் யுத்தத்தில் 10,000 சிறார்கள் வரை படுகொலை செய்யப்பட்டதையும் குறிக்கும் வகையில் குழந்தை யேசு இடிபாடுகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் வகையில் யேசுவின் பிறப்பு உருவகப்படுத்தப்பட்டது.

பிறக்க இருக்கும் குழந்தை யேசுவைக் கொலை செய்ய ஆட்சியாளர்கள் கொலைத்திட்டம் தீட்ட நாஸரத்தில் இருந்து மரியாள் ஜோசப்புடன் அகதியாக பெத்தலகேம் வந்து குழந்தையைப் பிரசவித்தார். இதுவே தற்போது காஸாவில் நடைபெறுகின்றது. பாலஸ்தீனப் பெண்கள் பயங்கரவாதிகளை ஹமாஸைப் பிரசவிப்பதாகக் கூறி இஸ்ரேல் இராணுவம் காஸாவில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்கின்றது. கடந்த இரு மாதங்களிற்கு மேலாக கிறிஸ்மஸ் தினம் அன்றும் கூட இஸ்ரேல் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 80 வீதமானவர்கள் பெண்களும் குழந்தைகளுமே. இதனை உருவகப்படுத்தும் வகையிலேயே பெத்தலகேம் தேவாலயம் குழந்தை யேசுவை இடுபாடுகளுக்கு இடையே படுக்க வைத்திருந்தது.

பாதிரியார் முன்தர் ஐசாக், தனது பிரசங்கத்தில், மேற்கத்திய உலகின் போலித்தனம் மற்றும் அவர்களின் இனவெறியை கடுமையாக விமர்சித்துள்ளார், காசா உலகின் தார்மீக திசைகாட்டியாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். பெத்லகேமில் உள்ள எவாஞ்சலிக்கல் லூத்தரன் தேவாலயத்தில் டிசம்பர் 22 அன்று தனது கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கிய பாதிரியார் ஐசக், “மகிழ்ச்சியின் நேரமாக இருந்திருக்க வேண்டிய இத்தருணம் மரண துக்கம் ஆகி பயப்படுகின்றோம்” என்று கூறினார்.

“காசா, எங்களுக்குத் தெரியும் அன்று இருந்தது போல் இனி இல்லை என்று, இது ஒரு அழிவு. இது இனப்படுகொலை” என்று முன்தார் ஐசாக் கூறினார். “இதனை இந்த உலகம் மௌனமாக இருப்பதைப் பார்த்து நாங்கள் வேதனைப்படுகிறோம். சுதந்திர நாடுகள் என்று அழைக்கப்படுபவர்களின் தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து, சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலைக்கு பச்சை விளக்கு காட்டுகிறார்கள்” என்றும் முன்தர் ஐசாக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தன் பிரசங்கத்தில் சேனனின் மொழியில் சொல்வதானால் ‘கொலை மறைக்கும் அரசியல்’ செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். “மேற்கு நாடுகள் உண்மைச் சூழலை மறைக்கும் அரசியல் மறைப்பை இனப்படுகொலைகளுக்கு வழங்குகின்றனர்” என்று அவர் குற்றம்;சாட்டினார். “இவர்கள் இனப்படுகொலைகளுக்கு “இறையியல் சாயம் பூசுகின்றனர்” என்றும் காட்டமாகக் கடிந்து கொண்டார். முன்தார் ஐசாக் ‘மேற்கத்திய தேவாலயங்கள்’ இந்த சாயம் பூசுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது” என்றும் சுட்டிக்காட்டினார். பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையுடன் பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்தவ தலைவர்களின் சர்வதேச பிரதிநிதிகள் சபையில் இருந்தனர்.

அரசு – பேரரசு இறையியல்:

தென்னாப்பிரிக்கர்கள், “அரசு இறையியல் பற்றிய கருத்தை எங்களுக்குச் சுட்டிக்காட்டினார்கள். “அரச இறையியல் இனவாதம், முதலாளித்துவம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றை நியாயப்படுத்த பயன்படுத்துகின்றது” என்றும் மேலும் விளக்கினர்.

“அரசுகள் அதன் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக இறையியல் கருத்துகளையும் விவிலிய நூல்களையும் தவறாகப் பயன்படுத்துகின்றது” என்றும் முன்தார் ஐசாக் தெரிவித்தார். “இங்கே பாலஸ்தீனத்தில் பைபிள் – நமது சொந்த புனித நூல். நமக்கு எதிரான ஆயதமாகப் பயன்படுத்தப்படுகின்றது”, என்று மேலும் கூறினார், “இங்கு நாம் பேரரசின் இறையியலை எதிர்கொள்கிறோம், இது மேன்மை, மேலாதிக்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட தன்மை மற்றும் உரிமைக்கான மாறுவேடமாகும்” என்றும் பாதிரியார் முன்தார் ஐசாக் குற்றம்சாட்டினார். “பேரரசின் இறையியல் தெய்வீக அனுமதியின் கீழ் அடக்குமுறையை மறைக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறுகிறது” என்று முன்தார் ஐசாக் குற்றம்சாட்டினார்.

“பேரரசு இறையியல் மக்களையும் நிலத்தையும் பிரிக்கின்றது. இது மக்கள் இல்லாத நிலத்தைப் பற்றி பேசுகின்றது. அது மக்களை நமக்கும் அவர்களுக்கும் என்று பிரிக்கின்றது. இது ஒடுக்கப்படுபவர்களை மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமானவர்களாக பிரித்துக் காட்டுகின்றது. நிலத்தில் ஆட்கள் இருப்பதை நன்கு அறிந்திருந்தும் மீண்டும் மக்கள் இல்லாத நிலம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்குகின்றது. அவர்கள் எந்த மக்களுமல்ல, மிகவும் சிறப்பு வாய்ந்த மக்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பேரரசின் இறையியல் காசாவை இல்லாமல் செய்ய அழைக்கிறது. 1948 இல் இனச் சுத்திகரிப்புக்கு அழைப்பு விடுத்தது போல், ஒரு அதிசயம் அல்லது தெய்வீக அதிசயம் என்று இதனை அழைக்கின்றனர். பாலஸ்தீனியர்களான எங்களை ஏன் எகிப்து, ஒருவேளை ஜோர்டானுக்கு செல்லக் கூடாது என்று கேட்கின்றனர். இனி, ஏன் கடலுக்குச் செல்லக்கூடாது?” என்றும் கேட்பார்கள் என்றார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

மத வரலாற்றுப் பின்னணி:

பாதிரியார் முன்தார் ஐசாக்கின் மிகுந்த முற்போக்கான இப்பேச்சின் பின்னால் ஒரு பலமான அரசியல் நியாயம் தெளிவாகப் புலப்பட்டது. பிதா, சுதன், பரிசுத்த ஆவி, இறை தூதர் என்பதைச் சுற்றியே யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் கட்டப்பட்டது. பிதா என்பதை முழுமுதற் கடவுளாக யூதம் கருதுகின்றது. அவர்கள் மேசியா – இறைதூதுர் இன்னும் வரவில்லை இனிமேல் தான் வருவார் என்று நம்புகின்றது. அவர்கள் யேசுவின் கதையை நம்பவில்லை. கிறிஸ்தவம் மக்களை பாவங்களில் இருந்து மீட்க பிதாவின் மகன் யேசு பிறந்து அவர்களின் பாவங்களைத் தானே சுமந்து அதற்காக சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்து அவர் பிதாவிடம் செல்ல மக்களை ரட்சிக்க பூமிக்கு பரிசுத்த ஆவி அனுப்பப்ப என்று கிறிஸ்தவம் நம்புகின்றது. இஸ்லாம் யேசுவை ஈசா என்ற இறை தூதர் என்று நம்புகின்றது. அவ்வாறான பல இறைதூதர்கள் வந்து கடைசியாக வந்த இறைதூதர் மொகமட் என்கிறது. இந்த மூன்று மதங்களினதும் உருவாக்கம் தோற்றம் பாலஸ்தீனத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலுமே நடைபெற்றது.

அதன் பின் கிறிஸ்தவம் பல பிரிவுகளாக உடைந்து பரவிய போதும் தற்போது அமெரிக்காவினால் உலகெங்கும் பரப்பப்படும் ஆவிக்குரிய சபைகளே இஸ்ரேலை பாதுகாக்கும் கைங்கரியத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இஸ்ரேலை நாற்பது நாடுகள் தாக்கி அழிக்கப் போகின்றது என்றும் இஸ்ரேல் என்ற நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அமெரிகாவில் இருந்து கிளைவிட்டுப் பரவியுள்ள ஆவிக்குரிய சபைகள் தங்கள் பிரார்த்தனைகளில் செபிக்கின்றனர்.

கருக்கலைப்புக்கு எதிராக பெண்களது உரிமைகளை மறுக்கும் தீவிர கிறிஸ்தவ மத நாடான அமெரிக்காவின் நவீன காலனித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு பரிசுத்த ஆவிகளின் சபையை பேரரசு இறையியலாகப் பயன்படுத்துகின்றது. அமெரிக்கா தற்போது இஸ்ரேலுடைய இன அழிப்புக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குக் காரணம் அவர்களுடைய பொருளாதாரநலன்களே. அதனைக் காப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் ஆவிக்குரிய சபைகளுடாக காரணம் கற்பிக்கின்றது. தற்போது நடைபெறுவதும் ஒரு சிலுவை யுத்தமே. அதனையே பாதிரியார் முன்தார் ஐசாக் தனது பிரசங்கத்தில் தெளிவுபடுத்தி யுள்ளார்.

மேற்கத்திய உலகின் போலித்தனம்

“மேற்கத்திய உலகின் போலித்தனமும் இனவெறியும் பயங்கரமானது” என்று தனது பிரசங்கத்தில் குற்றம்சாட்டிய பாதிரியார் முன்தார் ஐசாக், “எங்கள் ஐரோப்பிய நண்பர்கள், எங்களுக்கு மனித உரிமைகள் அல்லது சர்வதேச சட்டம் பற்றி விரிவுரை செய்வதை நான் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. நாங்கள் வெள்ளையர்கள் அல்ல, அதனால் உங்கள் சொந்த தர்க்கத்தின்படி அது எங்களுக்குப் பொருந்தாது” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

“மேற்கத்திய உலகில் உள்ள பல கிறிஸ்தவர்களை” அவர் விமர்சித்தார், “மேற்கத்திய உலகம் இந்த போரில், பேரரசுக்கு தேவையான இறையியல் இருப்பதை உறுதிசெய்தனர். இது அவர்களின் தற்காப்பு என்று எங்களிடம் கூறப்பட்டது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“9,000 குழந்தைகளைக் கொன்றது எப்படி தற்காப்பு ஆகும்? 1.9 மில்லியன் பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்வு எவ்வாறு தற்காப்பு ஆகும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தார்: “பேரரசின் நிழலில் அவர்கள் காலனித்துவவாதிகளான ஆக்கிரமிப்பாளர்களைப் பாவிகளாகவும், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களை ஆக்கிரமிப்பாளராகவும் மாற்றினர். அவர்கள் பேசும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் பாலஸ்தீனியர்களின் இடிபாடுகளில் கட்டப்பட்டது என்பதை நாம் மறந்துவிட்டோமா?”

பாதிரியார் முன்தார் ஐசாக் மேலும் தனது விசனத்தை வெளிப்படுத்துகையில், “இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேவாலயங்களின் சம்மதம் இருப்பதால் நாங்கள் கோபமடைந்துள்ளோம். தெளிவாக இருக்கட்டும் நண்பர்களே, மௌனம் சம்மதம். மேலும் போர் நிறுத்தம் இல்லாமல் அமைதிக்கான வெற்று அழைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு முடிவு கட்டுதல், மற்றும் நேரடி நடவடிக்கை இல்லாமல் பச்சாதாபத்தின் ஆழமற்ற வார்த்தைகள் அனைத்தும் சம்மதம் என்றே அர்த்தம்” என்று சொல்லி தேவாலயங்களின் மௌனத்தை, அவர்கள் யுத்த நிறுத்தத்தைக் கோரி அழுத்தம் கொடுக்காததை காத்திரமான நடவடிக்கைகள் எடுக்காததை கடுமையாகச் சாடினார் அவர்.

காசா: உலகின் தார்மீக திசைகாட்டி

“எனவே எனது செய்தி இதோ, காசா இன்று உலகின் தார்மீக திசைகாட்டியாக மாறியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதிக்கு முன் காசா ஒரு நரகமாகவே இருந்தது. ஆனால் உலகம் அமைதியாக இருந்தது. இப்போது அந்த உலகின் அமைதியைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார் பாதிரியார் முன்தார் ஐசாக். அவர் மேலும் தொடர்கையில், “காஸாவில் என்ன நடக்கிறது என்று நீங்கள் திகைக்கவில்லை என்றால். உங்கள் உணர்வுகளை அது தொட்டுவிடவில்லை என்றால், உங்கள் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது”, என்று தன் ஆதங்கத்தை மிகத் தெளிவாக வைத்தார் முன்தார் ஐசாக்.

“கிறிஸ்தவர்களாகிய நாம் இனப்படுகொலையால் கோபப்படாவிட்டால், அதை நியாயப்படுத்த பைபிளை ஆயுதமாக்கினால், எங்கள் கிறிஸ்தவ சாட்சியில் ஏதோ தவறு உள்ளது, மேலும் எங்கள் நற்செய்தியின் நம்பகத்தன்மையை நாங்கள் சமரசம் செய்கிறோம்” என்றும் அவர் எச்சரித்தார். “இதை நீங்கள் ஒரு இனப்படுகொலை என்று அழைக்கத் தவறினால், அது ஒரு பாவம். இந்தப் பாவத்தை நீங்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறீர்கள். காசா இடிபாடுகளுக்கு அடியில் இயேசு பிறப்பார்.

அவர் கூறினார், “சிலர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை, சில தேவாலயங்கள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. நான் உனக்காக வருத்தப்படுகிறேன். இருப்பினும், பாலஸ்தீனியர்கள் மீது வீழ்ந்த பெரும் அடியையும் மீறி, நாங்கள் மீண்டு வருவோம், எழுவோம், நாங்கள் பாலஸ்தீனியர்களாக எப்பொழுதும் செய்தது போல் அழிவின் மத்தியில் இருந்து மீண்டும் எழுந்து நிற்போம்” என்று கூறி பாலஸ்தீனியர்களை சாம்பல் மேடுகளில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைகளுக்கு ஒப்பாகக் கருதினார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

ஆனால் இந்த இன அழிப்புக்கு ‘சம்மதம்’ தெரிவித்தவர்களுக்காக, நான் வருத்தப்படுகிறேன். நீங்கள் எப்போதாவது மீண்டு வருவீர்களா? இனப்படுகொலைக்குப் பிறகு உங்கள் நீலிக் கண்ணீர்கள் முதலைக் கண்ணீர்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் உங்கள் ஆறதல் வார்த்தைகள் உங்களுக்கே போதுமானதாக இருக்காது” என்று எச்சரித்த பாதிரியார் முன்தார் ஐசாக் “இனப்படுகொலைக்குப் பிறகு உங்கள் மன்னிப்பை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று உறுதியுடன் தெரிவித்தார். “காசா: உலகின் தார்மீக திசைகாட்டி எனவே எனது செய்தி இதோ, அவர் கூறினார்: “காசா இன்று தார்மீக திசைகாட்டியாக மாறிவிட்டது” என்று கூறி நீங்கள் யாருடன் நிற்கின்றீர்கள் இனப்படுகொலை செய்பவர்களுடனா அல்லது இனப்படுகொலைகளை நிறுத்தச் சொல்பவர்களுடனான என கருப்பு வெள்ளையாக தன் கேள்வியை முன் வைத்தார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

 

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதல் – இரண்டு பெண்கள் பலி!

காசாவில் சனிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் தஞ்சமடைந்திருந்த தாயும் மகளும்  கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்குகரை காசா இஸ்ரேல் ஜோர்தானில் கிறிஸ்தவ தேவலாயங்களை மேற்பார்வை செய்யும்  Latin Patriarchate of Jerusalem, என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

யுத்தம் ஆரம்பித்த பின்னர் காசாவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள்இந்த தேவாலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என  Latin Patriarchate of Jerusalem, தெரிவித்துள்ளது.

தேவாலயத்தின் கன்னியாஸ்திரிகள் பிரிவில் நடமாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சினைப்பர் தாக்குதலிற்குள்ளாகினர் காயமடைந்த ஒருவரைதூக்கிசெல்லப்பட்டவர் கொல்லப்பட்டார்என Latin Patriarchate of Jerusalem  தெரிவித்துள்ளது.

எந்த முன்னெச்சரிக்கையும் முன்னறிவித்தலும் இன்றி இந்த தாக்குதல் இடம்பெற்றது எந்த அத்துமீறல்களும் இடம்பெறாத தேவாலயவளாகத்திற்குள் அவர்கள் சுடப்பட்டனர் எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது.

54 மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த அன்னை தெரேசாவின் சகோதரிகள் என்ற கன்னியாஸ்திரிகள் மடமும் இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகளின் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது,இதன் போது அந்த கட்டிடத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கான ஒரேயொரு வழிமுறையாக காணப்பட்ட மின்பிறப்பாக்கி சேதமடைந்துள்ளது எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது.