குற்றப்புலனாய்வு திணைக்களம்

குற்றப்புலனாய்வு திணைக்களம்

இந்தியாவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் – 09 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர வேலைத்திட்டம் !

இலங்கை மற்றும் இந்தியாவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பில், தமிழகம், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டிற்கு சென்று அவர்கள் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு விசேட குழுவொன்றை பெயரிடவுள்ளதாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விரைவில் குறித்த குழுவை இந்தியாவுக்கு அனுப்பி அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் இந்தியாவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பில், தமிழகம், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து ஒன்பது இலங்கையர்களை இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த திங்கட்கிழமை மீண்டும் கைது செய்தது.<

பிரேம் குமார் எனப்படும் குணா என்ற சி.குணசேகரன், பூக்குட்டி கண்ணா என்ற புஷ்பராஜா, மொஹமட் அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா, தனுக்க ரொஷான், வெல்ல சுரங்க என்ற கமகே சுரங்க பிரதீப், திலீபன் ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர்

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் – விசாரணைகளை மேற்கொள்ள C.I.D யினருக்கு அதிகாரம் !

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெறும் மற்றும் தற்போது கிடைத்துள்ள முறைப்பாடுகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக விசாரணை செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் , சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகளையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் கடந்த சில தினங்களாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

களனி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருட மாணவர் ஒருவரை, மாணவர் சங்கத்தை சேர்ந்த சிலர் தாக்கி, பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகிடிவதைக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் ஆறு மாணவர்களை விடுதிக்குள் தடுத்து வைத்து ஏனைய சில மாணவர்கள் விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்தியதாக களனி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரின் அந்தரங்க நிழற்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி, பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.