கொழும்பு துறைமுக நகரம்

கொழும்பு துறைமுக நகரம்

கொழும்பு துறைமுக நகரத்தில் தனியார் வைத்தியசாலை !

கொழும்பு துறைமுக நகரத்தில் தனியார் வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆசிரி போர்ட் சிட்டி ஹொஸ்பிட்டல் (தனியார்) கம்பனியால் 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டின் கீழ் கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்காக விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குதல் தொடர்பான வழிகாட்டல்)
கட்டளைகளின் 2(ஆ) இன் கீழ் குறித்த கருத்திட்டத்தை விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான தகைமைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த ஏற்பாடுகளின் கீழ் விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்காகவும், குறித்த கருத்திட்டத்தை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகமாக வர்த்தமானி அறிவித்தல் விதியொன்றின் மூலம் வெளியிட்ட பின்னர், குறித்த விதியை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“கொழும்பு துறைமுக நகரத்தில் பெட்டிக்கடைகளை அமைக்காமல் ஆரம்பத்தில் வகுத்த திட்டங்களை மாற்றமில்லாமல் செயற்படுத்த வேண்டும்.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

கொழும்பு துறைமுக நகர விடயத்தில் அரசாங்கம் தொழினுட்ப ரீதியில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட  வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான உண்மை, பொய் ஆகியவற்றை நாட்டு மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். 2002 ஆம் ஆண்டு  ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் மீண்டெழும் இலங்கை’ தொடர்பான கொள்கைக்கு அமைவாகவே துறைமுக நகரம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள அவசியமற்ற முனையங்கள்,கட்டிடங்கள் ஆகியவற்றை நீக்கி துறைமுகத்துக்குள் துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கு ஆரம்பத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது. தெற்கு துறைமுக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தெற்கு கடற் பகுதியில் இருந்து வடக்கு கடற் பகுதிக்கு மணல் இழுத்துச் செல்லும் வேகம் அதிகளவில் காணப்படுவதால் கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் மணல் மேடுகள் தோற்றம் பெறும் சூழல் காணப்படுவதாக தேசிய ஆராய்ச்சியாளர்கள்  குறிப்பிட்டதை தொடர்ந்து துறைமுகத்துக்கு அப்பாற்பட்ட வகையில்  கொழும்பு துறைமுக நகரம் உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

2014 ஆம் ஆண்டு இறுதி காலாண்டு பகுதியில் கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.அபிவிருத்தி பணிகள் தொடர்ந்ததன் பின்னர் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வறான பின்னணியில் 2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்ப்பட்டதன் பின்னர் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவை நியமித்தார்.

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி பணிகளை துறைமுக அதிகார சபை முன்னெடுக்க முடியாது என அந்த குழு அறிக்கை சமர்ப்பித்ததை தொடர்ந்து துறைமுக நகர நிர்மாண பணிகள் தொடர்பான அதிகாரங்கள் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு பொறுப்பாக்கப்பட்டது.எமது அமைச்சின் கீழ் அதிகாரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் 2014 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டன.

கொழும்பு துறைமுகத்தின் ஏகபோக உரிமை 2014 ஆம் ஆண்டு சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.இந்த நிலையை மாற்றி கொழும்பு துறைமுக நகரத்தின் முழு உரிமையையும்  நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறுப்பாக்கி நாட்டின் இறையாண்மையை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாத்தது என்பதை பகிரங்கமாக குறிப்பிட முடியும்.

முறையாக சுற்றாடல்  தரப்படுத்தல் ஏதும் இல்லாமல் தான் 2014 ஆம் ஆண்டு  கொழும்பு துறைமுக நகரத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுற்றாடல் தொடர்பில் தரப்படுத்தலை மேற்கொண்டு நிர்மாணப் பணிகளை முன்னெடுத்தோம்.முறையான சுற்றாடல் தரப்படுத்தலை மேற்கொள்ளாமலிருந்திருந்தால் ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு கட்டிடம் உட்பட கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் உள்ள பாரம்பரியமான கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும்.

2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 4 பிரதான முதலீட்டாளர்களை கொழும்பு துறைமுக நகரத்துக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். 52 நாள் அரசியல் நெருக்கடி, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஆகிய சம்பவங்களினால் அனைத்து முயற்சிகளும் பலவீனப்படுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு துரதிஷ்டவசமாக நாட்டை காக்க கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.இறுதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

இலங்கை வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. ஆகவே நாட்டுக்கு வரும் முதலீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.கொழும்பு துறைமுக நகரத்தில் பெட்டிக்கடைகளை அமைக்காமல் ஆரம்பத்தில் வகுத்த திட்டங்களை மாற்றமில்லாமல் செயற்படுத்த வேண்டும். கொழும்பு துறைமுக நகரத்துக்கு சீனா மாத்திரம் முதலிடவில்லை. இலங்கையும் அதிகம் நிதியை முதலிட்டுள்ளது.ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் தொழினுட்ப ரீதியில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றார்.