கொரோனா வைரஸ்

Wednesday, October 27, 2021

கொரோனா வைரஸ்

தடுப்பூசி சோதனையில் நரம்பியல் பாதிப்பு – நிறுத்தப்பட்டது சீன தடுப்பூசி பரிசோதனை !

தென் அமெரிக்க நாடான பெருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு சீனாவின் சினோபார்ம் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை பரிசோதனை செய்து வருகிறார்கள். அந்த தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பெரு நாட்டில், சீனாவின் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு நரம்பியல் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு கைகளை அசைக்க முடியாத அளவுக்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்காக உள்ளூர் சிகிச்சை முறை மற்றும் ஔடதங்கள் தொடர்பாக ஆய்விற்கு உட்படுத்த தேசிய ஆராய்ச்சி சபைக்கு பிரதமர் பரிந்துரை !

கேகாலை தம்மிக பண்டார என்பவரின் கொரோனாவுக்கான ஆயுர்வேத ஒளடத பானியை பெறுவதற்காக ஆயிரக்கணக்கினாலானோர் திரண்டிந்தனர். இந்த நிலையில் குறித்த ஔடதபானி உண்மையிலேயே கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தானா..? யார் அதனை விற்பனை செய்ய அனுமதித்தது ? என பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் கொரோனாவிற்காக தேசிய மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை மற்றும் ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூர் மருத்துவமொன்றை, கலாநிதி ஹர்ஷ சுபசிங்க மற்றும் இந்திக ஜாகொட ஆகியோரினால் கொரோனாவிற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட உள்ளூர் சிகிச்சை முறை மற்றும் கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் ஒளடத பானியை மேலும் விஞ்ஞான ரீதியில் ஆய்விற்கு உட்படுத்தி உறுதிபடுத்துவதற்கு பிரதமர் தேசிய ஆராய்ச்சி சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.

கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் ஒளடத பானி தொடர்பான ஆராய்ச்சி பத்திரமொன்று ரஜரட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர்களின் தலையீட்டுடன் முன்வைக்கப்படுவதுடன், அது தொடர்பான ஆய்விற்கு இந்நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உடலியல் விஞ்ஞானம் தொடர்பான நிபுணத்துவ அறிவுமிக்க சிரேஷ்ட பேராசிரியர்கள் ஐந்து பேர் மற்றும் தேசிய ஆராய்ச்சி சபைக்காக தேசிய ஆராய்ச்சி சபையின் தலைவர் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹல ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், உலகில் கொரோனா தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி வகைகள் குறித்து ஆராய்ந்து அது தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவிற்காக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த மூன்று தடுப்பூசிகள் தொடர்பான சீ.டீ.ஏ. அறிக்கை தேசிய ஆராய்ச்சி சபையினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சியிடம் கையளிக்கப்பட்டது.

28 ஆயிரத்தை கடந்த இலங்கையின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை !

இலங்கையில் கொரோனா வைரஸினுடைய பரவல் குறையாது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று இதுவரை மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.

இதே நேரம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோருள் மேலும் 344 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது 7 ஆயிரத்து 259 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 461 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்று நோயாளி – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட கொரோனா தொற்று நோயாளியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளி ஒருவரை அழைத்துச் செல்ல வந்திருந்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில், இன்று காலை குறித்த சந்தேக நபரை கைது செய்த பண்டாரகம பொலிஸார், காணொளி தொழிநுட்பம் ஊடாக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதனை அடுத்து, குறித்த சந்தேக நபரை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவா உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த சந்தேக நபரை சுகாதார நடைமுறையின் அடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் பலி !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு-13 பகுதியில் 54 மற்றும் 88 வயதுடைய இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினார் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு-12 பகுதியில் 88 வயதுடைய ஒருவரும் கொழும்பு-15 பகுதியில் 39 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.  மேலும், பொரள்ள பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

இதே நேரம் நாட்டில் மேலும் 544 பேருக்கு தற்போது வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 171 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக காணப்படுகின்றது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 5.17 கோடியைக் கடந்தது !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.17 கோடியைக் கடந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.63 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 14.14 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா தொற்று அச்சத்தால் இருவர் தற்கொலை !

உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக பல இலட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றாளர்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் உலக நாடுகள் கனிசமாக மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக இலங்கையில் கொரோனா மூன்றாம் கட்ட பரவல் ஏற்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் தொற்றாளர்களுடைய தொகையும் அதிகரித்த வண்ணமுள்ளது. மேலும்  தற்போது பரவும் வைரஸ் மிக வேகமாக தொற்றக்கூடியது என இலங்கையின் பல்கலைகழக ஆராய்வு முடிவுகளில் கூறப்பட்டிருந்தது.அதே நேரத்தில் கொரோனா வைரஸால் இறப்பவர்களுடைய தொகையும் இலங்கையில் கனிசமாக அதிகரித்துள்ளது. இது மக்களிடையே கொரோனா தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக இருவேறு இடங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி களுத்துறை – அகலவத்தையை சேர்ந்த (56-வயது) இ.போ.ச பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு நேற்று (08) தற்கொலை செய்து கொண்டார்.

நாகொடை வைத்தியசாலை ஊழியர்கள் பலரை அவர் ஏற்றிச் சென்ற நிலையில் கொரோனா தொற்றலாம் என்ற அச்சத்தில் இருந்தார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

கம்பஹா – ஜாஎலவை சேர்ந்த (72-வயது) பெண் நேற்று முன் தினம் (07) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மூத்த மகளுக்கும் மருமகனுக்கும் முன்னதாக கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட இவர் கவலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.