கிண்ணியா படகு விபத்து

கிண்ணியா படகு விபத்து

கிண்ணியா படகு விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு !

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

கிண்ணியா படகு விபத்து – நகரசபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை !

அரசாங்கம் குறிஞ்சாக்கேணி பாதை சேவையைச் செய்ய நடவடிக்கை எடுக்காமல் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தமையே அனர்த்தத்துக்குக் காரணம் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா படகு விபத்து குறித்து மேலும் பேசிய அவர்,

குறிஞ்சாக்கேணி பாலம் பொதுமக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு சுமார் 9 மாதங்களாகின்றன. எனினும், இந்த மக்களுக்கான மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை அரசு இதுவரை செய்யவில்லை. மக்கள் படும் கஷ்டங்களைப் போக்க பிரதேச சபை, நகர சபை தவிசாளர்கள் துணை செய்தார்கள். இது தவறென்றால் இரண்டு தவிசாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.

குறிஞ்சாக்கேணிப் பாலம் மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வந்தனர். மக்கள் எதிர்நோக்கும் இந்தக் கஷ்டங்களைப் போக்க கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் முதலாவது பாதைச் சேவைக்கு உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுத்தார்.

நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான மாணவர்களும் இதனூடாகப் பயணஞ் செய்வதால் இன்னொரு பாதைச் சேவை அவசியப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு நகரசபைத் தவிசாளரின் அனுமதியுடன் மற்றுமொரு பாதைச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். நகரசபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை என்பதைப் பகிரங்கமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனினும் பிரதேச சபைத் தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர் என்பதால் அவர் ஆரம்பித்த பாதை சேவை குறித்து இங்கு மறைக்கப்படுவதை அல்லது பேசாமல் விடப்படுவதை அனுமதிக்க முடியாது.

விசாரணை நியாயமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு வீதியோ அல்லது பாலமோ புனரமைக்கப்படுமாயின் அதற்கான மாற்று வீதியை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

“கிண்ணியா படகு விபத்து – ஒருவரை ஒருவர் நோக்கி விரல் நீட்டிக்கொண்டிருக்காதீர்கள்.” – கிழக்கு ஆளுநர் !

கிழக்கு மாகாணத்தில்  அனைத்து பாலங்களின் தரம் குறித்து ஆராய விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என கிழக்கு  மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ், மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிரிவு மற்றும் கடற்படையினரால் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அனைத்து பாலங்களின் தரம் குறித்து ஆராய விசேட குழு!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தின் போது காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை பார்ப்பதற்காகக் இன்று கிண்ணியா தளவைத்தியசாலைக்கு சென்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். ஒருவரையொருவர் நோக்கி விரல் நீட்டும் நேரம் இதுவல்ல. போருக்குப் பின்னர் இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பாலங்கள் கிழக்கு மாகாணத்தில் கட்டப்பட்டன.

அது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலிருந்தே ஆரம்பமானது. இலங்கையின் மிக நீளமான பாலம் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. இந்த இடத்தில் பாலம் கட்டும் பணி  கொரோனா தொற்றால் பாதித்ததால் தாமதமானது. மாற்று வழி இருந்தபோதிலும் மக்கள் அதை பயன்படுத்த விரும்பவில்லை.

இந்த சம்பவத்தை நாங்கள் இப்போது விசாரித்து வருகிறோம். இன்று  அறிக்கை பெறப்படும். அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம். பொறுப்பிலிருந்து யாரும் தப்ப முடியாது.

எனினும் தற்போது இவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள் கடற்படையினரால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த பாலத்தின் பணிகளை விரைவில் முடிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது” என தெரிவித்தார்.

கிண்ணியா படகு விபத்து – நகர சபை தவிசாளர் கைது !

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட நான்காவது சந்தேக நபரான கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே அவரை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணி பகுதியில் பாலம் இன்மையால் படகுப்பாதை போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் படகுப்பாதையில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்தனர். நீரில் மூழ்கிய போது காப்பாற்றப்பட்டவர்களில் 19 பேர் தொடர்ந்தும் திருகோணமலை மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா படகு விபத்து – அதிகாரத்திலுள்ள குற்றவாளிகளை விட்டுவிட்டு படகு இயக்கியவர்களை கைது செய்துள்ள பொலிஸார்!

திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸாரினால் ஒருவரும் திருகோணமலை பொலிஸாரினால் இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளளனர்.

குறிஞ்சாக்கேணியில் நேற்று இடம்பெற்ற இந்த படகு விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த பகுதியில் பாலம் கட்டப்படாமையே இதற்கு காரணம் என குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை உடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

………………………………………………

உண்மையிலேயே குறித்த பாலம் கட்டப்பட்டிருக்கும் பட்சத்தில் இவ்வளவு பெரிய அனர்த்தம் நடந்திருக்காது. இந்த உயிரிழப்புக்களுடன் மிக நெருங்கிய தொடர்புடைய ’குற்றவாளி இதற்கு பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஆவார். இது தொடர்பில் உரிய நடவடிக்கையை வேகமாக எடுக்க தவறிய இவரே இந்த உயிரிழப்புக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவரும் இவர் தான். கைது செய்யப்பட வேண்டிய இவரை விட்டுவிட்டு நாட்கூலிகளை கைது செய்து அதிகாரிகள் வழமை போல அதிகாரத்துக்கு சாமரம் வீசியுள்ளனர். இது தொடர்பில் உரிய குற்றவாளிகள் கைது செய்யப்படுதலே இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யக்கூடிய இறுதியான வேண்டுதலாக இருக்கும்.

கிண்ணியா படகு விபத்து – நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை சரமாரியாக தாக்கிய மக்கள் !

குறிஞ்சாக்கேணி படகு விபத்தால் பலர் உயிரிழந்த செய்தியறிந்த மக்கள் கிண்ணியா படகு விபத்து – பால விவகாரத்தில் தீர்வில்லை எனக் கூறி வெகுண்டெழுந்து பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்த படகு சேவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறினார் என குற்றம் சுமத்தியே மக்கள் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.