கொரோனாவைரஸ்

கொரோனாவைரஸ்

யாழில் ஒரு வாரத்தில் 12பேர் சாவு

யாழில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்களது எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலை நீடித்து வருகிறது.
ஜூலை 01 முதல் ஜூலை 07 வரையான ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு 12 கொரோனா இறப்புகள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி 4 பேரும், ஜூலை 2ஆம் திகதி 2பேரும், ஜூலை 4 ஆம் திகதி ஒருவரும், 5ஆம் திகதி ஒருவரும், ஜூலை 6ஆம் திகதி 3 பேரும், 7ஆம் திகதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் ஜூலை 7ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பிரதேச செயலர் பிரிவு வாரியாக நோக்கும் போது, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் தலா 8 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 5 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு, வேலணை பிரதேச செயலர் பிரிவு ஆகியவற்றில் தலா 3பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 2பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10.19 கோடியை கடந்தது கொரோனா தொற்றாளர்கள் தொகை – கொரோனா அப்டேற் !

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்தாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.19 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21.98 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.59 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

“உருமாறிய புதிய கொரோனா வைரஸ் உலகின் 50 நாடுகளுக்கு பரவிவிட்டது” – உலக சுகாதார அமைப்பு தகவல் !

உலகின் 50 நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனாவைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவைரஸ்  பரவல் தற்போது 50 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக இடைவெளியை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவியகொரோனாவைரஸ்  தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும்கொரோனாவைரஸ்  அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்துகள்  இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்று பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகைகொரோனாவைரஸ்  பரவத் தொடங்கியுள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இது எதிரொலித்துள்ளது.

உலகம் முழுவதும் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

காட்டுத்தீயாய் இன்னும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் – உலகம் முழுவதும் 9.19 கோடி பேர் பாதிப்பு !

சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில்  இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 011 வருடங்களை கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.58 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.42 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஜப்பானிலும் புதிய வகை கொரோனா வைரஸ்..!

ஓராண்டு முடிவடைந்து இரண்டாவது ஆண்டாகவும் கொரோனா வேகமாக உலகம் முழுதும் பரவி வருகின்றது. இதற்கிடையில் புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் பரவலும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளதுடன் பிரான்ஸ், இந்தியா , என பல நாடுகளில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் , பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா உறுதி செய்யப்பட்டது. 45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கு இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாறுபட்ட கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனத்துடனும், பிற நாடுகளுடனும் ஜப்பான் ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போதைய தடுப்பூசிகள், இந்த கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

“எங்களால் உடல்களை பாதுகாக்க முடியவில்லை. இன்னும் மோசமான நாட்கள் எங்களை நோக்கி இருக்கிறது” – மயானங்களில் புதைக்க இடமில்லாமல் அமெரிக்காவில் காத்துக்கிடக்கும் மனித உடல்கள் !

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உடலை புதைக்க இடமில்லாமல் கலிபோர்னியாவில் உள்ள கல்லறைகளில் மனித உடல்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் தெற்குப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லறைகளில் இடமில்லாமல் நாட்கணக்கில் மனித உடல்கள் காத்திருக்கும் சோகம் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவில் பரவ ஆரம்பித்ததாக கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ், உலக நாடுகளை இன்னும் உலுக்கிவருகிறது. இதில் உலக நாடுகளிலேயே மோசமாக பாதிக்கப்பட்டது அமெரி்க்காதான். இதுவரை 3.50 லட்சம் மக்களுக்கு மேல் கரோனாவில் உயிரிழந்துள்ளனர், 2 கோடி மக்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு மேல் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதி்க்கப்படுவதும், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக நாள்தோறும் லட்சக்கணக்கில் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரி்க்காவில் நேற்று 2.32லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,107 பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள தெற்குப்பகுதி நகரங்களில் கொரோனாவில் உயிரிழந்தவர்களை புதைக்க கல்லறைகளில் இடமில்லாமல் மனித உடல்கள் நாட்கணக்கில் காத்திருக்கின்றன.

லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள கான்டினென்டல் ஃபனரல் ஹோம் உரிமையாளர் மாக்டா மால்டோனாடோ கூறுகையில் “ நான் கடந்த 20 ஆண்டுகளாக இறுதிச்சடங்கு செய்யும் பணியில் இருக்கிறேன். என் வாழ்க்கையில் இதுபோன்ற சூழலை நான் பார்த்தது இல்லை, நடந்ததும் இல்லை.

கொரோனாவில் உயிரிழக்கும் உடல்களை என்னால் புதைக்க முடியாத அளவுக்கு தொடரந்து வந்து கொண்டே இருக்கின்றன. பலரிடம் உடலை எடுத்துச் செல்லுங்கள் கல்லறையில் இடமில்லை, உங்கள் குடும்ப உறுப்பினரை புதைக்க இடமில்லை எனச் சொல்வதற்கு மன்னிக்கவும் எனச் சொல்லிவிட்டேன்.

சராசரியாக நாள்தோறும் 30 உடல்களை கல்லறை அடுக்குகளில் இருந்து எடுத்து புதிய உடல்களை வைக்கிறேன். வழக்கமாக செய்யும் பணியைவிடஇது 6 மடங்கு அதிகமாகும். எங்களுக்கு வழி தெரியாமல் மனிதஉடல்களை குளிர்பதனப் பெட்டியில் காத்திருப்பில் வைத்திருக்கிறோம். இதற்காக கூடுதலாக 15 மீட்டர் குளிர்பதனப்பெட்டியை வாடகைக்கு எடுத்திருக்கிறேன்” எனத் தெரிவி்த்தார்.

california-funeral-homes-run-out-of-space-as-covid-19-rages

கலிபோர்னியா ஃபனரல் டைரக்டர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் இயக்குநர் பாப் ஆச்சர்மான் கூறுகையில் “ கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் காரணமாக, உடல்களை புதைக்கும், எரிக்கும் பணி தொடர்ந்து மெதுவாகியுள்ளது. வழக்கமாக ஒருவர் இறந்துவிட்டால் 2 நாட்களில் உடல்அடக்கம் நடந்துவிடும், ஆனால், இப்போது ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிறது.

எங்களால் உடல்களை பாதுகாக்க முடியவில்லை. இன்னும் மோசமான நாட்கள் எங்களை நோக்கி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

லாஸ்ஏஞ்சல்ஸ் கவுண்டியில் மட்டும் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் சராசரியாக நாள்தோறும் 2,500 பேர் உயிரிழந்து வருகின்றனர்.

அர்கனாஸ், லூசியானா, டெக்சாஸ், அரிசோனா, ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக சராசரியாக 3 ஆயிரம் பேருக்கும் மேல் புதிதாககரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் இன்னும் விடுமுறைக் காலம் முடியாததால், மக்கள் கூடும்போது, இன்னும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனாத்தொற்று – 40 ஆயிரத்தை நெருங்குகின்றது நோயாளர் எண்ணிக்கை !

நாட்டில் மேலும் 551 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 541 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய 10 பேர் சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36, 099 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 432 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

“புதிய வகை கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பைசர் தடுப்பூசிக்கு உள்ளது” – ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி ஜென்ஸ் ஸ்பான் 

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உட்பட பல நாடுகள் தடை செய்துள்ளன. இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கடந்த சில நாட்களுக்கு முன்னரே இங்கிலாந்து, அமெரிக்கா போன்று நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மார்டனா தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரஷியாவில் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவுவதால் தற்போதைய தடுப்பூசிகள் பயனளிக்காமல் செல்லலாம் என பரவலான கருத்துக்கள் நிலவி வந்தன. இந்நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே தற்போதைய புதிய கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய யூனியனில் உள்ள சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் நம்புவதாக ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தற்போதுவரை நமக்கு கிடைத்த தகவலின்படி, புதியவகை கொரோனா வைரஸ் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியில் (பைசர் தடுப்பூசி) எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. புதிய வகை கொரோனா வைரசையும் தற்போதுள்ள தடுப்பூசிகள் கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒக்ஸ்போர்ட்டின் கொரோனா தடுப்பூசி – “முதியோர்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது” !

கடந்த வருட இறுதியில் தொடங்கி படிப்படியாக உலகம் முழுவதும் பரவலடைந்துள்ள கொரோனா வைரஸினுடைய தாக்கத்தால் உலக அளவில் அதிகமாக முதியோர்களே பாதிக்கப்பட்டு இறந்து போகும் நிலை காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டோரை காக்கவும் உலகின் முன்னணி நாடுகள் பல கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியானது, “60 முதல் 70வயதானவர்களுக்கு ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வைரஸிலிருந்து அதிக ஆபத்தில் இருக்கும் வயதினரைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

560 ஆரோக்கியமான வயதுவந்த தன்னார்வலர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பின்னர் வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட சோதனைகளில் கொரோனா வைரஸை தடுப்பூசி நிறுத்துமா? என்பதை ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கின்றனர். இந்த முக்கியமான கட்டத்தின் ஆரம்ப முடிவுகள் எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஃபைசர்-பயோஎன்டெக், ஸ்பூட்னிக் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனைகளில் நல்ல முடிவுகளை பிரதிபலித்துள்ளன. கொவிட் தடுப்பூசியை வளர்ப்பதில் உள்ள சவால், ஒருவர் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் வைரஸுக்கு எதிராக போராட உடலைத் தூண்டுவதாகும்.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா உயிர்ப்பலி – மேலும் இருவர் மரணம் !

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.இன்று இதுவரை 03 புதிய மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது

இறுதியாக உயிரிழந்தவர்கள் கொழும்பை சேர்ந்த 40 வயது ஆண் என்றும் மற்றுமொருவர் களனிப் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இன்று இத்துடன் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் நேற்றையதினம் ஐந்து மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று மாத்திரம் இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 646 பேர் குணமாகிவீடுகளுக்கு திரும்பியதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரைக்குமான காலப்பகுதியில்கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10183ஆக உயர்ந்துள்ளது.