எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார்.
பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளேன். இன்றைய தினம் நீண்ட கால வரலாற்றினைக் கொண்ட யாழ் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டமையிட்டு நான் மகிழ்வடைகிறேன். யாழ் நூலகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகரசபை ஆணையாளருடன் கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்கள் நூலகம் பற்றிய முழு விபரங்களையும் எமக்கு விளங்கப்படுத்தியிருந்தார். எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் என்றார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்,
இன்று சீன நாட்டின் தூதுவர் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு கணணிகளையும் மேலும் பல புத்தகங்களையும் நமக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு இந்த நூலகத்தினை இணையவழியிலான நூலகமாக மாற்ற உதவ முடியுமா..? என கோரிக்கையை முன்வைத்தபோது தாங்கள் அது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியிருந்தார் என்றார்.