கோவிந்தன் கருணாகரன்

கோவிந்தன் கருணாகரன்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொது வேட்பாளர் பற்றிய நிலைப்பாடு – பின்னணியில் அரசியல் என்கிறார் கோவிந்தன் கருணாகரன் !

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொது வேட்பாளர் ஒருவர் கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்கின்ற எண்ணக்கருவை வெளியிட்டுள்ளமைக்குச் சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதிப் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் தமிழ் தேசிய பரப்பிலே இருக்கும் அனைவராலும் கொள்கை ரீதியாக முதலாவதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே வேட்பாளர் யார், எந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் மூவின மக்களும் கிட்டத்தட்ட சமனாக வாழும் ஒரு மாகாணம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிட்ட சில காலம் வடக்கு கிழக்கு என்ற பிரிவினைவாதம் சில அரசியல் வாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் தங்களது சுயலாப அரசியலுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டு பிரதேசவாதம் விதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக வடமாகாணத்தில் இருந்து பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் கிழக்கு மக்கள் அந்த பிரதேச வாதத்தில் சிக்குண்டு வாக்களிக்காமல் விடலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கூறியிருக்கலாம்.

ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் பிரதேச வாதத்துக்குள் சிக்குபட்டவர்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டத்தால் நிறுத்தப்பட்டது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் விசாரணைகள் !

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தலைமையில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மட்டக்களப்பில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் நடத்திய பிராந்திய விசாரணை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் அதிகாரிகளினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் பிரதேச செயலக அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதை நிறுத்துமாறு அவர்கள் கோரியிருந்தனர்.

காணாமல் போனவர்களுக்கு இழப்பீடாக பணம் தேவையில்லை, அவர்கள் எங்கிருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே உறவினர்கள் விரும்புவதாக கோவிந்தன் கருணாகரன் கூறினார்.

எவ்வாறாயினும் ஆர்ப்பாட்டம் காரணமாக இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் மட்டக்களப்பில் மூன்று நாட்களுக்கு விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் கிட்டத்தட்ட 270 வழக்குகளை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அதிகாரிகளின் பாதுகாப்பு கருதி மட்டக்களப்பில் விசாரணைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியிருந்தாலும், எதிர்காலத்தில் விசாரணைகள் தொடரும் என காணாமல் ஆகப்போர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த வலியுறுத்தினார்.

“எமது மக்களின்  வாழ்வுரிமை சார்ந்த விடயங்களை எடுத்துரைத்தால் எம்மை பிரிவினைவாதி, இனவாதி,பயங்கரவாதி என பேசுவது வேடிக்கையாக உள்ளது”  – கோவிந்தன் கருணாகரன்

“எமது மக்களின்  வாழ்வுரிமை சார்ந்த விடயங்களை எடுத்துரைத்தால் எம்மை பிரிவினைவாதி, இனவாதி,பயங்கரவாதி என பேசுவது வேடிக்கையாக உள்ளது”  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர்வளங்கள், மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எம்மை பிரிவினைவாதிகளாக, இனவாதிகளாக ,பயங்கரவாதிகளாக பார்க்காதீர்கள். எமது சார்ந்த, எமது பிரதேசம் சார்ந்த ,எமது மக்கள் சார்ந்த, அவர்களின் தேவைகள் சார்ந்த அவர்களின் வாழ்வுரிமை சார்ந்த விடயங்களை எடுத்துரைத்தால் எம்மை பிரிவினைவாதி, இனவாதி,பயங்கரவாதி, இவர்களை பாராளுமன்றத்திலிருந்து அகற்ற வேண்டுமென இந்த சபையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் உற்பட பலரும் உரையாற்றுகின்றீர்கள், இது எனக்கு வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றது .இது உங்களின் அறியாமையா? என சந்தேகப்படத் தோன்றுகின்றது.

தயவு செய்து உலக விடுதலைப்போராட்ட நாயகர்களின் வரலாற்றை இதய சுத்தியோடு உங்கள் அறிவுக்கண் திறந்து நோக்குங்கள். ஆயுதப்புரட்ச்சி மூலம் மக்கள் விடுதலையை நாடிய எத்தனையோ தலைவர்கள் காலப்போக்கில் ஜனநாயக வழி வந்தமையே உலக வரலாறு. உதாரணத்துக்கு நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத், ஹசன் டி டீரோ ஆகியோரைக் குறிப்பிட முடியும். எமது நாட்டில் கூட 1971 இல் ஆயுதம் தூக்கி பின்னர் ஜனநாயகவழி வந்த ஜே.வி.பி.யினரை அன்று பயங்கரவாதிகள் என்றே அழைத்தனர். இன்று அவர்கள் மீது அப்படி ஒரு வார்த்தை பிரயோகத்தை நீங்கள் எவரும் பிரயோகிப்பதில்லை.

ஆனால் ஆயுதமேந்தி பின்னர் ஆயுதத்தைக் கைவிட்டு வாக்குரிமை மூலம் இந்த உயரிய சபைக்கு வந்து நாம் உரையாற்றும்போது எம் மீது மட்டும் ஏன் உங்கள் குரோதம்? ஓர வஞ்சனை? ஏன் உங்கள் கண் மூடிய பார்வை? உங்கள் மனக்கதவை திறவுங்கள், உண்மையை உணருங்கள்” எனகுறிப்பிட்டுள்ளார் .