சமத்துவ கட்சி

சமத்துவ கட்சி

இரத்துச்செய்யப்பட்டது முருகேசு சந்திரகுமாரின் கட்சிப் பதிவு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான அரசியல் கட்சியின் பதிவு தேர்தல்கள் ஆணைக்குழுவால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 

சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி 3 வருடங்களுக்கு முன்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் முதல் இன்று வரை அந்தக் கட்சியின் கணக்கு அறிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை.

 

கணக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு 3 தடவைகள் கடிதம் அனுப்பியும் பதில் அளிக்காத காரணத்தினாலேயே தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு சமத்துவக் கட்சியின் பதிவை நீக்கியுள்ளது.

 

எம்பிலிப்பிட்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பின் பின்னர் 2024.08.26ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிட்ட 2399/14 இலக்க அரச இதழில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் சமத்துவக் கட்சியின் பெயர் நீக்கப்பட்டு 77 அரசியல் கட்சிகளின் பெயர்ப்பட்டியலே வெளியிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, சந்திரகுமாரின் கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வினால் பன்னாட்டு நிறுவனங்களுக்கே இலாபம்.” – மு. சந்திரகுமார்

“மக்களின் பூர்வீக வாழ்விடங்களை இல்லாதொழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும் தேவையற்ற ஒன்றே.” என முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை (12) வேரவில் பகுதியில் பத்தாவது நாளாக பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக தொடர்ந்தும் சுழற்சி முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற  பொது மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, அப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

பூநகரி பிரதேசத்தின் பொன்னாவெளி கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்கான மூலப்பொருளான சுண்ணக்கல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவுற்றுள்ளது. 

குறித்த நிறுவனமொன்றினால் கடற்கரை கிராமங்களான மேற்சொன்ன கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 300 மீற்றர் வரையான ஆழம் வரை சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இது மிகப்பெரும் ஆபத்தை விரைவில், கிராஞ்சி, வலைப்பாடு கிராம மக்களுக்கு உடனடியாகவும் ஏனைய அயல் கிராம மக்களுக்கு படிப்படியாகவும் பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது. பொதுமக்கள் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேறவேண்டிய நிலைமை உருவாகும்.

ஏனெனில், கடல் நீர் நிலத்தடி நீரில் கலந்து குறித்த பிரதேசத்தில் உள்ள நன்னீர் உவர் நீராக மாற்றமடையும். பின்னர் நிலம் உவராக மாறும். இதன்போது மக்கள் அங்கு வசிக்க முடியாத நிலை உருவாக்கும். மேலும் தற்போது கிராஞ்சி குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த பிரதேசத்தின் நிலத்தடி நீரை மூலமாக கொண்டே நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.  மக்களின் பூர்வீக வாழ்விடங்களை இல்லாதொழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும் தேவையற்ற ஒன்றே. அதனால் பன்னாட்டு நிறுவனங்கள்  நன்மை பெறுவார்களே தவிர  அந்த மக்கள் வாழ்விழந்து போவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.