காலிமுகத்திடல் ஸ்பிரிங்

காலிமுகத்திடல் ஸ்பிரிங்

அரப் ஸ்பிரிங் (Arab Spring) முதல் காலிமுகத்திடல் ஸ்பிரிங் (Galleface Spring) வரை போராட்டங்கள் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்குமா? இந்தப் போராட்டங்கள் யாருக்காக?

காலிமுகத்திடலில் அசௌகரியத்தை விரும்பாத உயர் மத்திய வர்க்கம் எரிவாயு, பெற்றோல் இல்லாமையால் போராட புறப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னதாகவே மத்திய கிழக்கு நாடுகளில் கணணி இளைஞர்கள் அந்நாடுகளில் இடம்பெற்று வந்த லஞ்சம், ஊழல் தொடர்பில் முறுகல் நிலையில் இருந்தனர். அதற்குப் பொறிதட்டும் வகையில் 2010 டிசம்பரில் ருனிசியாவில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவரிடம் பொலிசார் லஞ்சம் கேட்டு அவமானப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அத்தொழிலாளி தீக்குளித்து மரணித்தார். அத்தொழிலாளி தன் மீது வைத்த தீ, மத்திய கிழக்கில் பல நாடுகளுக்கும் பரவியது. பரப்பப்பட்டது. போராட்டங்கள் வெடித்தது.

புரட்சி வெடித்துவிட்டதாக, நவகாலனித்துவம் சரிந்து விட்டதாக கீ போட் மார்க்ஸிட்டுக்கள் ‘தண்ணி அடிக்காமலேயே உளற ஆரம்பித்தனர். கட்டுரை, கட்டுரையாக எழுதித் தள்ளினர். ஒருபடி மேலே போய் முதலாளித்துவத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டதாகவும் எழுதினர். ருனிசீயா, எகிப்து, யேமன், லிபியா என சிரியாவுக்கும் பரவிய இப்புரட்சியில் அமெரிக்க – பிரித்தானிய முதலாளித்துவக் கூட்டும் குளிர்காய்ந்தது. இந்த ‘அராபிய புரட்சி’யில் 180,000 பேர் உயிரிழந்தனர். ஆறு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். ருனிசியா தவிர்ந்த அரப் ஸ்பிரிங் நடைபெற்ற நாடுகள், அவை முன்னிருந்த நிலையைக் காட்டிலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டன. வாழ்நிலை மிகக் கீழ்நிலைக்கு சென்றது மட்டுமல்ல, இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னும் அவை முன்னைய நிலைக்கு வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஜேவிபி கிளர்ச்சி:

1971இல் இரவோடு இரவாக அதிகாரத்தை கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையில் ஜேவிபி புரட்சியில் இறங்கியது. இதற்காகப் போடப்பட்ட ஊரடங்கு காலத்தில் 1971 மார்ச்சில் தான் நானும் இவ்வுலகில் இலங்கையின் கலாச்சார தலைநகரான அனுராதபுரத்தில் அவதரித்தேன். 1971 ஜேவிபி புரட்சியில் என்ன நடந்தது? பிரேமாவதி மன்னம்பேரி என்ற கிராமத்து அழகியை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச் சென்று படுகொலை செய்தனர். இவ்வாறு பல்லாயிரக்கணக்காண இளைஞர்கள் யுவதிகள் கொன்றொழிக்கப்பட்டனர். இன்று ஜேவிபியின் ஒரு பகுதி அரசோடு, மறுபகுதி போராட்டகளத்தில், அதிலும் ஒரு பகுதி இந்த தீவைப்புகளுக்குப் பின்னால்.

தமிழீழ விடுதலைப் போராட்டம்:

மேதகுவில் 1980க்களின் முற்பகுதில் பஸ்க்கு தீ வைத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக கதை சொல்லப்படுகின்றது. முப்பது ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு தள்ளப்பட்டு, பத்தாண்டுகள் கடந்து; இன்று நாற்பது ஆண்டுகளில் தமிழ் மக்கள்; எண்பதுக்களில் இருந்த அரசியல் பொருளாதார நிலைகளிலும் பார்க்க கீழான அரசியல் பொருளாதார நிலையிலேயே கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளனர். போராட்டம் என்ற பெயரில் கொடுத்த உயிரிழப்புகள், பொருளிழப்புகள் எதுவும் தமிழர்களின் அரசியல் பொருளாதார நிலைகளை உயர்த்த தவறிவிட்டது மட்டுமல்லாமல் இன்னமும் கீழ்நிலைக்குத் தள்ளிவிட்டன.

தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார உரிமைகளில் அறிவுபூர்வமான நம்பிக்கை கொண்ட, அதற்காக இதயபூர்வமாக தங்களை அர்ப்பணிக்கத்தக்க அரசியல் தலைமைகள் போராட்டத்தை தலைமை தாங்க வரவில்லை. உணச்சிவசப்பட்ட இளைஞர்களால் உந்தப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம், அதன் முளையிலேயே தன் இலக்கை இழந்தது. தனிமனித வழிபாட்டிலும் அதற்காக சகோதரப் படுகொலைகளிலும் இறங்கியது. சிந்தனையும் இதயமும் தமிழீழ விடுதலையை கைவிட்டு, தனிமனித வழிபாடே போராட்டமான பின், தமிழீழம் முளையிலேயே கருகிவிட்டது. அதன் பின் இடம்பெற்றதெல்லாம் வெறும் அதிகாரத்துக்கான போட்டியே. பலமுடையவர்கள் பலமிழந்தவர்களை அழித்தொழித்தனர். நடந்து முடிந்தது விடுதலைப் போராட்டமே அல்ல. உணர்ச்சிக்கு அடிமையாகி போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் சாதித்தது என்ன? தமிழர்களுக்கு கிடைத்தது வெறும் ஒப்பாரியும் சேதமும் தான். இந்த ஒப்பாரியை வைத்துக்கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் எஸ் சிறீதரனும் சாணக்கியணும் இன்னும் இன்னும் பேர்களும் பாராளுமன்றம் போய் தம்பட்டம் அடிப்பதும் அவர்களது வாக்கு வங்கியை பலப்படுத்துவதும் தான் இன்றும் நடைபெறுகின்றது.

காலிமுகத்திடல் போராட்டம்:

இப்போது இதே பாதையில் காலிமுகத்திடலில் போராடியவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிக்கிறோம், கார்களை எரிக்கின்றோம், பஸ்களை எரிக்கின்றோம் என்று நெருப்பை பற்ற வைத்துக்கொண்டுள்ளனர். இவர்களுடைய கூட்டுஉளவியல் அராஜகம் இலங்கை எதிர்நோக்குகின்ற எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகப் போவதில்லை. பதவியில் இருந்து இறக்கப்பட்ட ராஜபக்ச அடியாட்களை இறக்கி போராட்ட காரர்களை தாக்கியதால், மக்கள் கொதித்து எழுந்து; ஆனால் மிகத் திட்டமிட்டு முப்பது வரையான பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைத்தது என்பது சற்று ஆச்சரியம் தான். மிகவும் உசார் நிலையில் இருந்த பாதுகாப்புப் படைகள் ஒரு வீடு எரிக்கப்பட்ட பின்னும் ஏனைய வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததும் அதைவிட ஆச்சரியமானது தான். இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இவ்வளவு கண்ணியாமாக இயங்குகின்றன என கோத்தபாய ராஜபக்ச நிரூபிக்க முயற்சிக்கிறாரோ என்று எண்ணத் தோண்றுகிறது. அதற்குப் பின் மேற்குலகின் செல்லப் பிள்ளையான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக்கப்பட்டார். மேற்கு நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று தங்கள் வாழ்த்துக்களை நேரில் சென்று தெரிவித்துக்கொண்டுள்ளன. காலிமுகத் திடல் ஸ்பிரிங் – காத்து வாங்கும் போராட்டம் தனது இலக்கை எட்டியது?

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் போராட்டத்தை துண்டிவிட்டவர்களுக்கு எவ்வித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலருக்கும் அவர்களுடைய பிரச்சினை தங்களுக்கு பெற்றொல், எரிவாயு கிடைக்கவில்லை என்பதே. பொருட்கள் விலையேறுகிறது என்பது உண்மை தான். மக்கள் அப்படித்தான் இருப்பார்கள், அவர்களுக்கு அரசியல் பொருளாதாரம் தொடர்பாக பெரிய புரிதல் இருப்பதில்லை என்பது உண்மைதான். இலவசக் கல்வியில் பல்கலைக்கழகம் வரை சென்று படித்துவந்த இளம்தலைமுறையினரும் இப்படி இருந்தால் சனநாயகம் எப்படி இயங்கும்? இந்த பொருளாதார பிரச்சினை பற்றி ஊடகங்களும் தங்களுடைய 24 மணிநேரச் செய்தியை நிரப்ப உணர்ச்சி பூர்வமான செய்திகளுக்கு மட்டுமே அலைகின்றன.

ஒரு பிரச்சினை வந்தால் பழியை யார் மீதாவது போட்டுவிட்டு போவதே வேலையாகிப் போய்விட்டது. பிறகு அதை வைத்து நாலு பேரை உசுப்பேத்தி எரிக்கிறது, கொழுத்துகிறது என்று தான் சுதந்திர இலங்iகியின் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு இன, மத பேதம் எதுவும் கிடையாது. ஆரம்பத்தில் சிங்கள இளைஞர், யுவதிகளை அரசு கொன்று குவித்தது. அதன் பின் தமிழர்களை அரசு கொன்று குவித்தது. பின் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என அரசு வன்முறையை அவிழ்த்து விட்டது. இப்போது இரண்டாவது சுற்று ஆரம்பித்துள்ளது.

போராட்டத்தை தூண்டியவர்களையும் போராட வந்தவர்களையும் காக்க மேற்கின் செல்லப் பிள்ளை ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவிக்கு கொண்டுவரப்பட்டுவிட்டார். அதிஸ்ரவசமாக விரல் விட்டு எண்ணக் கூடிய கொலைகளுக்குள் ‘போராட்டம்’ தணிய ஆரம்பித்துள்ளது. வாக்குகளால் பதவிக்கு வரமுடியாத ரணில் விக்கிரமசிங்க போராட்டம் என்ற பெயரில் இடம்பெற்ற தீ வைப்புகள் கொலைகளைத் தொடர்ந்து பதவிக்கு கொண்டுவரப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்தது எப்படி பொருளாதார பிரச்சினைக்கும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘போராட்டத்துக்கும்’ தீர்வானது? இது தான் மேற்குலகின் மாயா ஜாலம். ஆரப் ஸ்பிரிங் முதல் கோல்பேஸ் ஸ்பிரிங் வரை போராட்டங்களை மேற்குலகு தனக்கான வரப்பிரசாதமாக மாற்றிக் கொள்வதில் மிகக் கைதேர்ந்தவர்கள். ஆனால் போராட்டத்தை தூண்டுபவர்கள், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் உணர்ச்சி வசப்பட்ட முட்டாள்களாகவே உள்ளனர். அவர்களை வழிநடத்துவதற்கான புரட்சிகர சிந்தனையுடைய கட்சிகள் அங்கு இல்லை. அவ்வாறு இருந்தாலும் அவர்கள் முகவரி அற்றவர்களாகவே உள்ளனர் அல்லது இந்த அலைக்குள் அவர்களும் அள்ளுண்டு விடுகின்றனர்.

நாட்டின் பொருளாதார நிலையை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இந்த் சூழலை மாற்றுவதற்கு பதிலாக அவரவர் தங்கள் குறுகிய அரசியல் லாபங்களுக்காக எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்றளவில் செயற்பட்டனர். மற்றும்படி எவ்வித அடிப்படை மாற்றத்தையும் அவர்களால் முன்வைக்க முடியவில்லை. ராஜபக்ச குடும்பம் கொன்றொழிக்கப்பட வேண்டிய நரகாசுரர்களாகவும் இந்தியாவும் மேற்குலகும் இலங்கையை காப்பாற்ற வந்த தேவதூதர்களாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பொருளாதார நெருக்கடியின் பின்னணி:

இன்றைய பொருளாதார நெருக்கடியை ராஜபக்ச குடும்பத்திற்குள் போட்டு மூடி மறைப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமன். ராஜபக்ச ஒன்றும் புனிதரும் அல்ல போராடுபவர்கள் யாவரும் பொறுப்பற்றவர்களும் அல்ல. வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் 24 மணி நேரத்தலைப்புச் செய்திகளுக்கு மட்டுமே பயன்படும்.

இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவின் சோசலிச விரிவாக்கத்தை தடுக்கவே அமெரிக்கா ஜப்பானில் ஹிரோசிமா மற்றும் நாகசாக்கி நகரங்களில் அணு ஆயதங்களை பரீட்சித்துப், பல லட்சம் மக்களைக் கொன்றுகுவித்தது. இப்போது உக்ரைனில் ஆயதங்களை குவித்து வருவதும் நேட்டோவை விஸ்தரித்து தன்னுடைய சந்தைப் பொருளாதாரத்தை விரிவாக்கவே. அமேரிக்கா பேசுகின்ற ஜனநாயகம், மனித உரிமைகள் அனைத்துமே மிகப் போலித்தனமானவை. அவர்கள் ஜனநாயகம் மனித உரிமைகள் பேசுவது சந்தைப் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு மட்டுமே.

இச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கின்ற போதே அமெரிக்காவில் வெள்ளை இனவாதி ஒருவர் கறுப்பின மக்கள் வாழும் பகுதியில் உள்ள சுப்பர்மாக்கற்றினுள் புகந்து பத்துப் பேரைப் படுகொலை செய்துள்ளார். அமெரிக்கா உலகெங்கும் ஆயதங்களை விற்று உலக சமாதானத்தை அழித்துவரவது மட்டுமல்ல தன்னுடைய நாட்டிலும் சமாதானத்தை அழித்து வருகின்றது. கொரோனா காலத்தில் அவரவர் பஞ்சம் வந்துவிடும் என உணவுப் பொருட்களை வாங்கி வீட்டில் சேர்க்க அமெரிக்காவில் ஆயுதங்களையும் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்தனர். தற்பாதுகாப்பிற்காம். இவர்கள் தன்னியக்க துப்பாக்கிகளை வாங்கியது என்ன கொரோனா வைரஸை சுடுவதற்கா?

புரட்சிக்கு எதிரான அபிவிருத்திக் கொள்கை:

இந்த இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமடைய ஆரம்பித்தன. அந்தக் காலகட்டத்தில் தான் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும் சுதந்திரமடைந்தன. இவ்வாறு சுதந்திரம் அடையும் நாடுகள் சோசலிச முகாமுக்குள் சாய்ந்து பொருளாதார தன்னிறைவடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை தன்னுடைய முதலாளித்துவ கொள்கையின்பால் ஈர்த்து கடன்காராக, காலம்பூராவும் நவகாலனித்துவத்திற்குள் வைத்திருப்பதற்கு ஒரு கொள்கைத் திட்டத்தை வகுத்தது, முதலாளித்துவத்திற்கு தலைமை தாங்கிய அமெரிக்க – பிரித்தானிய நாடுகள். அது தான் புரட்சிக்கு எதிரான அபிவிருத்திக் கொள்கை.

ஒரு நாடு சுதந்திரம் அடைந்து சொந்தக் காலில் நிற்பதற்கு, பொருளாதார வளம் அவசியமாக இருந்தது. இந்தப் புரட்சிக்கு எதிரான அபிவிருத்தி கொள்கைத் திட்டத்தினூடாக அமெரிக்கா – பிரித்தானிய நாடுகள் இந்த சுதந்திர நாடுகளுக்குள் தங்கள் மூலதனத்தை ஊடுருவச் செய்து, அந்நாடுகளை தமது நவகாலனிகள் ஆக்கின. அது எவ்வாறு? உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மூலமாக அந்நாடுகளை கடன்காரர் ஆக்குவது. இறக்குமதிகளை ஊக்குவித்து; தங்கள் நாடுகளின் பொருட்களை இறக்குமதி செய்ய வைத்து; நுகர்வோர் கலாச்சாரத்தை தூண்டிவிட்டு; நாட்டையும் நாட்டு மக்களையும் கடன்காரர் ஆக்குவது. பின் கடன்காரர்களாக வைத்திருப்பதற்காக, நிபந்தனைகளை விதிப்பது. தாங்கள் இந்நாடுகளை தொடர்ந்தும் சுரண்டுவதற்கு வாய்ப்பாக திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது, இந்த வல்லாதிக்க நாடுகளின் நிபந்தனையாக இருந்தது. இலங்கை போன்ற சிறிய நாடுகளால் இந்த வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராகச் செயற்பட முடியாத நிலை. அதனால் படிப்படியாக நட்டை அந்நிய சக்திகளிள் சுரண்டலுக்கு அனுமதித்தனர்.

உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் இந்த வல்லாதிக்க சக்திகளின் முகவர்களே. உலகம் முழவதும் கொடும்கோலர்களுக்கும் சர்வதிகாரிகளுக்கும் (சதாம் ஹ_சைன், முகம்மர் கடாபி, ரொபேட் முகாபே, ஹொஸ்னி முபாரக், பேர்டினட் மார்க்கோஸ்) எதிர் புரட்சிகர அபிவிருத்திக் கொள்கையினூடாக வாரி இறைத்து அந்நாடுகளை வங்குரோத்து ஆக்கியதும் இந்த வல்லாதிக்க நாடுகள் தான். ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் தங்களுக்கு கடன்தர வேண்டாம், தங்களுடைய உற்பத்திப் பொருட்களை வரித் தடையில்லாமல் ஏற்றுமதி செய்ய அனுமதியுங்கள் என்ற போது இந்த வல்லாதிக்க நாடுகள் மறுத்துவிட்டன. இவ்வாறு தான் எங்களுடைய மூலப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி அவற்றை முடிவுப் பொருளாக்கி, அதனை கூடிய விலைக்கு எமக்கே விற்றனர். எங்களுடைய பாலை குறைந்த விலையில் வாங்கி, அங்கர் மாவை எமக்கே கூடியவிலைக்கு விற்றனர். இங்கு பிரித்தானியாவில் கூட நாங்கள் பசுப்பாலைத் தான் பாவிக்கிறோம். ஆனால் இலங்கையிலோ மக்கள் அங்கர் பிரியர்களாகி விட்டனர். இந்தப் பொருளாதார நெருக்கடி வந்திராவிட்டால் நாங்கள் கோழி போடாத முட்டை சாப்பிடவும் பழகிக்கொண்டிருப்போம். மீளா முடியாத இன்னும் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்போம்.

போபால் விசவாயுக் கசிவு:

1984இல் நான் இளைஞனாக இருந்த காலம் எங்களை உலுக்கிய செய்தி. இந்தப் பெரிய இந்தியாவுக்கே அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் தண்ணி காட்டியது. 1984 டிசம்பர் 2இல் போபால் விசவாயுக் கசிவு 15,000 பேரைப் பலிகொண்டது. போபால் விசவாயூக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நிறுவனம் இன்றுவரை நட்ட ஈடு வழங்கவில்லை. இப்போது நாற்பது ஆண்டுகளாகியும் இன்னமும் பிள்ளைகள் ஊனமாகவே பிறக்கின்றன. இந்த அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் சுரண்டல் பொருளாதாரக் கொள்கைகள் ஏனைய நாடுகளில் ஏற்படுத்திய அழிவுகள் பசுமரத்து ஆணிபோல் இன்னமும் மனங்களில் உள்ளது. மறக்க முடியவில்லை. அதற்கு மேல் இன்னமும் இந்த நாடுகளின் சுரண்டல்களுக்காக பங்களாதேஸில் ஆடைத் தொழிற்சாலைகள் தீப்பிடித்து எரிந்து தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர்.

இலங்கையிலும் அவ்வாறான ஒரு பொருளாதார சுதந்திர வர்த்தக வலயத்தை அன்றைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா உருவாக்கினார். இலங்கையை சர்வதேச சந்தைக்கு திறந்துவிட்டார். சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடதுசாரிக் கட்சிகளோடு இணைந்து உருவாக்கிய தன்னிறைவு பொருளாதாக் கொள்கைக்கு சாவுமணி அடித்தார். தமிழ் தேசியவாதக் கட்சிகளும் ஜே ஆர் ஜெயவர்த்தனவோடு சேர்ந்து அந்த மணியை ஆட்டிவிட்டனர்.

பேர்டினட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்கோஸின் லஞ்சம் ஊழல்:

1980க்களில் எங்களை உலுக்கிய மற்றுமொரு செய்தி பிலிப்பைன்ஸில் பேர்டினட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்கோஸின் லஞ்சம் ஊழல் மற்றும் டாம்பீகரமான வாழ்க்கை. அதற்கு எதிராக போராட்டம் வெடித்து. இந்த பரம்பரையான குடும்ப ஆட்சித் தம்பதிகள் ஓரம்கட்டப்பட்டனர். அப்போது இமெல்டா மார்க்கோஸின் வீட்டு அலுமாரிகளில் அவருக்கு 1000 சோடி பாதஅணிகள் இருந்தது. இவ்வாறு பரம்பரை பரம்பரையாகவே பிலிபைன்ஸ்சை சூறையாடிய இப்பரம்பரையில் இருந்து; மார்க்கோஸ் தம்பதிகளின் மகன் பொங் பொங் மார்க்கோஸ் இன்று அவதார புருஷராக வந்துள்ளார். தனது பெற்றோரின் காலம் பிலிப்பைன்ஸின் பொற்காலம் என்று சொல்லி தற்போது தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளார். மக்கள் இப்போதெல்லாம் எதனையும் குறுகிய காலத்திலேயே மறந்துவிடுகின்றனர். ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் தேர்தல்கள் கூட ஒரு சூதாட்டம் ஆகிவிட்டது.

இலங்கையின் மத்திய வங்கியை சுருட்டிக்கொண்டு சென்ற, ஈஸ்ரர் குண்டு வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டதைப் பற்றி கவலையேபடாத முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆறாவது தடவையாக பிரதமராக்கப்பட்டு உள்ளார். மேற்குலகின் செல்லப் பிள்ளையான இவர் உலக வங்கிக்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கையை அடகு வைப்பாரா இல்லையா என்பது விரைவில் தெரியவரும். அல்லது பெற்றோல் பிரச்சினையும் எரிவாயுப் பிரச்சினையும் தீர அவரை ஆறாவது தடவையாகவும் கலைத்துவிடுவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

திறந்த சந்தைப் பொருளாதாரம்:

இலங்கையை கடன்காரர் ஆக்கிய வல்லாதிக்க நாடுகளின் எதிர் புரட்சி அபிவிருத்திக்கொள்கை இலங்கையை 16 தடவைகள் வங்குரோத்து அடையாமல் காப்பாற்றி இருந்தது. பதினேழாவது தடவையாகவும் அவர்கள் காப்பாற்றுவார்கள். இலங்கை மக்களுக்காக அல்ல இலங்கையை இன்னும் இன்னும் கொள்ளையடிப்பதற்காக. ஏன் இலங்கை இவ்வாறு கடனாளியானது? ராஜபக்ச குடும்பம் கொள்ளையடித்து என்பது பொருளாதாரத்தில் அரிவரி தெரியாதவர்களின் வாதம். இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும் ராஜபக்ச குடும்பத்தின் கொள்ளைக்கும் சம்பந்தம் கிடையாது. டொனால்ட் ரம்மில் இருந்து ராஜபக்ச வரை பொறிஸ் ஜோன்சன் உட்பட எல்லோருமே தங்கள் தங்கள் நாட்டை கொள்ளையடித்துள்ளனர். என்ன ராஜாபக்ச கொஞ்சம் மொக்குத்தனமாக செய்துவிட்டார் போல் தெரிகின்றது. உலக்கை போன ஓட்டையைப் பார்க்காமல் ஊசிபோன ஓட்டைக்கு போராட்டம் என்ற பெயரில் நாட்டை பெரும் கொள்ளையர்களிடம் தள்ளிவிட்டுள்ளனர்.

இலங்கையன் பெருமை:

திறந்த சந்தைப் பொருளாதாரமே செல்வத்தை உருவாக்கும் வறுமையை ஒழிக்கும் என்று உலகுக்கு வகுப்பெடுக்கின்றது அமெரிக்கா. ஆனால் உலகின் செல்வத்தில் 50 வீதத்தை தன்னகத்தே வைத்துள்ள அமெரிக்காவில் இலவச மருத்துவம் இல்லை. ஆனால் இலங்கையில் இலவச மருத்துவம். அடிப்படைச் சுகாதார சேவைகளை வழங்குவதில் இலங்கை இன்னமும் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மனித உரிமை என்பது பட்டினியாலும் வருத்தம் துன்பம் வந்து சாவதற்குமான உரிமையாகவே உள்ளது. இலங்கையில் இன்னும் இந்நிலை இல்லை. இலங்கையர்களாக இருப்பதில் பெருமைப்பட வேண்டிய விடயம். ஆசிறி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போதே மரணமானவரின் உடலை வைத்துக்கொண்டு அவ்வுடலை திருப்பிக் கொடுக்க 5 லட்சம் ரூபாய் கேட்டனர். அப்படியிருக்கும் போது இத்தனை தசாப்தங்கள் பல லட்சம் உயிரிகளை காப்பாற்றுவதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

பிரித்தானியாவில் கல்வி கற்கும் ஒவ்வொரு பிள்ளையும் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து வெளியேறுகின்ற போது £ 50,000 பவுண்கள் (500 x 50,000 = 25,000,000 ரூபாய் / 25 மில்லியன் ரூபாய்) கடனோடு தான் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். இலங்கையில் பல்கலைக்கழகம் முடிக்கும் மாணவனுக்கு ஒரு சதம் கடன் கிடையாது. உலகிலேயே உயர்கல்வியை முற்றிலும் இலவசமாக வழங்குகின்ற நாடுகளில் இலங்கை மிக முக்கியமானது. இலங்கையில் இலவசமாகக் கல்வி கற்ற மருத்துவர்களும் பொறியியலாளர்களும் தான் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர். அந்நாடுகளை கட்டியெழுப்பவும் உதவுகின்றனர். இது இலங்கையர்கள் பெருமைப்பட வேண்டிய விடயம். அப்படியானால் பல தசாப்தங்களாக பல்கலைக்கழகம் வரை இந்த இலவசக் கல்வியை வழங்குவதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

பிரித்தானியாவில் நாங்கள் கொள்வனவு செய்யும் பெற்றோல் எரிவாயுவிற்கு நாங்கள் அவற்றின் நிர்ணயிக்கப்பட் விலையைக் காட்டிலும் கூடுதலாக வரியையும் சேர்த்து செலுத்துகின்றோம். ஆனால் இலங்கையில் பெற்றோலையும் எரி வாயுவையும் வாங்கிய விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்கிறது. அப்படியானால் குறைக்கப்பட்ட அந்தப் பெறுமதியை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

மண்வீடுகள் எல்லாம் கல்வீடுகளாகி உள்ளதே அதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

வீட்டுத்தோட்டம் செய்வதற்கு வழங்கப்பட்ட உபகரணங்கள், விதைகள், இலவச உலர் உணவுகள் இதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

உலகிலேயே அதிக விடுமுறை தினத்தை கொண்ட நாடு இலங்கை. இந்தச் சலுகை எப்படி சாத்தியமானது?

இவ்வளவு விடுமுறையும் கொடுத்து 16 லட்சம் அரச ஊழியர்களை தேவைக்கதிகமாக அமர்த்தி சம்பளம் கொடுக்கப்படுகின்றது. உத்தியோகத்தில் இருப்பவர்களும் வேலையே செய்யாமல் ஊதியம் பெற நினைக்கின்றனர். அமெரிக்காவிலோ பிரித்தானியாவிலோ இவை சாத்தியமில்லை.

கிளிநொச்சியில் சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற சம்பவம்:

பிரதேச செயலகத்திற்கு தன் காணி உறுதிப்பத்திரத்தை எடுக்கச் சென்றிருந்தார் என் சகோதரி ஒருவர். அங்கு நால்வருக்கு மேல் பணியில் இருந்தனர். 100 ரூபாயை வாங்கி அதற்கு பற்றுச் சீட்டைக்கொடுத்து காணி உறுதியை கையளிக்க வேண்டும். அவர் அலுவலகத்திற்குச் சென்ற போது அங்கு சேவை பெறுவதற்கு வேறு யாரும் வந்திருக்கவில்லை. அதேசமயம் இவர் சென்றதும் இருந்த பணியாளர்கள் ஆளுக்கு ஆள் கண்ணைக் காட்டினார்களேயொழிய யாரும் அவருடைய தேவையைக் கேட்கவில்லை. அவரை இருக்கும்படி உதரவிட்டுவிட்டு, குசு குசுத்தனர். பின்னர் ஒருவர் வந்தார் அவர் ‘நான் அக்ரிங் தான். அதுக்காகா நானா எல்லாருக்கும் அக்ரிங்’ என்று புறுபுறுத்துவிட்டு ஒரு மணிநேரம் இழுத்தடித்துவிட்டு காணி உறுதியைக் கொடுத்தனர். என் சகோதரி முழுநேரம் வேலை பார்ப்பவர். அவர்கள் தாங்கள் வேலை செய்யாமல் இருப்பதும் இல்லாமல் தன் நேரத்தையும் வீணடித்துவிட்டார்கள் என்று சினந்துகொண்டார். இலங்கையில் அரச ஊழியர்களின் நிலை இது தான். புகையிரத ஓட்டுனர் இரு மணிநேரம் தாமதமாக வந்து பல்லாயிரக்கணக்காணவர்களின் நேரத்தை வீணடித்தது போல.

இந்த லட்சணத்தில் ‘Gotta Go Home’ வேறு. கோட்டபாயா ராஜபக்ச செய்த மிகப்பெரிய முட்டாள்தனம் 15 வீதமாக இருந்த பொருட்களுக்கான வரியை ஐம்பது வீதத்தால் 8 வீதமாகக் குறைத்தது. இந்த வரிக்குறைப்புச் சலுகையை அனுபவித்தவர்கள்தான் இப்போது ‘Gotta Go Home’ கோஷம் போடுகின்றனர்.

கோவிட் தாக்கமும் உக்ரைன் யுத்தமும்:

இவ்விடத்தில் கோவிட் தாக்கத்தை தவிர்க்க முடியாது. அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் செல்வந்த நாடுகளாகவும் அறிவுக் கணதியான நாடுகளாக இருந்தும் அந்நாட்டு தலைவர்களின் முட்டாள் தனங்களினால் கோவிட்டினால் இறந்த மக்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கு. அமெரிக்காவில் கோவிட் இனால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது, அயல்நாடானான இந்தியாவில் கோவிட்டினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் என மதிப்பிடப்படுகின்றது. இந்நாடுகளில் இன்றும் பல நூறு பேர் இறந்துகொண்டுள்ளனர். பிரித்தானியாவில் சராசரி தினமும் 200 பேர் இறந்துகொண்டுள்ளனர். அது பற்றி அத்தலைவர்கள் கண்டுகொள்வதும் இல்லை. அவை செய்தியாக வருவதும் இல்லை. ஆனால் இலங்கையில் இந்நிலை ஏற்படவில்லை. நாட்டின் எல்லைகள் முடக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டதால் நாடு உயிராபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது.

ஆனால் கோவிட் தாக்கமும் உக்ரைன் யுத்தமும் இலங்கையின் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலகின் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கின்றது. பிரித்தானியாவில் 2 வீதமாக இருக்க வேண்டிய விலைவாசி உயர்வு ஏழவீதத்தைக் கடந்து விட்டது அமெரிக்காவில் அது பத்து வீதத்தை தொட்டுவிட்டது. இலங்கையில் 21 வீதத்தை கடந்துவிட்டது. ஆனாலும் இந்நாடுகளில் வேலையற்றோர் வீதம் இன்னமும் குறைவாகவே காணப்டுவது சாதகமான அம்சமே.

உலக விலைவாசி உயர்வு:

கோவிட்கால முடக்கத்திலும் மக்கள் வருமானத்தை இழக்காததும் (அரசு மற்றும் உதவிகள்) செலவீனங்கள் குறைந்திருந்ததும் (நாடுகள் முடக்கப்பட்டு இருந்ததால் செலவு செய்ய வழியிருக்கவில்லை.) இப்போது முடக்கம் தளர்ந்ததும் பொருட்களுக்கான தேவைகள் அதிகரித்துவிட்டது. ஆனால் கோவிட்காலத்தில் முடக்கப்பட்ட நிறுவனங்கள் இன்னமும் மீள இயங்க ஆரம்பிக்காததால் (குறிப்பாக சீனாவில் இருந்து உற்பத்தி சகஜநிலைக்கு வரவில்லை) பொருட்களின் தட்டுப்பாடு விலையை அதிகரித்தது. அத்தோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எரிபொருட்களின் விலையை எகிற வைத்தது. தானியங்களின் விலையை எகிற வைத்தது. அதனால் பொருட்களின் உற்பத்திச் செலவும் அதிகரித்தது. இந்த விலையேற்றம் என்பது தேவைகளின் அதிகரிப்பும் உற்பத்திச் செலவின் அதிகரிப்பும் இணைந்ததாக உள்ளது. அத்தோடு இலங்கை முற்றிலும் இறக்குமதியை மட்டுமே நம்பி இருந்ததால் நாட்டின் நாயணத்தின் பெறுமதி இறக்கம் இறக்குமதிப் பொருட்களின் விலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும். அமெரிக்க இந்த விலையேற்றத்தை சமாளிக்க சீனப் பொருட்களின் மீது விதித்திருந்த வரியை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த விலையேற்றம் மற்றும் பிரச்சினை இலங்கைக்கு மட்டுமான பிரச்சினையும் அல்ல.

கோத்தபாய செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதும்:

கோவிட் முடக்கம் உலகத்தையே முடக்கியது. இலங்கையில் அந்நியச் செலவாணியை ஈட்டும் உல்லாசப்பயணத்துறை முற்றாக ஸ்தம்பித்தது. நாட்டிற்கு எவ்வித வருமானமும் இல்லை. ஆனால் இறக்குமதி எகிறியது. இந்த நெருக்கடி நிலையை அரசு எதிர்வு கூறியிருக்க வேண்டும். அதனைச் சமாளிப்பதற்கான நீண்ட காலத் திட்டங்களை அரசு வகுத்திருக்க வேண்டும். கடன்களை மீளச் செலுத்த முடியாது என்ற அறிவிப்பை மிக நீண்ட காலத்திற்கு முன்னதாகவே அரசு அறிவித்திருக்க வேண்டும். அவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நீண்ட காலத்திற்கு முன்னரே முடக்கி இருக்க வேண்டும். உள்ளுர் உற்பத்தியை ஊக்குவித்திருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் அறிவு வளத்தை இதனை நோக்கி திசை திருப்பி இருக்க வேண்டும். இவ்வளவு சூரிய ஒளியை வருடம் முழவதும் பெறும் இலங்கை எரிசக்தியில் தன்னிறைவை காண்பதை நோக்கிச் சென்றிருக்க வேண்டும்.

எண்பதுக்கள் முதல் இன்று வரை ஆட்சிக்கு வந்த எந்த அரசும் இதனைச் செய்யவில்லை. ராஜபக்சாக்களும் செய்யவில்லை. ராஜபக்சாவை மாற்றி ரணிலைக் கொண்டு வந்து உலக வங்கிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கையை அடகு வைக்கும் போராட்டம், போராட்டம் அல்ல அரசியல் கும்மாளமாகவே அமையும். எவ்வித புரட்சிகர சிந்தனையும் இல்லாமல் வெறும் உணர்ச்சிப் பிளம்பில் நடக்கும் போராட்டங்களில் பொழுது போக்குக்காக ஈடுபட்டு எதிர்காலத்தில் உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் நாட்டை இட்டுச்செல்லாமல் நாட்டுக்கு உல்லாசப் பயணிகளை வரவழைத்து அந்நியச் செலவாணியை ஈட்டுவது இப்பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும்.

இந்தப் போராட்டங்கள் யாருக்காக?

ஏன் இந்தப் போராட்டகாரர்கள் கடன்களை மீளச் செலுத்தாதே என்று கோரவில்லை?
ஏன் இந்தப் போராட்டகாரர்கள் கடன்களை ரத்து செய்யக் கோரவில்லை?
ஏன் இந்த போராட்டகாரர்கள் அநியாய வட்டி வாங்காதே எனக் கோரவில்லை?
ஏன் இந்தப் போராட்டகாரர்கள் சர்வதேச நாணய நிதியத்தையும் உலக வங்கியையும் எதிர்க்கவில்லை?

இந்தப் போராட்டங்களினதும் ரணிலினதும் வரவினாலும் சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் தலையீடு செய்யும். நாட்டுக்கு மேலும் மேலும் கடன் வழங்குவார்கள். வட்டி வீதத்தை கூட்டுவார்கள். பெற்றோல் எரிவாயுவிற்கு வழங்கிய மானியத்தை குறைப்பார்கள் அல்லது நிறுத்துவார்கள். பெற்றோல் மற்றும் எரிவாயுவின் விலைகள் நிரந்தரமாக மிகக் கூடுதலாக அதிகரிக்கும். இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றிற்கு செலவிடப்படும் நிதி குறைக்கப்பட்டு அந்நிதி கடனுடைய வட்டியைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும். இறக்குமதிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி கூடும். அதன் பின் இன்று போராடிய உயர்தர மத்தியதர வர்க்கம் இல்லாதவர்களைப் பார்த்து பிழைக்கத் தெரியாதவர்கள் என்று முத்திரை குத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தப் போராட்டங்கள் யாருக்காக? நிச்சயமாக இலங்கை மக்களுக்காக அல்ல.