கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம்

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம்

தோட்டத்து மாணவர்களை கல்விக்கு சேர்க்காத கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் – போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு (தேசிய பாடசாலை) தமது தோட்டத்தில் உள்ள தரம் ஆறுக்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களையும் உள்வாங்குமாறு வலியுறுத்தி, கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சுமார் 2500 மாணவர்கள் வரை கல்வி பயில்கின்ற போதிலும், தமது தோட்ட மாணவர்கள் உள்வாங்கப்படுவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டத்தையடுத்து பாடசாலையில் முத்தரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது. நுவரெலியா வலய கல்வி அதிகாரிகள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை அதிபர், முகாமைத்துவ குழு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

எதிர்வரும் 31ம் திகதி, இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டது என போராட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.