குருந்தூர் மலை

குருந்தூர் மலை

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானித்துள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் அறிவிப்பு!

முல்லைத்தீவு- குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பெளத்த இந்து அமைப்புகள் இதனை அறிவித்தன. நாளைய தினம் (18)குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிகழ்வில் ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவீடனில் குர்-ஆன் எரிக்கப்பட்டமைக்குக் கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி ரணில் குருந்தூர் மலை விவகாரத்தில் மௌனியாக இருக்கக்கூடாது !

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ்மக்கள் வழிபடுவதற்கு பௌத்த பிக்குகள் மற்றும் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், இதன் மூலம் தமிழ் மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டிருப்பதாகச் சாடியுள்ளனர்.

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நேற்று வெள்ளிக்கிழமை (14) தமிழ் மக்கள் பொங்கல் பொங்குவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. அதன் பிரகாரம் அங்கு சென்ற தமிழ் மக்கள் பொங்கல் பொங்குவதற்கு முற்பட்ட வேளையில், அங்கு வருகை தந்திருந்த பௌத்த பிக்குகளும் அவர்களுடன் வருகை தந்திருந்தவர்களும் அதற்கு இடையூறு விளைவித்ததுடன் பொலிஸாரும் அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு, பொங்கல் பொங்குவதற்குத் தடையேற்படுத்தினர்.

இச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் அப்பகுதியில் இருந்தவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன், ‘குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும், பொலிஸார் மற்றும் சிங்கள பிக்குகள் இணைந்து அதனைத் தடுத்திருப்பதன் மூலம் தமிழ்மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது’ என்று சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, அப்பகுதிக்கு வருகைதந்திருந்த பௌத்த பிக்குகள் மற்றும் சிங்களவர்களைக் காட்டிலும் அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸாரே மிகமோசமாக நடந்துகொண்டதாகவும், தம்மை மிலேச்சத்தனமான முறையில் தாக்க முற்பட்டதாகவும், அங்கிருந்த பெண்களைத் தகாதமுறையில் வெளியேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்மக்கள் குருந்தூர் மலையில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பல ஆண்டுகளாக வழிபாட்டில் ஈடுபட்டுவருவதாகவும், அதற்குத் தொடர்ந்தும் இடமளிக்கப்படவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்திய கஜேந்திரன், ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியை விட்டுக்கொடுப்பதற்குத் தாம் ஒருபோதும் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, குருந்தூர் மலையில் பொங்கல் பொங்குவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும், அங்குசென்ற தமிழ்மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையைக் கடுமையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, இந்துக்களின் வழிபாட்டு உரிமை மீறப்படுவது குறித்துத் தனது தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கு முன்பதாக இதனை அவரது கவனத்துக்குக் கொண்டுசெல்லவிருப்பதாகவும், தமிழ்மக்களின் மதவழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தவிருப்பதாகவும் தெரிவித்த அவர், இதுகுறித்து இந்தியப்பிரதமர் மற்றும் இந்திய அரசியல் தலைவர்களிடத்திலும் வலியுறுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

‘ஏற்கனவே குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசப்பட்டிருக்கும் அதேவேளை, இவ்விவகாரத்தில் தாம் தவறானமுறையில் செயற்பட்டிருப்பதைத் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதிக்கு வழிபடச்சென்ற தமிழ்மக்களுக்கு எதிராக பொலிஸார் மிகமோசமாக நடந்துகொண்டிருப்பது இன, மதவாதத்தின் உச்சக்கட்டமேயாகும்’ என்று ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

மேலும், சுவீடனில் புனித குர்-ஆன் எரிக்கப்பட்டமைக்குக் கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இவ்விடயத்தில் வாய்மூடி மௌனியாக இருக்கக்கூடாது என்றும், இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குருந்தூர் மலை தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை – சரத் வீரசேகர

குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி அரசியலமைப்பின் 9 ஆவது அத்தியாயத்தை முழுமையாக மீறியுள்ளார் என்றும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய நல்லிணக்கத்துக்கும்,தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக குருந்தூர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த ஆலய கட்டுமானம் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு !

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக குருந்தூர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த ஆலய கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத கட்டுமானம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் 30.03.2023 அன்று இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி இடம்பெற்று வரும் கட்டுமான பணிகள் தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஏற்க்கனவே இருந்த AR/673/18 வழக்கு இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் இணைத்து நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிபதி ரி.சரவணராஜாவால் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணைகளை 30.03.2023 அன்று மீளவும் விசாரணை மேற்கொள்வதற்கு தவணையிட்டுள்ளார். இதன் போது, முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட் பிரசாந் ஆகியோர் இன்று வழக்கு தொடுநர்கள் சார்பில் முன்னிலையாகினர்.

இவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.தனஞ்சயன், சுபா விதுரன், ருஜிக்க நித்தியானந்தராஜா உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் ஆறுபேர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.  சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை கேட்டறிந்த பின்னரே நீதிபதி மேற்கண்டவாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

 

நீதிமன்ற கட்டளையையும் மீறி தமிழர் பகுதியான குருந்தூர்மலையில் கட்டிமுடிக்கப்பட்ட பௌத்த விகாரை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06 /2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை ஆகியிருந்தது. இருந்த போதிலும் இந்த கட்டளையை மீறியும் தொடர்ந்து கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டளையையும் மீறி அங்கு கட்டுமான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது தொடர்பில் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும் அரசியல் பிரதிநிதிகளும் குருந்தூர் மலை பகுதியில் கடந்த 2022/09/20 அன்று போராட்டம் செய்திருந்தனர்.

அதன் தொடர்சியாக 21/09/2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வேறு சில B அறிக்கைகள் தாக்கல் செய்யப்ட்டிருந்ததோடு ஆதி அய்யனார் ஆலயம் சார்பில் சட்டதரணிகளால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது . இந்த கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான கட்டளைகாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் ஒரு கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது. அதாவது கடந்த 19.07.22 அன்று ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்கள்களை குருந்தூர் மலையில் அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளைகளை வழங்கியுள்ளது.

இந்த கட்டளை வழங்கப்படும் போது பூரண மடையாத நிலையில் காணப்பட்ட குருந்தூர்மலை விகாரை கட்டுமானம் தொடர்சியாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு தற்போது பூர்த்தியாக்கப்பட்டுள்ளதை இன்றையதினம் (23) குருந்தூர்மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் , கந்தையா சிவநேசன் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இவர்கள் குருந்தூர்மலைக்கு சென்ற வேளை அங்கு தொடர்சியாக பௌத்த கட்டுமான வேலைகள் இன்று கூட இடம்பெற்றுள்ளதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது, இரவு நேரத்தில் இந்த கட்டுமானங்கள் தொடர்சியாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்கும் வகையில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. இவ்வாறான கடுமானங்கள் இடம்பெறும் நேரத்தில் 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பும் அப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபடும் இராணுவ, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேந்தவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் மலையடி வாரத்தில் தங்கியிருப்பதையும் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குருந்தூர் மலை விவகாரம்” – புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள் என்கிறார் அபேதிஸ்ஸ தேரர் !

“புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள்.” என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

பெபிலியான சுனேத்ரா தேவி  மஹா பிரிவெனா விகாரையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஒருசில அரசியல்வாதிகள் குருந்தூர் மலை விவகாரத்தில் உண்மையை அறிந்துக் கொண்டு குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அமைதியாக செயற்படுகிறார்கள். புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள்.

100 -103 வரையான காலப்பகுதியில் குறுந்தூர் மலையின் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த தொல்பொருள் அம்சங்கள் அடங்கிய விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் மகாவசம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பெருமளவான நிலப்பரப்பை குருந்தூர் மலை விகாரை கொண்டுள்ளது.இந்த விகாரைக்கு சொந்தமான காணியில் பௌத்த மத அடையாளத்தை பிரதிபலிக்கும் சின்னங்கள் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குருந்தூர் மலை விகாரை இந்து கோயில் என்று குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.விகாரையின் நிர்மாண பணிகளுக்கு தமிழ் அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கு அமையவே தமிழ் அரசியல்வாதிகள் செயற்டுகிறார்கள்.

புத்தசாசன அமைச்சர் மற்றும் தொல்பொருள் திணைக்கள் பணிப்பாளர் நாயகத்தில் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது. குறுகிய நோக்கத்துக்காக புத்தசாசனத்தின் அடையாளங்களை இவர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள். குருந்தூர் மலையில் புத்தசாசனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.

“ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.” – அட்மிரல் சரத் வீரசேகர

“நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் குருந்தூர் மலையில் பௌத்த மத வழிபாடுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.”  என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

குருந்தூர் மலை – பௌத்த மத அடையாளங்களை பாதுகாப்போம் என வலியுறுத்தி,பௌத்த தேரர்கள்,சிவில் அமைப்பினர் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்க வளாகத்தில் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌத்த நாட்டில் பௌத்த மத பாரம்பரிய அடையாளங்கள் மற்றும் உரிமைகளை பாதுகாப்பது சிங்களவர்களின் கடமை மாத்திரமல்ல இலங்கையில் வாழும் அனைவரது கடமையாகும். 2000 வருடகாலம் பழமை வாய்ந்த குருந்தூர் மலையில் பௌத்த மத மரபுரிமைகளை பாதுகாப்பது அவசியமானது.

புழமை வாய்ந்த குருந்தூர் மலை விகாரையினை புனரமைத்து பௌத்த மத வழிபாடுகளில் ஈடுப்பட ஒருசில இனவாதிகள் இடமளிக்கவில்லை.இது முற்றிலும் வெறுக்கத்தக்கதொரு செயற்பாடாகும்.குருந்தூர் மலையில் பௌத்த மத மரபுரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கில் யுத்த தீவிரமடைந்த போது கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் இடம்பெற்றன. வீதியில் தேர் ஊர்வலம் சென்றன. சிங்களவர்களுக்கு பொறுமையுண்டு.நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குருந்தூர் மலையில் பௌத்த மத வழிபாடுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.

திருகோணேச்சரம் ஆலயத்தில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்துகிறார்கள். நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு முன்பாக முஸ்லிம்,தமிழ் சமூகத்தினர் கடைகளை வைத்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனவாதம் பேசிக் கொண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள். கூட்டமைப்பினர் இனவாத செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

“தமிழர்களுக்கு எதிராக செயற்படும் இனவாதத்திணைக்களமே இலங்கை தொல்லியல்திணைக்களம் செயற்படுகின்றது.”- எம்.ஏ.சுமந்திரன்

“தொல்லியல் திணைக்களம் மிக மோசமான இனவாத திணைக்களமாக,தமிழ் மக்களுக்கு  எதிராக தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.”என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில்  நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில்,

குருந்தூர் மலையில்  எங்களுடைய கட்சி உறுப்பினர்கள்  கைது செய்யப்பட்டுள்ளார்கள்.தொல்லியல் திணைக்களம் சட்டவிரோதமாக அங்கு கட்டிடங்களைக் கட்டுவதை  எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  தொல்லியல் திணைக்களம் இப்படியாக எங்களுடைய மக்களின் நிலங்களை மிக மோசமான முறையிலே அபகரிக்கின்ற திட்டங்கள் சம்பந்தமாக பல தடவை பாராளுமன்றத்திலும் வெளியிலும் பேசியிருக்கின்றோம்.

600க்கு மேற்பட்ட ஏக்கர் வயல் காணிகளை அபகரிக்கின்ற இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் செய்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதிபலனாக அவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதியோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சந்திப்பில் இது குறித்து பேசினோம். பணிப்பாளர் நாயகத்துக்கு தான் உடனடியாக அறிவிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனாலும் இந்த தொல்லியல் திணைக்களம் மிக மோசமான இனவாத திணைக்களமாக,தமிழ் மக்களுக்கு  எதிராக தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இதே போன்று கிழக்கில்  திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை அபகரிக்க இப்போது ஒரு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.. திருக்கோணேஸ்வரம் இலங்கையிலே இருக்கின்ற பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று. இது மிகப்பழமை வாய்ந்தது. இந்த நாட்டுக்கு விஜயன் வருவதற்கு முன்னதாகவே

பஞ்ச ஈஸ்வரங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாற்றுஆசிரியர் சேர் போல் பீரிஸ் சான்றுரைத்துள்ளார்.

தற்போது அரசிலுள்ள இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர் அங்கு வந்து மாவட்டக்காரர்களை அழைத்து சென்று ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடுகின்றார்.  திருக்கோணேஸ்வ்ர் ஆலயத்தை அண்டியுள்ள இடங்களில் 58 கடைகளை வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களே நடத்தி  வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புக்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இதேவேளை அரசு ஜெனீவா விவகாரத்தில் 2012-2015 இல் ஒரு நிலைப்பாட்டையும் தற்போது ஒரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது அரசின் இந்த இரட்டை நிலைப்பாடுகள் தவறானவை  என்றார்.