நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல சட்டத்தரணிகள் ஊடாக இன்று (29) உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், சட்டத்தரணி சனத் விஜேவர்தன தாக்கல் செய்த மனுவில், பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மாளிகாகந்தை நீதிமன்றில் முன்னிலைப்பட்டார்.
இதையடுத்து சிறைச்சாலையின் வாகனமொன்றில் இன்று(29) பிற்பகல் அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யுனோகுளோபியுலின் தடுப்புசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த இரண்டாம் திகதி கைது செய்யப்பட்ட கெஹலியவை மூன்றாம் திகதி மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளது.
அதன் போது பெப்ரவரி 14 ஆம் திகதி வரை கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பெப்ரவரி 14 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, அவர் இன்று பிற்பகல் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்டுள்ளார்.