குருந்துார் மலை

குருந்துார் மலை

ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது குருந்தூர்மலையில் பௌத்த விகாரை நிர்மாணித்தமை தொடர்பான வழக்கு !

குருந்தூர்மலையில் பௌத்த விகாரை நிர்மாணித்தமை தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகினர்.

 

நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்கக் கூடாது.குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 2022 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இதன்போது இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அது தொடர்பான வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர்மலையில் விகாரை கட்டிய தொல்பொருள் திணைக்களம் – முல்லைத்தீவு நீதிமன்றம் வெளியிட்டுள்ள கட்டளை !

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அத்துமீறி விகாரை கட்டப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவானால் வழங்கப்பட்டுள்ளது.

 

நீதிமன்ற கட்டளைகளை மீறி அங்கு கட்டுமானங்கள் இடம்பெறுவதாக குறித்த ஆலயத்தினுடைய பக்தர்களால் ஆதாரங்களுடன் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து அங்கு கட்டுமானப்பணிகள் இடம்பெற்றனவா..? என்பது தொடர்பாக ஆராய்வதற்காக நீதிமன்றத்தால் கள விஜயம் செய்யப்பட்டது.

ஏற்கனவே செய்யப்பட்ட கள விஜயத்தை கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

 

அதாவது கட்டளையை வழங்கிய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை எனவும் கட்டளை வழங்கியுள்ளார்.

 

இதன்போது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆலய நிர்வாகம் சார்பிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் முன்னிலையாகி இருந்ததோடு ஆலய நிர்வாகம் சார்பாக நிர்வாகிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம் ஏ சுமந்திரன், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

இதேவேளையிலே தொல்லியல் திணைக்களம் சார்பாக தொல்லியல் திணைக்களத்தின் வவுனியா, முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களின் உதவி பணிப்பாளர் மற்றும் தொல்லியல் திணைக்கள சட்டத்தரணிகள் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

“குருந்தூர் மலையை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.” – சஜித் தரப்பு !

குருந்தூர் மலையை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் யுத்தத்தினால் பாரியளவில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டுமொரு முறை யுத்தத்தை தூண்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை என கிளிநொச்சி மாவட்டத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட போது திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

“குருந்தூர் மலை தொடர்பில் தற்போது பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. எந்தவொரு மதமும் தமது உரிமைகளுக்காக வன்முறைகளில் ஈடுபடுமாறு கூறவில்லை. இது தொடர்பில் நாம் கவலையடைய வேண்டும்.

அனைத்து மதங்களும் அனைத்து மதத்தையும் மதிக்குமாறு போதித்துள்ளது.

குருந்தூர் மலை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதை அனைவரும் அறிந்த விடயம். தற்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் முதன்மையான கடமையாக அமைந்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் மூலம் குறித்த பகுதி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறாக இதனை வைத்து இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டக் கூடாது.

குருந்தூர் மலையின் தொல்பொருள் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

முல்லைத்தீவில் இந்து ஆலயம் கட்டப்போகிறார்கள் என கல்கமுவ சந்தபோதி தேரர் பொலிஸில் முறைப்பாடு !

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களால் இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து கல்கமுவ சந்தபோதி தேரர் நேற்றுமுன்தினம்(11) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் மயூரன் மற்றும் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான வேலன் சுவாமிகள் ஆகிய மூவருக்கு எதிராக இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சார்ந்த தமிழ்த் தேசியவாதிகள் மற்றும் இந்துக் குருமார்களையும் இணைத்து மிகப்பெரிய பூஜை ஒன்றை நடத்தி ஆலயம் ஒன்றை நிறுவ இருப்பதாக தகவல் தகவல் கிடைத்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிராக நாளை(14) சிங்கள மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பில் நேற்று(12) துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவரையும் போலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த ரவிகரன் “எவ்வாறாயினும் நாளையதினம் (14) பூஜைகள் நடைபெறும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

குருந்துார் மலை , வெடுக்குநாரி மலை விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி மலை விவகாரங்களை சுமுகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர் முதலாவது வாரத்தில் குறித்த பகுதிகளுக்கான நேரடி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றுக்கு நியாயமான தீர்வினை வழங்கும் வகையில், ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (25.10.2022) நடைபெற்றது.

இதன்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

அவற்றுள் தமிழ் மக்களின் வரலாற்று தொன்மைமிகு குருந்தூர்மலை, வெடுக்குநாரி ஆலயம் தொடர்பான விவகாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய குறித்த இரண்டு அமைச்சர்களும் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே, திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் நேரடியாக சென்று, ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தினை சம்மந்தப்பட்ட தரப்புக்களின் சம்மதத்துடன் அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.