கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம்

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு  வெளிநாடு செல்லத்தடை – கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு !

இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சி நீதிமன்றில் மருதங்கேணி பொலிஸார் இன்றையதினம் (06) முன்வைத்த விண்ணப்பத்திற்கமைய, அதனை ஆராய்ந்து குறித்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மருதங்கேணி காவல்நிலையத்தில் நிலையத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சிங்கள மொழியில் எழுதப்பட்ட தகவலை வழங்குவதற்காக கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் சற்றுமுன்னர் வந்தனர்.

எனக்கு சிங்களம் படிக்கவோ, எழுதவோ தெரியாது என அதை ஏற்க மறுத்துவிட்டேன். அதைத் தொடர்ந்து அவர்கள் சிங்கள மொழியில் எனக்குப் படித்துக் காண்பித்தார்கள்.

 

குறித்த தகவலின்படி, ஜூன் மாதம் 8ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி காவல் நிலையத்தில் என்னை முன்னிலையாக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

என்னை மருதங்கேணி காவல்நிலையத்தில் முன்னிலையாகும் வரை எனக்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்குமாறு கிளிநொச்சி நீதவானிடம் காவல்துறையினர் விண்ணப்பித்ததுடன், நான் காவல் நிலையத்தில் அறிக்கையிடும் வரை வெளிநாட்டுப் பயணம் தடைசெய்யப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.