காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளுக்காக நடமாடும் சேவைகள் நீதியமைச்சரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அதனை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.
இதே நேரம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக உருவாக்கப்பட்ட அலுவலகத்தின் தலைவர் எவருமே காணாமலாக்கப்ப்டவில்லை என தெரிவித்துள்ளார். அவருடைய கருத்து தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் “எவரும் காணாமலாக்கப்படவில்லை என காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் கூறியிருக்கிறார். மறுபக்கம் எங்களிடம் எவரும் சரணடையவில்லை என இராணுவம் கூறுகிறது. இதுபோன்ற கருத்துக்களால் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளில் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையை இழக்கின்றனர்.” என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும்போதே சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நீதி அமைச்சர் வட மாகாணத்தில் நடமாடும் சேவைகளை முன்னெடுப்பதை நான் வரவேற்கிறேன். இது வடக்கு மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சபையில் உரையாற்றிய நீதி அமைச்சர் இந்தியாவிலிருந்து வந்து மீள்குடியேறியவர்கள் தொடர்பில் பேசியிருந்தார். உண்மையில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியாவிலிருந்த வந்து இலங்கையில் மீள் குடியேற விருப்பத்துடன் இருக்கிறார்கள்.
எனினும் நாட்டின் தற்போதைய சூழல், மீள் குடியேறுவதாக இருந்தால் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாட்டுக்கு வருவதில் அவர்கள் தயங்கி வருகிறார்கள். எனவே இது தொடர்பில் நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதேவேளை காணாமலா க்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் நாட்டில் எவரும் காணாமல் போகவில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனால் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவே இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. எனினும் விசாரணைகளை மேற்கொள்ளாது இதுபோன்ற கருத்துகளை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சுயாதீனமான, நேர்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.