கூட்டணி

கூட்டணி

ஆனந்தசங்கரி – அரவிந்தன் மோதல் பின்னணி என்ன? யார் இந்த அரவிந்தன்!!!

ஒரு காலத்தில் தமிழீழம் கேட்டு இலங்கையின் எதிர்க்கட்சியாகவும் வந்து, தமிழ் அரசியலைத் தீர்மானித்த தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று நொந்து நூடிள்ஸ்ஸாகி சீரழிந்து போய்க்கொண்டிருக்கின்றது. அரவிந்தன் கோஸ்டி சங்கரியர் பணத்தை சூறையாடுகிறார் என்பதும் சங்கரியர் அரவிந்தன் பணத்தை மோசடி செய்துவிட்டார் என்று ஒப்பாரி வைப்பதும் சமூக வலைத்தளங்களில் தவறணை உரிமையாளர்கள் வேதம் சொல்லும் அளவுக்கு தரம் குறைந்துவிட்டது. சங்கரி ஐயா சொத்துக்களை விற்று காசடித்தாரா இல்லையா என்பதை அரவிந்தன் தரப்பு ஆதாரத்தோடு வைக்கவில்லை. போக்கடி போக்காக சொல்லி வருகின்றனர்.

இந்தச் சொத்துக்களின் மீது பலருக்கும் கண் இருக்கின்றது என்பது உண்மை. அந்த சொத்துக்களுக்காகத்தான் கட்சியில் பலரும் இன்னும் ஒட்டிக்கொண்டுள்ளனர் என்பது அதைவிடவும் உண்மை. இவர்கள் எல்லோரும் சங்கரி ஐயாவில் பழியைப் போட்டுவிட்டு தாங்களும் சுருட்டிக்கொள்ளவே எண்ணுகின்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் உள்ள முரண்பாடு கட்சியின் கொள்கை சம்பந்தப்பட்டதாக ஒரு போதும் இருக்கவில்லை. அதற்கு அப்படி ஒரு பெரிய கொள்கையும் இல்லை.

லண்டனில் தசாப்தங்களாக வாழ்ந்த சண்முகராஜா அரவிந்தன், யாழ் மாநகரசபை உறுப்பினராக இருந்து காலத்தில் அப்போது மேயராக இருந்த செல்லன் கந்தையாவை தாக்கி தன் சாதியத் திமிரை வெளிப்படுத்தியவர். அதைவிட அவருக்கு குறிப்பான அரசியல் பின்னணி எதுவும் கிடையாது. லண்டனில் கூட்டணிக்கு பெரிய காசு சேர்க்கும் அளவிற்கு நாணயமானவரோ நம்பிக்கையானவரோ அல்ல. அவர் வற்புறுத்தியிருந்தால் சில சமயம் சில நூறுகளை யாராவது வழங்கி இருப்பார்கள். அந்த சொற்ப பணத்தை ஏமாற்றும் அளவுக்கு சண்முகராஜா அரவிந்தன் ஒரு முட்டாளும் அல்ல. அவர் ஒன்றும் உழைக்கவும் இல்லை அதே சமயம் ஊரைக் கொள்ளையடிக்கவும் இல்லை. பிரித்தானிய அரசின் உதவிப் பணத்தில் தான் அவர் இலங்கையில் அரசியல் நகர்த்துகிறார் என்பது பலரும் அறிந்த விடயம்.

அரவிந்தனுக்கு மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை இருந்ததாக நான் அறியவில்லை. ஆனால் அவருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் எப்போதும் ஒரு கண் இருந்தது மிகவும் உண்மை. ஆனால் அதற்கான தகுதி அவருக்கு இருக்கின்றதா என்றால் இன்றைக்கு இலங்கையில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டமைப்பில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களுக்கு (சுமந்திரன் தவிர்ந்த) என்ன தகுதி இருக்கின்றதோ அது அரவிந்தனிடமும் இருக்கின்றது. அரவிந்தன் ஒரு வடிகட்டிய தமிழ் குறும் தேசியவாதி. சாதிய பிரதேச வெறியில் ஊறியவர். பெண்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகவே பார்ப்பவர். பதவி ஆசையைத் தவிர கட்சியைப் போல் அவரிடம் கொள்கையும் இல்லை கோதாரியும் இல்லை. தமிழ் காட்சி ஊடகங்களுக்கு நேரத்தை நிரப்புவதற்கு சங்கரி ஜயாவிலும் பார்க்க இவர் சிறந்த தெரிவாக ஐபிசி மற்றும் ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

தலைவர் எப்ப சாவார் கதிரை எப்ப காலியாகும் என்று லண்டனில் இருந்து வந்த அரவிந்தனுக்கு சங்கரி ஐயா ஒமிக்கிரோனுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு இருப்பது பெரும் சங்கடம் தான்.

தான் தாயகத்திற்கு வரும் முன்பே பொன் சிவகுமாரனின் சகோதரர் பொன் சிவசுப்பிரமணியம் அவர்களை வற்புறுத்தி அனுப்பி வைத்துவிட்டு, அதன் பிறகு அவருக்கே முதுகில் குத்தியவர் அரவிந்தன். சங்கரி ஐயா பொன் சிவசுப்பிரமணியத்திற்கு எதிராகத் திரும்பிய போது அதற்கு முழுவீச்சாக ஆதரவு கொடுத்து அவரைக் கட்சியில் இருந்தே நீக்க முயற்சித்தனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் இப்போது அரவிந்தன் – சங்கரி ஐயா இழுபறி இப்போது சில ஆண்டுகளாகவே தொடர்கிறது.

சங்கரி ஐயா இன்னும் நிறைய காலம் வாழ முடியுமா என்பது கேள்விக்குறி. இந்நிலையில் அவரும் கட்சியின் பொறுப்புக்களை ஒப்படைத்து தன் தலைமைத்துவப் பண்பைக் காட்டவில்லை. சாகும் வரைக்கும் தான் தான் தலைவர் என்று இலங்கையில் உள்ள ஏனைய தலைவர்களைப் போல் தானும் சன்னதம் ஆடுகின்றார். இன்றைய நவீன தத்துவவியல் உலகத்திலும் நாம் இன்னும் பரராஜசேகரனை சங்கிலியன் முதுகில் குத்திய அரசியலில் தான் நின்று கொண்டிருக்கிறோம்.

இலங்கைத் தமிழ் அரசியல் சூழலில் சங்கரி ஐயாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் இருந்தது உண்மை. ஆனால் அவர் அதை இவ்வளவு கீழ்நிலைக்கு கொண்டு வந்தது மிகத் துரதிஸ்டம். இன்றுள்ள இலகைத் தமிழ் தலைவர்கள் எல்லோரும் மதிக்கக் கூடியவராக அவர் இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அதை கெடுத்துக்கொண்டு அரவிந்தன் போன்ற சில்லறைகளுடன் எல்லாம் கீழ்நிலைக்கு இறங்கி சண்டை செய்வது தமிழ் அரசியலின் துரதிஸ்டம்.

2010க்கயையொட்டி சங்கரி ஐயாவின் 75வது பிறந்த தின நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. அப்போது நான் எழுதிய பதிவில் ‘சங்கரி ஐயா அரசியலில் இருந்து ஒதுங்குவது அவருக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் நல்லது எனச் சுட்டிக்காட்டி இருந்தேன். அதற்குப் பின்பும் அவரோடு பல தடவைகள் நேர்காணலை மேற்கொண்டு இருந்தேன். அபோதெல்லாம் சங்கரி ஐயாவுடன் மட்டுமல்ல அவரது குடும்பத்தவர்களில் ஒருவராக ஏன் பொன் சிவசுப்பிரமணியத்தின் குடும்பத்திலும் ஒருவராக இருந்தவர் அரவிந்தன். குடும்பம் என்பது சின்ன அரசியல் என்றால் அரசியல் என்பது பெரிய குடும்பம். ‘அரசியலில் இதெல்லம் சகஜம் அப்பா!’