“குருந்தூர் மலை விவகாரம் இனம் மற்றும் மதங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் அளவிற்கு பாரதூரமாக செல்வதை தடுக்க பொறுப்பான தரப்பினர் சட்டத்திற்கமைய செயற்பட வேண்டும்.இல்லாவிடின் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.” என பௌத்த மத அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளடங்களாக 46 அமைப்புக்கள் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
46 அமைப்புக்களை ஒன்றிணைத்த தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பு இந்த அறிக்கையை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், அரசியல் கட்சிகள் தலைவர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளது.
46 பௌத்த மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளதாவது,
1933ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக சிலைகள் மற்றும் தொல்பொருள் சின்னங்களை கொண்ட குருந்தூர் மலை பகுதியின் 78 ஹேக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் காணி என அறிவிக்கப்பட்டது.
அத்துடன் 1924ஆம் ஆண்டு நிலப்பரப்பின் விசேட தொல்பொருள் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. இந்த வரைப்படத்திற்குள் கோயில் மற்றும் தேவாலயத்தின் சிலை சின்னங்கள் விகாரைக்கு ஒதுக்கு புறத்தில் உள் குருந்தூர் குள பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
‘குருந்தக’ என்ற பெயரில் இந்த பௌத்த விகாரை கி.பி 100 – 103 காலப்பகுதியில் பல்லாடநாக என்ற அரசனால் நிர்மானிக்கப்பட்டது. மகாவம்சத்தின் சான்றுப்படி கி.பி 1055-1110 காலத்தில் முதலாவது விஜயபாகு அரசனால் இந்த விகாரை புனரமைக்கப்பட்டது.
ஹென்ரி பாகரின் 1886 ஆண்டின் வருடாந்த அறிக்கையில் இந்த தொல்பொருள் பூமி தொடர்பில் ‘ காலம் காலமாக நேர்ந்த அழிவுகளை காட்டிலும், இந்த பகுதிக்கு குடியமர்வதற்காக வருகை தந்த தமிழர்களினால் இந்த தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய குருந்தூர் விகாரை மற்றும் அதனை சூழ்ந்துள்ள பகுதி முக்கியமான தேசிய மரபுரிமையாகும் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் ஒன்பதாவது உறுப்புரை மற்றும் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் 1990 தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவம் தொடர்பில் சர்வதேச கொள்கைக்கமைய இந்த இடத்தை தேசிய மரபுரிமையாக பாதுகாக்க மற்றும் இந்த பூமியின் அபிவிருத்தி பணிகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதை உறுதிப்படுத்துவது பொறுப்பான தரப்பினது கடமையாகும்.
தொல்பொருள் திணைக்களத்தின் சட்டப்பூர்வமான திட்டத்திற்கமைய விகாரையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து இப்பகுதியின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கருத்திற் கொண்டு தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை மீறி அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்ட அரசியல் தரப்பினருக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அரச கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பிரச்சினைகளை தோற்றுவிப்பவர்கள் பொது சட்டத்தை தமது கைகளில் எடுப்பது தவறான எடுத்துக்காட்டாக அமையும். இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இவர்கள் அடாவடித்தனமாக செயற்படுகிறார்கள்.
இதற்கு மேலதிகமாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நீதிமன்றத்திற்கும், சட்டமா அதிபருக்கும் இந்த விவகாரம் தொடர்பில் தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இது பாரியதொரு குற்றமாகும். சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட பௌத்த விகாரை உள்ள பூமியில் சட்டவிரோதமான முறையில் கோயிலை நிர்மாணிப்பதற்கு அவதானம் செலுத்தப்படுகிறது.
தேசிய தமிழ் அரசியல் டயஸ்போராக்களுக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும், போராட்டகாரர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட தரப்பினருக்கும் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி சாதகமாக உள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள் பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது.
குருந்தூர் மலை பகுதில் சட்டரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்லாவிடின் நீதிமன்றத்தை நாடுவதற்கு தீர்மானித்துள்ளோம். தேசிய மரபுரிமைகளை பாதிப்பிற்குள்ளாக்குபவர்கள் தேசிய மரபுரிமைகளை காட்டிக் கொடுத்தவர்களாக வரலாற்றில் அடையாளப்படுத்தப்படுவார்கள்.” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.