‘ஏக்கிய ராஜ்யே எப்பா’ அப்பிட ஓன சமஷ்டி ராஜ்யே’ என சில தமிழ் கட்சிகள் இணக்கத்துக்கு வந்துள்ளன!
அநுரா தலைமையிலான அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்க ஒரு பகுதி தமிழ்க் கட்சிகள் தமக்குள் இணங்கிக் கொண்டனர்.
என்பிபியின் ‘’ஏக்கிய ராஜ்ய ஒற்றையாட்சி அரசியல் யாப்பை முழுமையாக நிராகரிக்கும் இவர்கள்’’ ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு சமஷ்டி ஆட்சி அடிப்படையிலான அரசியலமைப்பை கோருகின்றனர். அந்த வகையில் தமிழ் வெகுஜன அமைப்புக்களை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை 2016 இல் முன்னாள் எம்எபி பார்பெமிட் புகழ் சிசி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டு கலந்துரையாடல்களை தொடங்கப் போவதாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். இந்த முன்னெடுப்புக்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியே செய்து வருகின்றது. சமீப வாரங்களில் கஜேந்திரகுமார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாதிரித் தலைவர் சிவஞானம் சிறிதரனுடனும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கடைசி நம்பிக்கை நட்சத்திரமும் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனையும் சந்தித்து தமிழ்மக்களுக்கு சமஷ்டியை கொண்டுவரும் ஆயத்தங்களில் ஈடுபடுகிறார்கள்.
என்பிபி ஆட்சியை ஆட்டிப்படைக்க சர்வதேச சக்திகள் தமிழ் அரசியல் கட்சிகளை மீண்டும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வருவதாகவும் சில அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். குறிப்பாக இந்திய, அமெரிக்க தூதரகங்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு தமிழ் தரப்புக்களை காலத்திற்குக் காலம் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தமிழ் தரப்புக்களிடையே ஒற்றுமை வேண்டும் என்ற அழுத்தங்கள் சர்வதேசத்திடம் இருந்து வருவதால் இப்போது இவர்கள் பெயரளவில் இணைய முற்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் தேர்தலுக்கு முன் இணைந்து செயல்படுங்கள் என்று கேட்ட போது தங்கள் தங்கள் கட்சிகளுக்கு பத்து ஆசனங்கள் கிடைக்கும் என்று திரிந்தவர்கள் இப்போது மண் கவ்வியுள்ளனர். ‘மாட்டுக்கு ஊர் மாடு சொனால் கேட்காது டெல்லி மாடுகளும் வோஷிங்டன் மாடுகளும் சொன்னால் தான் கேட்கும் போல’ என்கிறார் அரசியல் விமர்சகர் த ஜெயபாலன்.
இச்சந்திப்புக்களின் போது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கோரும் வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டி முறைமைக்கான பொது வாக்கெடுப்பில் தமிழ் மக்களின் வாக்குகள் எவ்வளவு முக்கியம் எனும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
அரசு காணி விடுவிப்புகள், பாதை திறப்புகள் என்பனவற்றை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே தன்னிச்சையாக மேற்கொண்டு வருகின்றது தேசிய மக்கள் சக்தி. அரசியல் கைதிகள் விடுதலையும், பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கமும் அவ்வாறே நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைப்பது தொடர்பில் கிழக்கில் பாரிய அளவில் ஆதரவு கிடையாது. வன்னியில் உள்ள மலையகத் தமிழர்களோ, வடக்கில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கோ பெண்களுக்கோ யாழ் சைவ வேளாள ஆணதிக்க அரசியலில் இடமில்லை. இதற்குள் மட்டக்களப்பாரை கொண்டு வந்து அடிமையாக்குவதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? என்ற கேள்வியும் உள்ளது. இது எல்லாவற்றுக்கும் காஸாவிலும் லெபனானிலும் இனப்படுகொலை புரியும் அமெரிக்கா பிளஸ் நாடுகளையும் இந்தியாவையும் மத்தியஸ்துக்கு அழைப்பது இந்த ஆண்டிகள் மடம் கட்டுகின்ற கதையாகத்தான் முடியும் எனவும் த ஜெயபாலன் குறிப்பிட்டார்