காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம். – கிளிநொச்சியில் சஜித் பிரேமதாச!

“மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்” என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

 

கிளிநொசியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சியின் ஆதரவு சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ‘சமத்துவக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்திக்திக்கு ஆதரவளித்தமை ஆரோக்கியமாக உள்ளது. வடக்கில் அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டி உள்ளது. இதனால் பல எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியும்.

அவ்வாறு பல திட்டங்களை செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம். மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்.

வாழ்வாதரம் உள்ளிட்ட பல திட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அதற்காக சிறப்பு அலுவலகங்கள் 5 மாவட்டங்களிலும் நிறுவ உள்ளோம்.

அதே போன்று ஒவ்வொறு பிரேதேச செயலக பிரிவுகளிலும் அபிவிருத்தி நிலையங்கள் நிறுவப்படும். இங்கு உள்ள மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம். அத்துடன், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுபோம். அதற்காகவே இந்த அலுவலகங்களை, மாவட்டம் மற்றும் பிரதேச செயலக ரீதியில் நிறுவ உள்ளோம்.

 

நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எனக்கு உள்ளது.

 

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளது. அந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.

 

அதே போன்று நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு IT நிறுவனங்கள் நிறுவப்படும். அதன் மூலம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கப்படும்”இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை !

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாாிகள் (OMP) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினரால் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்றையதினம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 128 பேரிடமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 17 பேரிடமும் விசாரணை மேற்கொண்டிருந்தது.

அதனையடுத்து, இன்றைய தினம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 50 பேரிடமும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 48 பேரிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

கண்டாவளை பிரதேச செயலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்த தலைமையில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15000 – ஆறுமாதங்களுக்கு தீர்வு என்கிறார் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவுகளுக்கு 6 மாத காலத்திற்குள் நீதி வழங்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், காணாமல் போனவர்கள் தொடர்பான முதல் கட்ட விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

முதல் கட்ட விசாரணைகள் நிறைவடைந்தவுடன், காணாமல் போனவர்களின் சான்றிதழ்கள், அல்லது இறப்புச் சான்றிதழ்களைப் பெறத் தயாராக இருக்கும் அவர்களின் உறவினர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

அத்துடன் கொடுப்பனவுகளைப் பெற விரும்பும் உறவினர்கள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் மூலம் உரிய கொடுப்பனவுகளைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 988 காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் ஆரம்பித்து 2300 ஆவது நாளான இன்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடனுடன், தமிழர்களின் நிலத்தில் இனப்படுகொலை நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்கு பின்னர், இலங்கை இராணுவமும் பௌத்த பிக்குகளும் சட்டவிரோதமாக தமிழர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து, பௌத்த சிங்களவர்கள் வசிக்காத தமிழர்களின் தாயகம் முழுவதும் மகா சங்க சிங்கள பௌத்த சின்னங்களை கட்டியுள்ளனர்.

குறித்த கடன் பண்டைய இந்து கோவில்களை அழிக்க பண பலத்தை வழங்கியதுடன், அழிக்கப்பட்ட கோவில்கள் சிங்கள இனவாத பௌத்த சின்னங்களால் மாற்றப்பட்டன.

இந்த பௌத்த சின்னம் தமிழர்களால் வெறுக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சின்னம் இன அழிப்பு மற்றும் தமிழ் தாயகத்தில் தெற்கிலிருந்து சிங்களவர்களின் குடியேற்றத்தை குறிக்கிறது.

தமிழர்களின் தாயகத்தில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனினால் மேலும் ஊக்குவிக்கப்பட்டதுடன், தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள்களை ஊக்குவித்து, எதிர்கால தமிழ்ச் சந்ததியை அழிக்கின்றது என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மே மாதத்திற்கு திகதியிடப்பட்டது விடுதலைப்புலிகளின் எழிலன் உட்பட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

எனினும் இன்றைய தினம் நீதிபதி வருகைதராமையினால் குறித்த வழக்கு மீண்டும் திகதியிடப்பட்டது. விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சரணடைந்த குடும்ப அங்கத்தவர்கள் சார்பில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுமீதான தீர்ப்பினை வவுனியா மேல்நீதிமன்றம் கடந்தமாதம் வழங்கியது. அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர் என்பதற்குரிய ஆதாரங்கள் இருப்பதில் மன்று திருப்தியடைந்தது.

எனவே அத்தகைய நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதுடன், அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை நீதிமன்றில் இன்றைய தினம் விளக்கமளிக்குமாறும் வழக்கு திகதியிடப்பட்டது.

எனினும் இன்றைய தினம் நீதிபதி மன்றுக்கு சமூகமளிக்காமையினால் குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அத்துடன் இன்றைய தினம் இராணுவம் சார்பாக சட்டத்தரணி ஒருவரே மன்றுக்கு சமூகமாகியிருந்ததுடன், வேறு எவரும் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.