கிளிநொச்சி

கிளிநொச்சி

சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கல் நிகழ்வும் – யார் எவர் தொகுதி இரண்டு நூல் வெளியீடும் !

லிட்டில் டெக் அக்கடமியின் முன்னாள் பணிப்பாளரும் சமூக ஆளுமையுமான அமரர் வ.சிவஜோதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு லிட்டில் டெக் அக்கடமியின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் ஞாபகார்த்த நிகழ்வு நாளைய தினம் (23.11.2024) காலை 9.45 மணிக்கு கிளிநொச்சி, திருநகர், கனகராசா வீதியில் அமைந்துள்ள லிட்டில் டெக் அக்கடமி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் சமூக மாற்றத்திற்காக இயங்கி கொண்டிருக்கும் ஓர் சமூக ஆளுமை கௌரவிக்கப்பட்டு அவருக்கான “சிவஜோதி ஞாபகார்த்த விருது” வழங்கப்பட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கல்விப்பணி மூலம் சமூக மாற்றத்திற்காக இயங்கி வரும் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் பாடசாலை அதிபர் திருமதி ஜெயா மாணிக்கவாசகனுக்கு அவருடைய பாடசாலை சார்ந்த முன்னேற்ற செயற்பாடுகளுக்காக சிவஜோதி ஞாபகார்த்த விருதுடன் ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் இடம்பெறவுள்ள நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் கிளிநொச்சி தொகுதி 2 ” என்ற நூலும் வெளியீடு செய்யப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 2023 கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய ”யார் எவர் தொகுதி ஒன்று’ எனும் நூல் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட மக்களையும் – சமூக செயற்பாட்டாளர்களையும் அன்புடன் லிட்டில் டெக் அக்கடமியின் விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைத்து நிற்கின்றனர்.

“நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் அல்லது எதிரானவள்” – கிளிநொச்சியில் கவனயீர்ப்பு கை அடையாள செயற்றிட்டம் !

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் இலவச தொழிற்கல்வி நிறுவனமான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான “நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் அல்லது எதிரானவள்” என்ற தொனிப்பொருளிலான கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டம் ஒன்று 17.12.2023 அன்று கிளிநொச்சி பிரதான பேருந்து தரிப்பிடம் மற்றும் பொதுச் சந்தை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டது.

 

கிளிநொச்சி உள்ளிட்ட இலங்கையின் வடபகுதியில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் இதனால் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் இதன் நீட்சியாகவே சமூக சீர்கேடுகள் மற்றும் சமூக வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாகவும் அண்மை ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருப்பதாக செயற்திட்ட ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்திருந்தனர்.

 

காலை 10.00 மணியளவில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு செயற்றிட்டத்தில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்கள் மட்டுமன்றி சமூக ஆர்வலர்கள் – பொதுமக்கள் – மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கை அடையாளங்களை போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பதிவு செய்திருந்தனர். குறித்த கவனயீர்ப்பு செயற்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி அவர்கள் “லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையமானது கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கான தொழில்கல்வியையும் அத்துடன் இணைந்த வகையிலான சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்ற ஓர் நிறுவனமாகும்.

 

அண்மையில் நமது இளைஞர்கள் இடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்கு பொதுமக்கள் தொடங்கி மாணவர்கள் அனைவருடைய ஆதரவும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் நிகழ்வுக்கான அனுமதி தந்து – இன்றைய தினம் பாதுகாப்பும் வழங்கி நமது சமூக மாற்றத்திற்கான முயற்சிக்கு ஆதரவு வழங்கிய கிளிநொச்சி மாவட்ட பொலிஸாருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் – பெண் உட்பட மூவர் கைது !

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்த்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த 25ம் திகதி இரவு வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியது.

 

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் 25ம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பத்தரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

 

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிசார் ஒரு பெண் உட்பட மூவரை இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.

 

உயிரிந்தவரை தொலைபேசி மூலம் அழைத்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு தரப்பு மோதல் கொலையான சம்பவம் – கிளிநொச்சியில் 22 வயது இளைஞர் கைது !

கிளிநொச்சி, ஊற்றுக்குளம் பகுதியில்  நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருதரப்பினரிடையே இடம்பெற்ற மோதல் வலுவடைந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் உருத்திரபுரம் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேரணி !

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேரணி ஒன்று இன்றைய தினம் (25) முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவணைக்கு ஏதிராக வேல்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து இவ் விழிப்புணர்வுப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

வடக்கில் தொடரும் பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகள் – கிளிநொச்சி மாவட்டத்தின் முதல் நிலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் உயிரை மாய்த்துள்ளார். சந்திரமோகன் தேனுஜன் (22) என்ற மாணவனே உயிரிழந்தார். கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றவர் இவர். மொரட்டுவ பல்கலைகழக அனுமதி கிடைத்து, அங்கு கல்வி பயில சென்றிருந்தார்.எனினும், இந்த வருடத்தில் தன்னால் கல்வியை தொடர சிரமமாக இருப்பதாக குறிப்பிட்டு, அடுத்த வருடத்திலிருந்து பல்கலைகழக கல்வியை தொடர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.மனஅழுத்தத்திற்கான மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுள்ளார்.இந்த நிலையில் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவரது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பில் குறித்த தற்கொலை செய்துகொண்ட மாணவனின் பல்கலைக்கழக – பாடசாலை நண்பன் ஒருவரிடம் தேசம் இணையதளம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட போது ” தற்கொலை செய்து கொண்ட மாணவனுக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை நடைபெறவில்லை எனவும் பல்கலைக்கழக பரீட்சை கூட தொடங்காததால் அது தொடர்பில் உளநெருக்கடிக்கு ஆளாவதற்கான வாய்ப்பும் இல்லை. எனவும் தெரிவித்தார். மேலும் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை மூன்று மாத காலங்களிலேயே குறித்த மாணவன் இடைநிறுத்தி விட்டு வெளியேறியதாகவும் அதற்கு அவருக்கு தொடர்ச்சியாக இருந்துவந்த தலையிடி சார்ந்த பிரச்சனைகளே காரணம் எனவும் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் நண்பர் தெரிவித்தார்.

குறித்த தலையிடி நோய் அவருக்கு உயர்தர பரீட்சை முடிந்த காலத்தில் இருந்தே இருந்து வந்ததனால் அது அவருக்கு பாரிய உளநெருக்கடியை உருவாக்கியிருந்ததமையே பிரதான காரணமாகும் என அறியமுடிகிறது.

இது ஒருபுறம் இருக்க பல்கலைக்கழக மாணவர்களிடையே தற்கொலைகள் மலிந்து போய் காணப்படுவது கல்விகற்ற இளைஞர் தலைமுறை ஒன்றை நாம் இழந்துகொண்டிருக்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த ஜுலை 30 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக பட்டதாரி மாணவி ஒருவர் தற்கொலை செய்திருந்தார். அது போல ஜுன் மாதம் தென் இலங்கை பல்கலைக்கழகங்களில் கற்ற இரண்டு யாழ்ப்பாண மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தனர். இப்படியாக பல்கலைக்கழக மாணவர்கள் இடையே தற்கொலை சம்பவங்கள் மலிந்து போய் காணப்படுகின்றது. கற்றல் அழுத்தம், வீட்டில் இருந்து அதிக தூரத்தில் கற்க வேண்டிய தேவை உள்ளமை, நிதி நெருக்கடி, காதல் தோல்வி என பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு பல காரணங்கள் பின்னணி என கூறப்பட்டாலும் கூட; இலங்கையின் கல்வி முறை அடிப்படையில் இருந்தே மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை கற்றுக்கொடுக்க தவறியமையே பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகளுக்கான பிரதான காரணமாகும்.

போட்டிப்பரீட்சைகளிலும் – பாடசாலை தரப்படுத்தல்களிலும் மட்டுமே கவனம் செலுத்தும் இலங்கையின் கல்வித்துறை அமைச்சும் – ஆசிரியர்களும் மாணவர்களை உடல் – உள ரீதியில் திடப்படுத்துவதற்கான கல்வித்திட்டம் ஒன்றை முன்னெடுக்காத வரை இங்கு தற்கொலைகள் மலியப்போவது இல்லை.

2261வது நாட்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டீம் !

2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மே நாளான இன்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக A9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது.

“சிறுவயது திருமணங்கள் சட்டரீதியான துஷ்பிரயோகம்” – சிறுவயது திருமணங்களுக்கு எதிராக கிளிநொச்சி லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய மாணவர்கள் கவனயீர்ப்பு செயற்பாடு !

அண்மைய தரவுகளின் படி உலகத்திலேயே சிறுவயது திருமணங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளுக்குள் இலங்கை அமைந்துள்ள தென்னாசிய வலயம் முன்னணியிலுள்ளது. ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சிறுவயது திருமண வீதம் குறைவாக உள்ள போதும் 16-18 வயதுக்கு இடையில் திருமணம் செய்வோர் வீதம் 12 வீதமாகவும் , 16 வயதுக்கு கீழானோர் திருமணம் செய்து கொள்ளும் வீதம் 2 வீதமான காணப்படுவதாகவும் யுனிசெப் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகமாக நிகழும் பகுதிகளில் வடக்கு மாகாணமும் முன்னிலையில் உள்ளது.

யுத்தம் ஏற்படுத்திய வடுக்களும் – அதனால் ஏற்பட்ட வறுமையும், பாடசாலை இடைவிலகல்களும்  அதன் நீட்சியாக ஏற்பட்டுள்ள சமூகப் பிறழ்வுகளும் ஏராளமானவை. இதன் இன்னுமொரு வடிவமே இளவயது திருமணங்களாகும்.

பாடசாலை கல்வியை தொடர வேண்டிய சிறுமிகள் பலர் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு அவர்களுடைய எதிர்கால கனவுகள் முழுமையாக சிதைந்து பல சிறுமிகள் கல்வியை தொடர வேண்டிய காலத்தில் மகப்பேற்று வைத்தியசாலைகளை நாடும் அவலம் தமிழர் பகுதிகளில் அதிகரித்து வருகின்றது.

மேலும் சிறுவயது திருமணங்கள் மூலம் அரோக்கியமற்ற எதிர்கால தலைமுறை ஒன்று தோன்றுவதற்கான அபாயமும் காணப்படுவதுடன் – எச்.ஐ.வி பரவல், இளவயத  தம்பதியினரிடையே மன உளைச்சல் மற்றும் இளவயது விவாகரத்துக்கள் என்பனவும் அடுத்தடுத்து நமது சமூகங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

முக்கியமாக அண்மைய நாட்களில் தமிழர் நிறைந்து வாழும் பகுதிகளில் போதைப்பொருள் பாவனையும் – வாள்வெட்டு கலாச்சாரமும் அதிகரித்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க பாடசாலை மாணவிகள் பலர் தென்னிந்திய சினிமா மோகத்தாலும் – வறுமையின் நிமித்தமும் பாடசாலை கல்வியை இடைவிட்டு  மேற்குறிப்பிடப்பட்ட சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவோருடன் காதல் ஏற்பட்டு வாழ்க்கை பற்றிய அனுபவம் – புரிதல் ஏதுமற்ற வயதில் பாடசாலை கல்வியை கைவிட்டு திருமண வாழ்க்கை ஒன்றினுள் நுழைகின்றனர்.” என வடக்கில் சிறுவர் விவகாரம் தொடர்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரச  அதிகாரி ஒருவர் தேசம்நெட்இடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மகளிர் தினமான இன்று கிளிநொச்சி திருநகர் பகுதியில் இயங்கி வரும்  லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சிறுவயது திருமணங்களுக்கு எதிராகவும் – அது தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களிடையேயும் கிளிநொச்சி மக்களிடையேயும் ஏற்படுத்தும் நோக்குடன் கிளிநொச்சி நகரிலுள்ள கிளி. மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கவனயீர்ப்பு செயற்பாட்டு ஏற்பாட்டு குழுவினர் கருத்து தெரிவித்த போது ” சிறுவயது திருமணங்கள் பற்றி எங்கேயோ நடந்ததாக கேள்விப்பட்ட காலம் போய் நமது பக்கத்து வீடுகளில் கூட அடுத்தடுத்து நடைபெறும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் சிறுவயது திருமணங்கள் ஆக்கப்பூர்வமான சமூகத்தை அன்றி மன உளைச்சலுக்குள்ளான சமூகத்தை உருவாக்குகின்றது. 16 வயதுக்கு கீழான பிள்ளைகள் கூட திருமணம் செய்து கொள்ளும் அபத்தமான சூழல் நமது பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் 15வயதுக்கு கீழானோர் திருமணம் செய்யும் போது அது துஷ்பிரயோகமாக கருதப்பட்டு நீதிமன்றத்தீர்ப்புக்கு விடப்படுகின்ற போதும் 16-19 வயதுக்கு இடையான வயதுடைய பெண்கள் இந்த கட்டாய – விருப்பத்துடன் இளவயது திருமணங்களுக்குள் நுழையும் போது இலங்கையின் சட்டங்கள் அதற்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கான வரைபுகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை. இலங்கையில் 19 வயது அதாவது பாடசாலை கல்வி பூர்த்தியாகும் வரை மாணவர்கள் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதை தடுக்க இலங்கையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”  என வலியுத்தப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு செயற்பாட்டின் போது” சிறுவயது திருமணங்கள் சட்டரீதியான துஷ்பிரயோகம்”, “புத்தகப்பை சுமக்கும் வயதில் கருப்பை சுமப்பதா..?” “தாயோடு செல்லும் வயதில் பேரோடு செல்வதா” போன்ற வசனங்களை தாங்கிய பதாகைகளை பங்குபற்றியிருந்தவர்கள் தாங்கியிருந்தனர்.

மியன்மாரில் இருந்து நெல் இறக்குமதி – சிவஞானம் சிறீதரன் விசனம் !

பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை அந்த பொருளாதார தடை தற்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வும் பாரம்பரிய தமிழர் விளையாட்டு நிகழ்வும் உருத்திரபுரம் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

தமிழர்களின் பாரம்பரியத்தினையும் பண்பாட்டினையும் நாங்கள் தான் பேணிவளர்க்க வேண்டும், நாங்கள் தான் அவற்றை கட்டிக்காக்க வேண்டும், நாங்கள் அதற்கான முதுகெலும்பாக செயற்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் தான் இன்றைய நாள் ஒரு பண்பாட்டு நாளாக உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் முன்னெடுத்திருக்கிறது.

மிக முக்கியமாக தமிழர்களிடமிருந்து அருகிப் போகின்ற போர்த்தேங்காய் உடைத்தல், தலையணைச்சமர், முட்டி உடைத்தல், கிளித்தட்டு போன்ற எங்களுடைய பண்பாட்டோடும் பாரம்பரியத்தோடும் தமிழரோடு பிறந்து வளர்ந்த அவர்களுடைய கலாச்சாரத்தோடு இயல்புடைய கூடிய இந்த நிகழ்வுகள் எங்களை விட்டு விலகிச் செல்லுகின்றன. அவ்வாறு விலகிச் செல்லுகின்ற இந்த விளையாட்டுக்களை மீண்டும் நினைவூட்டுகின்ற வகையில் பண்பாட்டு விழாவாக தமிழர்களுடைய திருநாளான தைப்பொங்கலை மையமாக வைத்து நீங்கள் முன்னெடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியானது.

இங்கே வருகிறபோது பார்த்தேன் நெற்கதிர்கள் பூத்துக்குலுங்க இந்த மண்டபம் மேடையை அலங்கரித்து இருக்கிறீர்கள். எங்கள் மக்களுடைய வரலாற்றிலே நாம் நெல்லோடும் இந்த நெல்லின் வாழ்வோடும் வாழ்ந்தவர்கள். இம்முறை விவசாயிகளுக்கான பசளைகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் விவசாயிகளின் அறுவடை என்பது மிகப் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஏக்கரில் 8 அல்லது ஒன்பது பை நெல்லுத்தான் அறுவடை செய்கின்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. ஆனால் அரசாங்கம் இப்போது மியன்மாரில் இருந்தும் வேறு நாடுகளில் இருந்தும் எத்தனையோ இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியைக் கொள்வனவு செய்ய தயாராக இருக்கிறது.

இவ்வாறு அங்கு இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட அரிசிகளை இங்கு இறக்குமதி செய்ய முனைகிறார்கள் இங்கு விவசாயம் செய்பவர்களுக்கு உரத்தை பயன்படுத்த அரசு தடை விதித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கிலே அறுவடை செய்கின்ற காலத்தில் இலங்கையில் ஏனைய பகுதிகளில் சிலவற்றில் இனித்தான் விதைப்பு ஆரம்பமாக இருக்கின்றது. வடக்கு கிழக்கில் விவசாயிகள் நெல் அறுவடை செய்கின்ற காலத்தில் இந்த அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து அரசியினை இறக்குமதி செய்வது மேலும் எமது மக்களை துன்பத்துக்கு உள்ளாகும்.

ஆனால் நாம் கடும் நெருக்கடியோடு வாழ்ந்தவர்கள். ஒரு கால கட்டத்தில் 90 களில் இலங்கையில் மண்ணெண்ணெய் 12 ரூபாய்க்கு விற்ற போது நாம் 300 ரூபாய்க்கு வாங்கியவர்கள் அப்போது யூரியாவை கண்ணால் காணவில்லை உடுப்பு துவைப்பதற்கு சவர்க்காரங்களைக் காணவில்லை நாங்கள் இந்த மண்ணிலே பெட்ரோலை கண்டிருந்ததில்லை சீமெந்துகளை கம்பிகளை கண்டிருந்ததில்லை அவ்வாறு இருந்தும் இந்த மண்ணிலே நாங்கள் வாழ்ந்து இருந்தோம் எங்களுடைய வாழ்க்கை நகர்ந்திருந்தது.

அதனை இப்போது தான் சிங்கள மக்கள் படிக்கவும் உணரவும் ஆரம்பித்திருக்கிறார்கள் ஆகவே பொருளாதார தடை என்பதும் பொருளாதாரத்தின் மீதான ஒரு வகையான ஆக்கிரமிப்பு என்பதும் இப்போதுதான் சிங்கள மக்களை உணர வைத்திருக்கிறது . தமிழர்கள் ஏற்கனவே இவற்றை நேரடியாக அனுபவித்து வாழ்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாலம் அமைக்க வெட்டிய குழியால் கிளிநொச்சியில் மாணவர்கள் அவதி – இன்னுமொரு விபரீதம் ஏற்பட முன்னர் சரிசெய்யுமாறு கோரிக்கை !

கிளிநொச்சி சிவபாத கலையக பாடசாலைக்கு முன்பாக பாலம் அமைப்பதற்கு வெட்டிய குழி மாணவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது எனவும் நேற்றைய தினம் பெய்த மழை காரணமாக ஆரம்ப பிரிவு மாணவர்கள் இருவர் நீர் நிரம்பிய குழிக்குள் வீழ்ந்த நிலையில் ஏனைய மாணவர்களினால் காப்பற்றப்பட்டுள்ளதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கரைச்சி பிரதேச சபையினரால் பாலம் ஒன்று அமைப்பதற்கு பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் சுமார் நான்கு அல்லது ஐந்து அடி ஆழத்தில் குழி வெட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறித்த குழி நிரம்பி நீர் செல்வதனால் ஆழமற்ற குழி என கருதிய மாணவர்கள் அதனை கடந்த செல்ல முற்பட்ட போது தவறி விழுந்துள்ளதாகவும் அதிஸ்டவசமாக ஏனைய உயர்வகுப்பு மாணவர்களால் அவர்கள் காப்பற்றப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான பகுதி என எந்தவிதமான எச்சரிக்கை சமிஞ்கையும் இல்லாத நிலையில் குறித்த பகுதி காணப்படுகிறது. இது தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும் அறிவித்துள்ளதாகவும் பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே ஒரு விபரீதம் ஏற்பட முன்னர் பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.